பதிவு செய்த நாள்
12 மே2013
00:25

"அட்சய திருதியை'யை முன்னிட்டு, தங்கம் வாங்க, நகைக் கடைகளில், மக்கள் கூட்டம் அலைமோதுகிறது.வரும் திங்களன்று (நாளை), "அட்சய திருதியை' நாளில், தங்கம் வாங்கினால், தங்களிடம் உள்ள செல்வம் மேலும் பெருகும் என்ற நம்பிக்கை நிலவுகிறது.தங்கம் விலை, பல மடங்கு உயர்ந்த போதும், "அட்சய திருதியை' அன்று, தங்கம் வாங்குவோர் எண்ணிக்கை, பல ஆண்டுகளாக அதிகரித்து வருகிறது.
தினமும், 1,200 கி@லா:தொடர்ந்து உயர்ந்து வந்த தங்கத்தின் விலை, கடந்த ஏப்ரலில், கடும் வீழ்ச்சிஅடைந்தது. தற்போது, தமிழகத்தில், நாள்தோறும், சராசரியாக, புதிய மற்றும் பழைய தங்கம் விற்பனை, 1,200 கிலோ என்ற அளவில் உள்ளது. தமிழகத்தில் விற்பனையாகும் மொத்த தங்கத்தில், 60 -70 சதவீதம், சென்னையில் மட்டும் விற்பனையாகிறது.
சென்ற, 2011ம் ஆண்டு, "அட்சய திருதியை' அன்று, சென்னையில், 154 கோடி ரூபாய் (ஒரு கிலோ தங்கம் - 22 லட்சம் ரூபாய்) மதிப்பிலான, 700 கிலோ தங்கம் விற்பனையானது. 2012ல், அளவின் அடிப்படையில் தங்கம் விற்பனை, இதே அளவிற்கே இருந்தது. இதன் மதிப்பில் மட்டும் மாற்றம் (ஒரு கிலோ தங்கம் - 28 லட்சம் ரூபா#) காணப்பட்டது.
சலுகைகள்:தற்போது, ஒரு கிலோ தங்கத்தின் விலை, 24 - 25 லட்சம் ரூபாய் என்ற அளவில் உள்ளது. கடந்த ஆண்டை விட, நடப்பாண்டு தங்கத்தின் விலை வெகுவாக குறைந்துள்ளது. பல நிறுவனங்கள், மக்களை கவரும் வகையில், போட்டி போட்டுக் கொண்டு, சலுகைகளை வழங்கி வருகின்றன. இதனால், "அட்சய திருதியை' அன்று, தங்கம் விற்பனை, சராசரி அளவை விட, 20 சதவீதம் அதிகரிக்கும் என, எதிர்பார்க்கப்படுகிறது.விலை குறைவு மற்றும் "அட்சய திருதியை' போன்றவற்றால், மக்கள் அதிகளவில் தங்கம் வாங்கி வருகின்றனர். இதனால், தமிழகம் முழுவதும் உள்ள நகைக் கடைகளில், மக்கள் கூட்டம் அலைமோதுகிறது.
இதுகுறித்து, சென்னை தங்கம் மற்றும் வைர நகை வியாபாரிகள் சங்கத் தலைவர் ஜெயந்திலால் சலானி கூறியதாவது:நாடு முழுவதும், "அட்சய திருதியை' வெகு சிறப்பாகக் கொண்டாடப் படுகிறது. கடந்த காலத்துடன் ஒப்பிடும்போது, தற்போது, ஒட்டுமொத்த அளவில், தங்கத்தின் விலை அதிகரித்துள்ளது. வரும் நாட்களில், இதன் விலை உயர வாய்ப்புள்ளது. "அட்சய திருதியை' அன்று விற்பனையாகும் மொத்த தங்கத்தில், 70 சதவீதம் அளவிற்கு, ஏற்கனவே முன்பதிவு நடந்துள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.@பாலீஸ் பாதுகாப்பு:"அட்சய திருதியை'யை முன்னிட்டு, சென்னையில், நகைக் கடைகள் அதிகளவில் உள்ள, தி.நகர் மற்றும் நகரின் முக்கிய பகுதிகளில், 500க்கும் மேற்பட்ட போலீசார் கூடுதலாக பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர்.சென்னையைப் பொறுத்தவரை, தி.நகர், புரசைவாக்கம், பாரிமுனை என்.எஸ்.சி., போஸ் சாலை உள்ளிட்ட பகுதிகளில், தங்க நகைக் கடைகள் அதிகளவில் இயங்கி வருகின்றன. "அட்சய திருதியை' அன்று, இப்பகுதிகளில் மக்கள் கூட்டம் அலை மோதும்.இதைப் பயன்படுத்தி, சமூக விரோதிகள் கூட்டத்திற்குள் நுழைந்து, திருட்டு, செயின் பறிப்பு உள்ளிட்ட நடவடிக்கைகளில் ஈடுபடுவதை கட்டுப்படுத்த, இப்பகுதிகளில் போலீசாரின் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.ஏற்கனவே, தி.நகர் பகுதிகளில், சில இடங்களில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. இவ்வாறு போலீசார் தெரிவித்தனர்.
தங்கம் விற்பனை மந்தமாகுமா?அட்சய திருதியை தினத்தன்று, தங்கம் விற்பனை, எதிர்பார்த்த அளவிற்கு இருக்குமா என்ற ஐயப்பாடும் எழுந்து உள்ளது. கடந்த ஏப்ரல் மாதம், 12 -16 தேதிகளில் தங்கம் விலை, மிகப் பெரிய அளவில் சரிவடைந்தது. 10 கிராம் தங்கம், 25 ஆயிரம் ரூபாயாக குறைந்தது.இதை சாதகமாக பயன்படுத்தி, 80 சதவீத அளவிற்கான தங்கம் ஏற்கெனவே வாங்கப்பட்டு விட்டது. எனவே, அட்சய திருதியை தினத்தன்று, தங்க ஆபரணங்கள் வாங்குவோர் எண்ணிக்கை குறைவாகவே இருக்கும் என, நகை கடை ஊழியர் ஒருவர் தெரிவித்தார்.
ஒரு சிலர், அட்சய திருதியைக்கு பிறகு தங்கம் விலை குறைய வாய்ப்புள்ளதாக கருதி, தங்கம் வாங்குவதை தள்ளிப் போட்டுள்ளனர்.மேலும் பலர், ஏற்கனவே, அட்சய திருதியை அன்று தங்கம் வாங்குவதற்காக முன்பதிவு செய்துள்ளனர்.அதே சமயம், ஒரு சில வர்த்தகர்கள், நாடு முழுவதும் அட்சய திருதியையை முன்னிட்டு, தங்கம் விற்பனை, 25 சதவீதம் வளர்ச்சி கண்டு, 100 டன்னாக உயரும் என, நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.- நமது நிருபர் -
மேலும் கம்மாடிட்டி செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|