பதிவு செய்த நாள்
23 மே2013
00:17

கோவை:கோவையில் நடந்த, வால்பாறை தேயிலை தோட்ட தொழிலாளர்களின் சம்பள உயர்வு தொடர்பான பேச்சுவார்த்தை, எந்த முடிவும் எட்டப்படாமல் முடிவடைந்தது.
தினக்கூலி:கோவை மாவட்டம், வால்பாறையில் எட்டு நிறுவனங்களின் தேயிலை எஸ்டேட்களில், 30 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தேயிலை தோட்ட தொழிலாளர்கள் பணிபுரிகின்றனர். தொழிலாளர்களுக்கு, தினக்கூலியாக, 162 ரூபாய் வழங்கப்படுகிறது. இந்நிலையில், கடந்த ஏப்., 24 முதல், தினக்கூலியாக, 185.40 ரூபாய் வழங்க அரசு உத்தரவிட்டுள்ளது. தொழிலாளர்களின் சம்பளத்தில் மூன்று மாதங்களுக்கு ஒருமுறை, அகவிலைப்படியை உயர்த்த வேண்டும். இதன்படி, வரும் ஜூலை 1ம் தேதி, அகவிலைப்படி உயர்த்தப்பட வேண்டும்.
மேலும், சம்பள ஒப்பந்தம் ஏற்படுத்தப்பட்டு, ஜூன் 14ம் தேதியுடன் ஐந்தாண்டுகள் நிறைவடைவதால், புதிதாக சம்பளம் நிர்ணயிக்க வேண்டும். கோவை ஏ.டி.டி., காலனியில் உள்ள தமிழ்நாடு தேயிலை தோட்ட அதிபர்கள் சங்கத்தில், இதற்கான பேச்சுவார்த்தை நடைபெற்றது.இதில், வால்பாறை எம்.எல்.ஏ., ஆறுமுகம், தமிழ்நாடு தேயிலை தோட்ட அதிபர்கள் சங்க பொறுப் பாளர்கள், எட்டு நிறுவனங்களின் மேலாளர்கள், தொழிற்சங்க நிர்வாகிகள் பங்கேற்றனர்.
அகவிலைபடி:தொழிற்சங்க நிர்வாகிகள் தரப்பில் கூறுகையில்,"தேயிலை தோட்ட தொழிலாளர்களுக்கு, தினக்கூலியாக, 200 ரூபாய் வழங்க வேண்டும். மூன்று மாதங்களுக்கு ஒருமுறை உயர்த்தப்படும் அகவிலைப்படியை, சம்பளத்துடன் சேர்த்து, பணப்பலன் வழங்க வேண்டும்.தொழிலாளர்களின் சம்பளம் மூன்று ஆண்டுக்கு ஒருமுறை நிர்ணயிக்கப்பட்டு வந்தது. கடந்த 2008 முதல், ஐந்தாண்டுக்கு ஒருமுறை சம்பளம் நிர்ணயிக்கவும், அகவிலைப்படியை சம்பள விகிதத்தில் சேர்க்காமல் பிரித்து வழங்கவும் ஏற்படுத்திய ஒப்பந்தத்தை மாற்றி அமைக்க வேண்டும்' என, தெரிவிக்கப்பட்டது.
தேயிலை தோட்ட உரிமையாளர்கள் தரப்பில்,"அகவிலைப்படிக்கு பணப்பலன் வழங்க முடியாது. தற்போது, 185.50 ரூபாய் சம்பளம் வழங்கப்படுகிறது. புதிதாக குறைந்தபட்ச சம்பளம், 194 ரூபாயாக நிர்ணயிக்க முடியும். 2002ம் ஆண்டு நிலுவை சம்பளத்தில், 500 ரூபாய் மட்டுமே வழங்க முடியும்' என, தெரிவிக்கப்பட்டது.தொழிற்சங்க நிர்வாகிகள் பேசுகையில்,தினக்கூலியாக,198 ரூபாய்க்கு குறைவாக நிர்ணயிக்க அனுமதிக்க மாட்டோம் அகவிலைப்படியை சம்பளத்துடன் சேர்த்து, கணக்கிட்டு பணப்படி வழங்க வேண்டும். நிலுவை சம்பளம்1,200 ரூபாய்க்கு கீழ் குறைக்க முடியாது' என, வலியுறுத்தப்பட்டது. இரு தரப்பு பேச்சில், இறுதி முடிவு ஏற்படாததால், மறு தேதி குறிப்பிடாமல் பேச்சு வார்த்தை ஒத்தி வைக்கப்பட்டது.
அரசுக்கு எதிர்ப்பு:வால்பாறை தேயிலை தோட்ட தொழிலாளர்களுக்கு 2008ல், குறைந்த பட்ச தினக்கூலியாக, 104 ரூபாய் அறிவிக்கப்பட்டது. ஆண்டுக்கு நான்கு முறை அகவிலைப்படி உயர்த்தும் போது, ஐந்தாண்டு நிறைவில், 2013ல் , 224 ரூபாய் சம்பளம் வழங்க வேண்டும். ஆனால், தற்போது, 162 ரூபாய் மட்டுமே வழங்கப்படுகிறது.
அரசின் அறிவிப்பில், 185.40 ரூபாய் மட்டுமே வலியுறுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில், அரசின் செயல்பாடுக்கு எதிர்ப்பு தெரிவித்தும், முறையாக வழங்க வேண்டிய, 224 ரூபாயை பெற்றுத்தர அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என, கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
மேலும் பொது செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|