பதிவு செய்த நாள்
30 மே2013
01:32

உலோக கழிவிற்கு சங்க வரி விதிக்கப்பட்டதால், அவற்றை பயன்படுத்தும் வார்ப்பட நிறுவனங்களின் ஏற்றுமதி பாதிக்கப்பட்டு, 11 ஆயிரம் கோடி ரூபாய் அளவிற்கு இழப்பு ஏற்படும் என, மதிப்பிடப்பட்டுள்ளது.
பாதிப்பு
மத்திய அரசு, மே மாதம், 8ம் தேதி முதல் இறக்குமதி செய்யப்படும், கழிவு அலுமினியம், ஸ்டெயின்லெஸ் ஸ்டீல், உருக்கு பொருட்களுக்கு, 2.5 சதவீதம் சங்க வரி விதித்துள்ளது. பித்தளை கழிவுகளின் இறக்குமதிக்கு, 4சதவீதம் வரி விதிக்கப்பட்டுள்ளது.இதற்கு முன்னர், இவ்வகை கழிவுகளுக்கு, இறக்குமதி வரியில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டு இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.தற்போதைய வரி விதிப்பால், மேற்கண்ட கழிவு பொருட்களை மூலப் பொருட்களாக கொண்டு செயல்படும், வார்ப்படசாதனங்களை தயாரிக்கும் நிறுவனங்கள் பெரும் பாதிப்புக்கு உள்ளாகி உள்ளன.
இந்தியாவில், ஆண்டுக்கு, 10 டன் அளவிற்கு வார்ப்பட பொருட்களுக்கான தேவை உள்ளது. ஆனால், அதற்கேற்ப உலோகக் கழிவுகள் கிடைப்பதில்லை. இதனால், வளர்ந்த நாடுகளில் இருந்து, பெருமளவு உலோக கழிவுகள் இறக்குமதி செய்யப்படுகின்றன.இந்நிலையில், அலுமினியம், உருக்கு உள்ளிட்ட கழிவுகளுக்கு, மத்திய அரசு, இறக்குமதி வரி விதித்திருப்பது, வார்ப்பட தொழில் நிறுவனங்களுக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.
இது போன்ற கழிவுப் பொருட்களின் இறக்குமதிக்கு, பல்வேறு வளரும் நாடுகளில் வரி விதிப்பு இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.உருக்கு கழிவுகளுக்கு சங்க வரி விதிக்கப்பட்டுள்ளதால், உலகசந்தையில், சீனா, தைவான் போன்ற நாடுகளின் கடுமையான போட்டியை, இந்திய வார்பட நிறுவனங்கள் எதிர்கொள்வது மிக கடினமாக இருக்கும் என, வார்ப்பட தகவல் மைய அதிகாரி, ஏ.கே. ஆனந்த் தெரிவித்தார்.அவர் மேலும் கூறியதாவது:
மேற்கத்திய நாடுகளின் பொருளாதார சுணக்க நிலையால், ஏற்கனவே, இந்திய வார்ப்பட நிறுவனங்களின், ஏற்றுமதி வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளது.உள்நாட்டிலும், தொழில் துறையில் ஏற்பட்டுள்ள மந்த நிலையால், வார்ப்பட பொருட்களுக்கான தேவை குறைந்து உள்ளது. நடப்பாண்டு தொடக்கத்தில் தான், வார்ப்பட பொருட்களுக்கான தேவை படிப்படியாக உயர துவங்கியுள்ளது.
வேலைவாய்ப்பு
அடிப்படை உலோகத்தின் விலை, டன்னுக்கு, 300-350 டாலர் என்ற அளவில் அதிகரித்து காணப்படுகிறது. இதனுடன் ஒப்பிடும் போது, உலோக கழிவுகளை கொண்டு, குறைந்த செலவில் வார்ப்பட பொருட்களை தயாரிக்க முடிகிறது.தாய்லாந்தை சேர்ந்த வார்ப்பட நிறுவனங்களுக்கு, அலுமினியம் கழிவுகளின் இறக்குமதிக்கு, வரி விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. இந்தியாவுடன் ஒப்பிடும் போது, அந்நாட்டில், குறைந்த செலவில், மின்சாரம், நிதி உதவி ஆகியவையும் அந்நிறுவனங்களுக்கு வழங்கப்படுகின்றன.இந்நிலையில், அலுமினியம், உருக்கு உள்ளிட்ட கழிவுகளின் இறக்குமதிக்கு, வரி விதிக்கப்பட்டுள்ளதால், வார்ப்பட தொழிலை விட்டு பல சிறிய நிறுவனங்கள் வெளியேறும் சூழல் உருவாகும். இதனால், பல லட்சம் பேரின் வேலை வாய்ப்பும் பறிபோகும். இவ்வாறு அவர் கூறினார். கடந்த, 2009-10ம் நிதியாண்டில், நாட்டின் வார்ப்பட ஏற்றுமதி, 6,673 கோடி ரூபாயாக இருந்தது. இது, 2010-11ம் நிதியாண்டில், 8,729 கோடியாகவும், 2011-12ம் நிதியாண்டில், 11,745 கோடியாகவும் இருந்தது.
ஏற்றுமதி
கடந்த, 2012-13ம் நிதியாண்டில், இந்திய நிறுவங்களின் வார்ப்பட பொருட்கள் ஏற்றுமதி, 11 ஆயிரம் கோடி ரூபாயாக இருக்கும் என, மதிப்பிடப்பட்டு உள்ளது.மேலும், சென்ற, 2010-11ம் நிதியாண்டில், தாய்லாந்து நாட்டில் இருந்து, நம்நாடு, 45,405 டன் அலுமினிய கழிவுகளை இறக்குமதி செய்துள்ளது.
மேலும் பொது செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|