பதிவு செய்த நாள்
11 ஜூன்2013
14:16

நாமக்கல்: கறிக்கோழி விலை, கடுமையாக உயர்ந்துள்ளது. நாமக்கல் மண்டலத்தில், 1,100 கோழிப்பண்ணைகள் உள்ளன. அதன்மூலம் நாள்தோறும், மூன்று கோடி முட்டை உற்பத்தி செய்யப்படுகிறது. உற்பத்தி செய்யப்படும் முட்டை சத்துணவு திட்டத்துக்கும், தமிழகம், கேரளா மாநிலங்களுக்கு அனுப்பப்படுகிறது. வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்படுகிறது. கோழித்தீவன தயாரிப்புக்கு பயன்படுத்தப்படும் மக்காச்சோளம், சோயா, தவிடு, கடுகு புண்ணாக்கு, கருவாடு போன்றவற்றின் விலை, கடுமையாக உயர்ந்துள்ளது. அதன் எதிரொலியாக, ஒரு முட்டை உற்பத்தி செய்ய, 320 காசு செலவு பிடிப்பதாக, கோழிப்பண்ணையாளர்கள் தெரிவித்தனர்.
இதனிடையே, முட்டை உற்பத்தி, உயர்ந்துள்ளதால், விலை சரியத் துவங்கியது. சிறு பண்ணையாளர்கள், பண்ணைகளை மூடினர். இப்பிரச்னைக்கு, தீர்வு காணும் வகையில், 70 வாரம் வரை, முட்டை உற்பத்திக்கு பயன்படுத்தப்படும் கோழிகளை, 52 வது வாரத்திலேயே, இறைச்சிக்கு விற்க முடிவு செய்யப்பட்டது. அதனால், முட்டை உற்பத்தி குறைந்து, விலை உயரத் துவங்கியது. அதன்படி, மே மாதம் முதல் முட்டை விலை, ஏற்றம் கண்டு வருகிறது. நேற்றைய நிலவரப்படி, முட்டை, 369 காசாக இருந்தது. வரும் வாரங்களிலும், முட்டை விலை, மேலும் உயரும் என, பண்ணையாளர்கள் தெரிவித்தனர். குறுகிய காலத்தில், முட்டைக்கோழிகள், இறைச்சிக்கு விற்கப்படுவதால், முட்டை கோழிக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. நேற்றைய நிலவரப்படி, ஒரு கிலோ முட்டைக் கோழி, 66 ரூபாய் என, உயர்ந்திருந்தது. இந்த விலையேற்றத்தால், சில்லரை விற்பனையில், ஒரு கிலோ முட்டைக் கோழி, 100 ரூபாய் வரை, விற்பனை செய்ய வாய்ப்புள்ளது என, கோழிப் பண்ணையாளர்கள் தெரிவித்தனர்.
கறிக்கோழி விலையும் உயர்ந்துள்ளது. பல்லடத்தை தலைமையிடமாக கொண்டு கறிக்கோழி உற்பத்தியாளர் ஒருங்கிணைப்புக் குழு செயல்பட்டு வருகிறது. அங்கு நேற்றைய நிலவரப்படி, ஒரு கிலோ கறிக்கோழி, 90 ரூபாய் என, நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. நேற்று ஒரே நாளில், 10 ரூபாய் உயர்ந்துள்ளது. தீவனப் பொருள் விலை உயர்வு காரணமாக, கறிக்கோழி உற்பத்தியை பணணையாளர்கள் வெகுவாக குறைத்தனர். உற்பத்தி குறைவால், விலை கடுமையாக உயர்ந்துள்ளது.சில்லரை விலையில், ஒரு கிலோ கறிக்கோழி, 150 ரூபாய் வரையுள்ளது என, கறிக்கோழி விற்பனையாளர்கள் தெரிவித்தனர்.
மேலும் பொது செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|