பதிவு செய்த நாள்
14 ஜூன்2013
12:26

தமிழகத்தில், ஒரு மூட்டை சிமென்ட் விலை, 325 ரூபாயாக உயர்ந்துள்ளதால், கட்டுமானத்துறையினர் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
கட்டுமானப் பணிகளுக்கு அத்தியாவசியத் தேவையான, சிமென்ட் விலை கடந்த, சில ஆண்டுகளாக அவ்வப்போது அதிகரித்து வருகிறது. 2007ல், 180 ரூபாயாக இருந்த ஒரு மூட்டை சிமென்ட் விலை, படிப்படியாக அதிகரித்து, 300 ரூபாயை தொட்டுவிட்டது. உற்பத்தியாளர்கள் தங்களுக்குள் கூட்டணி அமைத்து, சிமென்ட் விலையை அவ்வப்போது உயர்த்தி வருவதாக, இந்திய கட்டுனர் வல்லுனர் சங்கம் சார்பில், இந்திய சந்தை போட்டி கட்டுப்பாட்டு ஆணையத்தில் புகார் செய்யப்பட்டது. இதில், சிமென்ட் நிறுவனங்களுக்கு அபராதம் விதித்து, கட்டுப்பாட்டு ஆணையம் பிறப்பித்த உத்தரவு தொடர்பான மேல்முறையீட்டு வழக்கு, நிலுவையில் உள்ளது.
கடந்த ஆண்டு வரை, தமிழக சிமென்ட் உற்பத்தி நிறுவனங்கள் தங்களுக்குள் பேசி, ஒரு மூட்டைக்கு, 30 ரூபாய் வரை உயர்த்தினாலும், ஆந்திர மாநில நிறுவனங்களில் இருந்து வரும் சிமென்ட், வழக்கமான பழைய விலை, 280 ரூபாய்க்கே விற்கப்பட்டது. இதனால், சிமென்ட் விலை உயர்வு பிரச்னை, கடந்த ஆண்டில் பெரிதாக இல்லை. இந்நிலையில், தமிழகத்தில் உள்ள சிமென்ட் உற்பத்தி நிறுவனங்கள் அனைத்தும் ஒன்று சேர்ந்து, சிமென்ட் மீதான சில்லரை விலையை மூட்டைக்கு, 25 ரூபாய் அதிகரித்துள்ளன. இதனால், கடந்த வாரம் வரை, 300 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வந்த சிமென்ட் தற்போது, 325 ரூபாயாக அதிகரித்துள்ளது. தமிழக நிறுவனங்கள் மட்டுமல்லாது, ஆந்திர நிறுவனங்களின் சிமென்ட் விலையும் தற்போது உயர்ந்துள்ளது. கடந்த வாரம் வரை, 280 ரூபாய்க்கு விற்ற இந்நிறுவனங்களின் சிமென்ட் விலை, தற்போது, 310 ரூபாயாக உயர்ந்துள்ளது.
இது குறித்து, இந்திய கட்டுனர் வல்லுனர் சங்கத்தின் தமிழக நிர்வாகி ஒருவர் கூறியதாவது: தமிழக நிறுவனங்களுடன் ஆந்திர நிறுவனங்களும் சேர்ந்து, விலை உயர்வில் ஈடுபட்டுள்ளது அதிர்ச்சி அளிக்கிறது. ஏற்கனவே, கட்டுமானப் பணிகள் குறைந்துள்ள நிலையில், சிமென்ட் விலை உயர்வால், இத்துறை மேலும் மோசமான நிலைக்கு தள்ளப்படும்.
இவ்வாறு, அவர் கூறினார்.
மேலும் பொது செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|