பதிவு செய்த நாள்
21 மே2013
01:25

புதுடில்லி:உலக நாடுகள், பொருளாதார மந்த நிலையில் இருந்து, மீள்வதில் ஏற்பட்டுள்ள இடையூறுகள் காரணமாக, அலுமினியத்திற்கான தேவை குறைந்துள்ளது. அதே சமயம், அலுமினியம் உற்பத்தி அதிகரித்து, கையிருப்பும் உயர்ந்துள்ளதால், ஏற்கனவே வீழ்ச்சி கண்டுள்ள அதன் விலை மேலும் குறைய வாய்ப்புள்ளது.
சர்வதேச அளவில், மிக அதிகமாக பயன்படுத்தும் அடிப்படை உலோகங்களில், அலுமினியம் குறிப்பிடத்தக்க பங்களிப்பை கொண்டுள்ளது. கட்டுமானம், மின்சாரம், போக்குவரத்து உள்ளிட்ட பல்வேறு துறைகளில் அலுமினியம் பயன்பாடு உள்ளது.சீனா:உலகில், அலுமினியம் உற்பத்தி மற்றும் பயன்பாட்டில், சீனா முதலிடத்தில் உள்ளது. சர்வதேச அலுமினியம் உற்பத்தியில், சீனாவின் பங்களிப்பு, 40 சதவீதத்திற்கு மேலாகவும், அலுமினியம் பயன்பாட்டில், 45 சதவீதம் என்ற அளவிற்கும் உள்ளது.அதே சமயம், அலுமினியம் உற்பத்தி மற்றும் பயன்பாட்டில், இந்தியாவின் பங்களிப்பு, 4 - 5 சதவீதம் என்ற அளவிற்கு குறைந்து காணப்படுகிறது.இந்தியாவின் அலுமினியம் பயன்பாட்டில், மின் துறை, 39 சதவீத பங்களிப்புடன் முதலிடத்தில் உள்ளது. அலுமினியம் மிகச் சிறந்த மின் கடத்தியாகவும், துரு பிடிக்காத தன்மை கொண்டதாகவும் உள்ளதால், தரைக்கடியில் அலுமினியம் மின் கம்பிகள் பயன்படுத்தப்படுகின்றன.
அலுமினியம் பயன்பாடு, இந்திய போக்குவரத்து துறையில், 18 சதவீதமாகவும், இயந்திரங்கள் மற்றும் பேக்கேஜிங் துறைகளில், முறையே, 15 மற்றும் 9 சதவீதமாகவும் உள்ளன.சர்வதேச அலுமினியம் உற்பத்தி, கடந்த, 2008ம் ஆண்டு முதல், ஆண்டுக்கு சராசரியாக 3.07 வளர்ச்சி கண்டு, 2012ம் ஆண்டு, 4.61 கோடி டன்னாக உயர்ந்துள்ளது.சீனாவை தொடர்ந்து, அலுமினியம் உற்பத்தியில் ரஷ்யா (8.9 சதவீதம்), கனடா (6.6 சதவீதம்), ஐரோப்பிய கூட்டமைப்பு நாடுகள் (6.4 சதவீதம்) ஆகியவை உள்ளன.உலகளவிலான அலுமினியம் பயன்பாடு, கடந்த 2008ம் ஆண்டு முதல் 2012ம் ஆண்டு வரை, ஆண்டுக்கு, 4.1 சதவீதம் வளர்ச்சி கண்டு, 4.50 கோடி டன்னாக உயர்ந்துள்ளது.
அமெரிக்கா:இதில், சீனாவிற்கு அடுத்த இடத்தில், அமெரிக்கா 10.4 சதவீத பங்களிப்புடன் இரண்டாவது இடத்தை பிடித்துள்ளது. அடுத்த இடங்களில், ஜப்பான் (4.5 சதவீதம்), இந்தியா (3.9 சதவீதம்) ஆகியவை உள்ளன.அலுமினியம் உற்பத்தி வளர்ச்சியை விட, அதன் பயன்பாட்டு வளர்ச்சி குறைவாக உள்ளதை அடுத்து, அதன் கையிருப்பு அதிகரித்துள்ளது.அதே சமயம், நடப்பாண்டு, சர்வதேச நாடுகள், பொருளாதார மந்தநிலையில் இருந்து மீள்வது, எதிர்பார்த்ததை விட, தாமதமாகும் என, பொருளாதார நுண்ணாய்வு அமைப்பு (இ.ஐ.யு.,) மதிப்பிட்டு உள்ளது.
ஐ@ராப்பா:இதன் காரணமாக, சீனா மற்றும் ஐரோப்பிய கூட்டமைப்பு நாடுகளில், அலுமினியம் பயன்பாடு, குறையும் என்று இந்த அமைப்பு தெரிவித்துள்ளது. அதே சமயம், அலுமினியம் உற்பத்தி சீராக இருக்கும் என்பதால், உலக நாடுகளிடம் அதன் கையிருப்பு, 12 லட்சம் டன்னாக உயரும் என, எதிர்பார்க்கப்படுகிறது.இதன் விளைவாக, அலுமினியம் விலை மேலும் குறையும் என, இ.ஐ.யு., வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.மதிப்பீடு:கடந்த, 2011ம் ஆண்டுடன் ஒப்பிடும்போது, சென்ற 2012ம் ஆண்டு துவக்கத்தில், ஒரு டன் அலுமினியம் விலை, 15 சதவீதம் குறைந்து, 2,053 டாலராக சரிவடைந்தது.இது, ஜூன் - ஆகஸ்ட் வரையிலான காலத்தில், மேலும் வீழ்ச்சி கண்டு, 2,000 டாலராக குறைந்தது.
இந்நிலையில், நடப்பு ஆண்டு துவக்கத்தில் இருந்து, அலுமினியம் விலை, 10 சதவீதம் சரிவடைந்துள்ளது. சென்ற ஏப்ரல் மாதம் ஒரு டன் அலுமினியம் விலை, 1,818 டாலராக குறைந்தது.இது, மேலும் குறைய வாய்ப்புள்ளதாக, இ.ஐ.யு., மதிப்பிட்டு உள்ளது.
இந்தியாவில் தனி நபர் பயன்பாடு:இந்தியாவில், தனி நபர் அலுமினியம் பயன்பாடு, ஆண்டுக்கு, 1.20 கிலோ என்ற அளவில் உள்ளது. இது, சீனா மற்றும் அமெரிக்காவில், முறையே, 10.6 கிலோ மற்றும், 12.4 கிலோவாக உள்ளது.அலுமினியம் தயாரிக்க தேவையான பாக்சைட் வளம் அதிகம் உள்ள நாடுகளில், இந்தியா 5வது இடத்தில் உள்ளது. இதையடுத்து, வரும் 2017ம் ஆண்டுக்குள், அலுமினியம் உற்பத்தியை, 17 லட்சம் டன்னில் இருந்து, 47 லட்சம் டன்னாக உயர்த்த இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
மேலும் பொது செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|