பதிவு செய்த நாள்
09 ஜூன்2013
00:28

புதுடில்லி:நடப்பு 2013-14ம் நிதியாண்டின், முதல் இரு மாத காலத்தில் (ஏப்., - மே), நாட்டின் முக்கிய துறைமுகங்கள் கையாண்ட சரக்கு, 9.15 கோடி டன்னாக குறைந்து உள்ளது.இது, கடந்த நிதியாண்டின் இதே இரு மாதங்களில் கையாளப்பட்ட (9.41 கோடி டன்) சரக்கின் அளவை விட, 2.74 சதவீதம் சரிவு என, இந்திய துறைமுகங்கள் கூட்டமைப்பு வெளியிட்டுள்ள, தற்காலிக புள்ளிவிவரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.சுணக்க நிலை:சர்வதேச அளவில் ஏற்பட்டுள்ள பொருளாதார சுணக்க நிலையால், நம் நாட்டின் ஏற்றுமதி குறைந்து உள்ளது. நடப்பு நிதியாண்டின் முதல் இரு மாதங்களிலும், ஏற்றுமதி குறைந்துள்ளதையடுத்து, நாட்டின் முக்கிய துறைமுகங்கள் கையாண்ட சரக்கின் அளவு சரிவடைந்துள்ளதாக தெரியவந்து உள்ளது.
உள்நாட்டில், 13 பெரிய துறைமுகங்கள் உள்ளன. இவற்றுள், ஐந்து துறைமுகங்கள் கையாண்ட சரக்கின் அளவு அதிகரித்துள்ளது. அதேசமயம், ஏனைய எட்டு துறைமுகங்கள் கையாண்ட சரக்கின் அளவு குறைந்துள்ளது.கோல்கட்டாவில், இரண்டு பெரிய துறைமுகங்கள் உள்ளன. இவற்றுள் கோல்கட்டா டாக் சிஸ்டம் கையாண்ட சரக்கின் அளவு, கணக்கீட்டு மாதங்களில், 5.46 சதவீதம் வளர்ச்சி கண்டு, 17.41 லட்சம் டன்னிலிருந்து, 18.36 லட்சம் டன்னாக உயர்ந்து உள்ளது.
அதேசமயம், ஹால்டியா டாக் காம்ப்ளக்ஸ் கையாண்ட சரக்கின் அளவு, 0.68 சதவீதம் குறைந்து, 45.54 லட்சம் டன்னிலிருந்து, 45.23 லட்சம் டன்னாக சரிவடைந்து உள்ளது.ஒட்டு மொத்த அளவில், இவ்விரு துறைமுகங்கள் கையாண்ட சரக்கின் அளவு, 1.02 சதவீதம் உயர்ந்து, 62.95 லட்சம் டன்னிலிருந்து, 63.59 லட்சம் டன்னாக அதிகரித்துள்ளது.பரதீப் துறைமுகம்:கணக்கீட்டு காலத்தில், பரதீப் துறைமுகம் கையாண்ட சரக்கின் அளவு, 42.36 சதவீதம் வளர்ச்சி கண்டு, 81.14 லட்சம் டன்னிலிருந்து, 1.16 கோடி டன்னாக அதிகரித்துள்ளது.
விசாகப்பட்டினம் துறைமுகம் கையாண்ட சரக்கின் அளவு, 1.42 சதவீதம் சரிவடைந்து, 1.01 கோடி டன்னிலிருந்து, 99.86 லட்சம் டன்னாக குறைந்து உள்ளது.தமிழகத்தில் மூன்று பெரிய துறைமுகங்கள் உள்ளன. இவற்றுள், எண்ணூர் துறைமுகம் நிறுவன அளவில் செயல்பட்டு வருகிறது. கணக்கீட்டு மாதங்களில், இத்துறைமுகம் கையாண்ட சரக்கின் அளவு, 44.04 சதவீதம் அதிகரித்து, 29.02 லட்சம் டன்னிலிருந்து, 41.80 லட்சம் டன்னாக வளர்ச்சி கண்டுள்ளது.
சென்னை துறைமுகம்:சென்னை துறைமுகம் கையாண்ட சரக்கின் அளவு, 3.35 சதவீதம் குறைந்து, 87.34 லட்சம் டன்னிலிருந்து, 84.41 லட்சம் டன்னாக சரிவடைந்துள்ளது.தூத்துக்குடி வ.உ.சிதம்பரனார் துறைமுகம் கையாண்ட சரக்கின் அளவு, 6.52 சதவீதம் குறைந்து, 47.36 லட்சம் டன்னிலிருந்து, 44.27 லட்சம் டன்னாக சரிவடைந்துள்ளது.கொச்சி துறைமுகம் கையாண்ட சரக்கின் அளவு, கணக்கீட்டு மாதங்களில், 2.31 சதவீதம் வளர்ச்சி கண்டு, 33.71 லட்சம் டன்னிலிருந்து, 34.49 லட்சம் டன்னாக அதிகரித்துள்ளது.
அதே போன்று, புதிய மங்களூர் துறைமுகம் கையாண்ட சரக்கின் அளவு, 19.19 சதவீதம் அதிகரித்து, 55.82 லட்சம் டன்னிலிருந்து, 66.53 லட்சம் டன்னாக வளர்ச்சி கண்டுள்ளது.மர்மகோவா துறைமுகம் கையாண்ட சரக்கின் அளவு, 77.71 சதவீதம் வீழ்ச்சி கண்டு, 84.10 லட்சம் டன்னிலிருந்து, 18.75 லட்சம் டன்னாக சரிவடைந்துள்ளது.
மும்பை துறைமுகம்:மும்பை துறைமுகம் கையாண்ட சரக்கின் அளவு, 19.16 சதவீதம் குறைந்து, 1.08 கோடி டன்னிலிருந்து, 87.34 லட்சம் டன்னாக சரிவடைந்து உள்ளது.ஜவகர்லால் நேரு போர்ட் டிரஸ்ட் (ஜே.என்.பி.டி.,) கையாண்ட சரக்கின் அளவு, 7.22 சதவீதம் குறைந்து, 1.13 கோடி டன்னிலிருந்து, 1.05 கோடி டன்னாக குறைந்துள்ளது.மதிப்பீட்டு மாதங்களில், கண்ட்லா துறைமுகம் கையாண்ட சரக்கின் அளவு, 12.12 சதவீதம் வளர்ச்சி கண்டு, 1.37 கோடி டன்னிலிருந்து, 1.54 கோடி டன்னாக அதிகரித்து உள்ளது என, இந்திய துறைமுகங்கள் கூட்டமைப்பு வெளியிட்டுள்ள தற்காலிக புள்ளிவிவரத்தில் மேலும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
மேலும் பொது செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|