பதிவு செய்த நாள்
19 ஜூலை2013
00:01

மொத்த வியாபாரிகள், கூட்டணி அமைத்துக் கொண்டு, சந்தைக்கு குறைந்த அளவில் வெங்காயத்தை அனுப்பி வருவதால், அதன் விலை, உச்சத்திற்கு சென்று உள்ளது.தேசிய அளவில், கடந்த ஒரு மாதத்தில், வெங்காயம் விலை, 60 சதவீதம் உயர்ந்துள்ளதாக, தேசிய தோட்டக்கலை ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு கூட்டமைப்பு (என்.எச். ஆர்.டீ.எப்.,) வெளியிட்டுள்ள புள்ளி விவரத்தில், தெரிவிக்கப்பட்டுள்ளது.இது, மேலும், 30 - 40 சதவீதம் உயரவும் வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.
மகாராஷ்டிராவில் உள்ள லசன்கான் மிகப் பெரிய வெங்காயச் சந்தையாக திகழ்கிறது. இங்கிருந்து தான், நாட்டின் முக்கிய நகரங்களுக்கு வெங்காயம் அனுப்பி வைக்கப் படுகிறது. இச்சந்தையில், ஜூலை 1ம் தேதி, ஒரு குவிண்டால் வெங்காயத்தின் விலை, 1,690 ரூபாயாக இருந்தது. இது, ஜூலை 17ம் தேதி நிலவரப்படி, 42.6 சதவீதம் அதிகரித்து, 2,410 ரூபாயாக உயர்ந்துள்ளது.டில்லியில், ஒரு குவிண்டால் வெங்காயம் விலை, 30.7
சதவீதம் உயர்ந்து, 1,550லிருந்து, 2,025 ரூபாயாக அதிகரித்து உள்ளது.
சென்னை:இதே காலத்தில், நாட்டிலேயே, சென்னையில் தான், வெங்காயம் விலை, மிக அதிக அளவாக, அதாவது, 50 சதவீதம் அதிகரித்து, ஒரு குவிண்டால், 2,000 ரூபாயில் இருந்து, 3,000 ரூபாயாக உயர்ந்துள்ளது.சில்லரை விலையில், ஒரு கிலோ வெங்காயம், 34 - 40 ரூபாய் வரை விற்கப்படுகிறது. கடந்த ஆண்டின் இதே காலத்தில் காணப்பட்டதை விட, ஐந்து மடங்கு விலை உயர்ந்துள்ளது.இது குறித்து என்.எச்.ஆர். டீ.எப்.,-ன் இயக்குனர் ஆர்.பி. குப்தா கூறியதாவது:
பொதுவாக, ஆயுத பூஜை, தீபாவளி போன்ற விழாக் காலங்களையொட்டி, செப்டம்பர் மாதத்தில் தான், வெங்காயம் விலை உயர்வது வழக்கம். ஆனால், இவ்வாண்டு, முதன் முறையாக, ஜூலை மாதத்தில், வெங்காயம் விலை, இந்த அளவிற்கு உயர்ந்துள்ளது. மொத்த வியாபாரிகள், வெங்காயத்தை சந்தைகளுக்கு குறைவாக அனுப்பி வருகின்றனர். இதனால், வெங்காயம் விலை உச்சத்தில் உள்ளது. ஆந்திராவில் இருந்து,புதிய வெங்காயம் வரத் துவங்கியுள்ளது. இது, 1,000 டன் அளவிற்கு இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதுவரை, வெங்காயம் விலையில் மாற்றம் இருக்காது.
கர்நாடகா:வரும் செப்டம்பர் மாதம், தமிழகம், கர்நாடகாவில் இருந்து, புதிய வெங்காயம் வரத்தானாலும், அதன் விலை, பெரிய அளவில் குறைய வாய்ப்பு இல்லை. அக்டோபரில் விலை குறையலாம். அதே சமயம், வெங்காயம் சப்ளை குறையும் என, பீதி அடைய வேண்டாம்.இவ்வாறு, அவர் கூறினார்.இருந்த போதிலும், மதிப்பீட்டு காலத்தில், ஆக்ரா சந்தையில், வெங்காயம் வரத்து, 44.5 சதவீதம் சரிவடைந்து, 2,650ல் இருந்து, 1,470 குவிண்டா லாக குறைந்து உள்ளது.
அகமதாபாத் மற்றும் பிம்கால்கன் சந்தைகளிலும், வெங்காயம் வரத்து, முறையே 45.2 சதவீதம் மற்றும் 58.1 சதவீதம் குறைந்து, 3,730 குவிண்டால் மற்றும் 7,500 குவிண்டாலாக குறைந்துள்ளது.இதுகுறித்து, நாசிக் வர்த்தகர் சஞ்சய் சனப் கூறியதாவது:கடந்த ஆண்டு, மகாராஷ்டிராவில், போதுமான மழை இல்லாததால், வெங்காயம் பயிரிட்ட விவசாயிகள், கடும் பாதிப்பிற்கு ஆளாயினர். குறித்த காலத்தில், டேங்கர் லாரிகள் கிடைக்காததால், அவர்கள் நெடுந்தொலைவில் இருந்து, பாசனத்திற்கான தண்ணீரை வரவழைத்தனர். இதனால், சாகுபடி செலவினம் அதிகரித்துள்ளது.
இலங்கை:அதேசமயம், மொத்த வியாபாரிகளிடம்,உள்ள சரக்கும் குறைவாகவே உள்ளது. இன்னும் ஒரு மாதம் வரை, அதாவது,கர்நாடாகாவில் இருந்து புதிய வெங்காயம் வரத்தாகும் வரை, விலை உயர்வை, நுகர்வோர் தாங்கிக் கொள்ள வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.இதனிடையே, மேற்கு ஆசியா, மலேசியா மற்றும் இதர பாரம்பரிய நாடுகளில், வெங்காயத்திற்கான தேவை குறைந்து, அதன் விலை வீழ்ச்சி கண்டுள்ளது. இலங்கையின் கொழும்பு நகரத்தில்மட்டும், வெங்காயத்திற்கான தேவைஅதிகரித்துள்ளது.
மேலும் கம்மாடிட்டி செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|