பதிவு செய்த நாள்
19 ஜூலை2013
00:10

இந்தியாவில் காபி பயன்பாடு, நடப்பு 2013-14ம் நிதியாண்டில், 72 ஆயிரம் டன் (12 லட்சம் மூட்டைகள்) என்ற அளவில் உயரும் என, அமெரிக்க வேளாண் அமைச்சகம் (யு.எஸ்.டீ.ஏ.,) வெளியிட்டுள்ள புள்ளி விவரத்தில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.அறிக்கையில் மேலும் கூறியிருப்பதாவது:சென்ற 2012-13ம் நிதியாண்டில், நாட்டின் காபி பயன்பாடு, 66 ஆயிரம் டன் (11 லட்சம் மூட்டைகள் - 1 மூட்டை=60 கிலோ) என்ற அளவில் குறைந்து காணப்பட்டது.
காபி உற்பத்தி:சென்ற நிதியாண்டுக்கு முன்பாக, தொடர்ந்து ஐந்து நிதியாண்டுகளில், இந்தியாவின் காபி பயன்பாடு, சராசரியாக, 72 ஆயிரம் டன்னாக இருந்தது.சென்ற நிதியாண்டை விட, நடப்பு நிதியாண்டில், காபி பயன்பாடு அதிகரித்து வருவதற்கான அறிகுறி தென்படுகிறது. நாட்டின் காபி பயன்பாடு, ஆண்டுக்கு சராசரியாக, 1-2 சதவீதம் வளர்ச்சி கண்டு வருகிறது. கடந்த சில ஆண்டுகளாக, காபி உற்பத்தி, ஏற்ற, இறக்கமின்றி காணப்படும் நிலையிலும், நடப்பு நிதியாண்டை பொறுத்தவரை, அதன் பயன்பாடு அதிகரிக்கும் என, மதிப்பிடப்பட்டுள்ளது.
வரும் அக்டோபரில் துவங்கும் காபி பருவத்தில், அதன் உற்பத்தி, 3.12 லட்சம் டன் (52 லட்சம் மூட்டைகள்) என்ற அளவில் இருக்கும். கடந்த மூன்று ஆண்டுகளாக, இந்தியாவின் காபி உற்பத்தி, ஆண்டுக்கு சராசரியாக, 50 - 52 லட்சம் மூட்டைகள் என்ற அளவில் உள்ளது.நடப்பு நிதியாண்டில், மொத்த காபி உற்பத்தியில், அராபிகா வகை காபியின் பங்களிப்பு, சாதனை அளவாக, 17 லட்சம் மூட்டைகளாகவும், ரோபஸ்டா வகை காபி உற்பத்தி, 35 லட்சம் மூட்டைகளாகவும் இருக்கும் என, மதிப்பிடப்பட்டுள்ளது.
நடப்பு நிதியாண்டில், சர்வதேச காபி உற்பத்தி, சென்ற நிதியாண்டை விட, 44 லட்சம் மூட்டைகள் குறைந்து, 14.60 கோடி மூட்டைகளாக இருக்கும் என, எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், மத்திய அமெரிக்கா மற்றும் மெக்சிகோவின் சில பகுதிகளில், பூச்சி தாக்குதலால், காபி உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது. பிரேசில் நாட்டிலும், இதன் உற்பத்தி குறையும் என, தெரிகிறது. இதனால், ஒட்டுமொத்த அளவில், சர்வதேச காபி உற்பத்தி, குறையும் என, மதிப்பிடப் பட்டுள்ளது.இந்தியாவை பொறுத்தவரை, காபி விவசாயத்தில், மூலப்பொருட்களுக்கான செலவினம் அதிகரித் துள்ளது. உரங்கள் மற்றும் டீசலுக்கான மானியம் ரத்து, போன்றவற்றால், காபி விவசாயிகள் பாதிக்கப் பட்டுள்ளனர்.
வேலைவாய்ப்பு:காபி உற்பத்தி செலவில், தொழிலாளர்களின் கூலிச் செலவினம், 50 சதவீதத்திற்கும் அதிகமாக உள்ளது. வேளாண் சாராத இதர துறைகளில் பெருகி வரும் வேலைவாய்ப்புகள் காரணமாக, தொழிலாளர்களுக்கு பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது.காபி விவசாயத்தில், இயந்திரமயமாக்கல் பின்பற்றாமை, சீரற்ற மழைப் பொழிவு, சிறிய மற்றும் ஆங்காங்கே சிறு சிறு தொகுதிகளாக பிரிந்து கிடக்கும், காபி செடி வளர்ப்பு பகுதிகள் போன்ற வற்றாலும், இந்திய காபி உற்பத்தி மந்தமடைந்துள்ளது. இவ்வாறு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. இதனிடையே, யு.எஸ்.டீ.ஏ.,-ன் காபி பயன்பாடு குறித்த புள்ளி விவரம், இந்திய காபி வாரியத்தின் முன்கூட்டிய மதிப்பீட்டை விட, குறைவாக உள்ளதாக, இந்திய காபி ஏற்றுமதியாளர்கள் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.
- பிசினஸ் ஸ்டாண்டர்ட் உடன் இணைந்து -
மேலும் பொது செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|