பதிவு செய்த நாள்
19 ஜூலை2013
00:14

நடப்பு 2013 -14ம் நிதியாண்டில், திருப்பூரில் இருந்து மேற்கொள்ளப்படும் ஆடைகள் ஏற்றுமதி, 15 ஆயிரம் கோடி ரூபாயை எட்டும் என, எதிர்பார்க்கப்படுகிறது.இது கடந்த 2012- 13 நிதியாண்டில் மேற்கொள்ளப்பட்ட ஏற்றுமதியை விட 15 -20 சதவீதம் அதிகம் என, திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் சங்கம் தெரிவித்து உள்ளது.
சென்னையிலிருந்து, 460 கி.மீ., தொலைவில், கோவைக்கு அருகாமையில் அமைந்துள்ள திருப்பூர் நகரம், பின்னல் ஆடைகள் மற்றும் ஆயத்த ஆடைகளின் உற்பத்தி மற்றும் ஏற்றுமதி மையமாகத் திகழ்கிறது. திருப்பூரில் உள்ள ஜவுளி ஆடைகள் உற்பத்தி மையங்களில், பல்லாயிரக்கணக்கானோர் பணிபுரிந்து வருகின்றனர்.
ஜவுளி ஏற்றுமதி:மத்திய அரசு நடப்பு நிதியா ஆண்டில் 4,300 கோடி டாலர் (25,750 கோடி ரூபாய்) மதிப்பிற்கு ஜவுளி ஆடைகள் ஏற்றுமதி செய்ய இலக்கு நிர்ணயித்துள்ளது. கடந்த நிதியாண்டில், இதன் ஏற்றுமதி 3,600 கோடி டாலர் (21,500 கோடி ரூபாய்) அளவிற்கு இருந்தது. திருப்பூர் ஆடைகள் தயாரிப்பு நிறுவனங்களுக்கு, உலகின் பல்வேறு நாடுகளில் இருந்து, அதிகளவில் "ஆர்டர்கள்' வந்து கொண்டுள்ளன. இதையடுத்து, திருப்பூர் ஆடைகள் ஏற்றுமதித் துறை சூடுபிடித்துள்ளது.
இதுகுறித்து, திருப்பூர் ஆடைகள் ஏற்றுமதியாளர் சங்கத்தின் தலைவர் ஏ.சக்திவேல் கூறியதாவது:கடந்த இரண்டு மாதங்களில், வெளிநாடுகளில் இருந்து ஆர்டர்கள் வருவது, 10 சதவீதம் அதிகரித்துள்ளது. அதே சமயம், சர்வதேச பொருளாதார சுணக்க நிலையால் கடந்த ஆண்டின் இதே காலத்தில் ஆடைகளுக்கான "ஆர்டர்கள்', 3 -5 சதவீதம் அளவிற்கு சரிவடைந்து காணப்பட்டது.கடந்த நிதியாண்டில் ஆடைகள் ஏற்றுமதி, 12,500 கோடி ரூபாய் மதிப்பிற்கு இருந்தது. அதே சமயம், கடந்த 2009-10 நிதியாண்டில், இத் துறையின் ஏற்றுமதி 10 -15 சதவீதம் சரிவடைந்து இருந்தது. இது, இதற்கு முந்தைய 2010-11 மற்றும் 2011-12 நிதியாண்டுகளில், எவ்வித வளர்ச்சியும் இன்றி மிகவும் மந்தமாக இருந்தது.
கடந்த 2006 - 07ம் நிதியாண்டில் ஆடைகள் ஏற்றுமதி, 11 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிற்கு இருந்தது. 2011-12ம் நிதியாண்டில், 400 கோடி டாலர் மதிப்பிற்கு ஏற்றுமதி செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. ஆனால், அவ்வாண்டு இதன் ஏற்றுமதி, 275 கோடி டாலர் அளவிற்கே மேற்கொள்ளப்பட்டது.வங்கதேசத்திற்கு சென்று கொண்டிருந்த ஆர்டர்கள், தற்போது இந்தியாவிற்கு வந்து கொண்டிருக்கின்றன. குறிப்பாக அமெரிக்கா, ஜெர்மனி, இங்கிலாந்து உள்ளிட்ட இதர ஐரோப்பிய நாடுகளில் இருந்தும், அதிகளவில் "ஆர்டர்கள்' குவிந்து வருகின்றன.
நம் நாட்டிற்கு முக்கிய சந்தைகளாக உள்ள நாடுகளில் ஏற்பட்ட பொருளாதார சுணக்க நிலையால், இந்திய ஏற்றுமதியாளர்கள் புதிய சந்தைகளுக்கு ஏற்றுமதி செய்யும் வகையில் நடவடிக்கை மேற்கொண்டனர்.அதாவது ஜப்பான், தென் ஆப்ரிக்கா, இஸ்ரேல் மற்றும் தென் அமெரிக்கா ஆகிய புதிய சந்தைகளில் இருந்தும், இந்திய ஆடை தயாரிப்பு நிறுவனங்களுக்கு "ஆர்டர்கள்' வந்து கொண்டு உள்ளன.இந்த சூழ்நிலையில் டாலருக்கு எதிரான ரூபாய் மதிப்பு சரிவடைந்துள்ளதால், இந்திய ஆடை ஏற்றுமதியாளர்களுக்கு அதிக வருவாய் கிடைத்து வருகிறது.இதுபோன்ற காரணங்களால், நடப்பு நிதியாண்டில் நாட்டின் ஆடைகள் ஏற்றுமதி, சிறப்பான அளவில் வளர்ச்சி காணும். இவ்வாறு சக்திவேல் தெரிவித்தார்.
ஐரோப்பிய நாடுகளுடன் தடையற்ற வர்த்தகம் மேற்கொள்வதற்கான உடன்பாடு கூடிய விரைவில் மேற்கொள்ளப் பட உள்ளது. இந்த உடன்படிக்கை நிறைவேறும் பட்சத்தில் நமக்கு கடும் போட்டியாகத் திகழும், வங்கதேசத்தை நாம் சுலபமாக எதிர் கொள்ள முடியும் என, ஆடை ஏற்றுமதியாளர்கள் தெரிவித்தனர்.
இடர்பாடுகள்:திருப்பூர் ஆடை உற்பத்தியாளர்கள் பல்வேறு இடையூறுகளை எதிர்கொண்டு வருகின்றனர். இதற்கு எடுத்துக்காட்டாக மூலப் பொருட்கள் விலை உயர்வு, உற்பத்தி செலவு அதிகரித்து வருவது, தொழிலாளர்களுக்கு பற்றாக்குறை போன்றவை, இத்துறையினரை மிகவும் பாதிப்படையச் செய்கிறது.எல்லாவற்றிற்கும் மேலாக, மின் பற்றாக்குறை மற்றும் மின்வெட்டால் தயாரிப்பு பணி மிகவும் பாதிப்புக்குள்ளாகிறது. தற்போது, காற்றாலைகள் செயல்பட்டு வருவதால் மின்வெட்டு மிகவும் குறைந்துள்ளது.
மின்வெட்டு:ஆனால், காற்றாலைகள் மூலம், 3-4 மாதங்களுக்கே மின்சாரம் கிடைக்கும். அதன் பின் மீண்டும் மின் வெட்டை எதிர்கொள்ள வேண்டியிருக்கும். எனவே, மாநில அரசு, மின் பற்றாக்குறை ஏற்படாத வகையில் இதற்கு நிரந்தர தீர்வு காண வழி காண வேண்டும்.
டீசல் விலை உயர்வும், ஆடை தயாரிப்பு நிறுவனங்களுக்கு அதிக பாதிப்பை ஏற்படுத்துகிறது. இதை எதிர்கொள்ள, டீசலை சர்வதேச விலையில், ஆடை தயாரிப்பு மற்றும் ஏற்றுமதி நிறுவனங்களுக்கு, எண்ணெய் சந்தைப்படுத்தும் நிறுவனங்கள் வழங்க வேண்டும் என, சங்கம் மத்திய அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளது.மத்திய, மாநில அரசுகள் உரிய நடவடிக்கைகளை விரைந்து எடுத்தால், இத்துறையின் ஏற்றுமதி சிறப்பான அளவில் அதிகரிக்கும் என, சக்திவேல் மேலும் கூறினார்.
- பிசினஸ் ஸ்டாண்டர்ட் உடன் இணைந்து -
மேலும் ஜவுளி செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|