பதிவு செய்த நாள்
06 ஆக2013
02:40

புதுடில்லி:நடப்பு 2013-14ம் வேளாண் பருவத்தில், நாட்டின் தானிய உற்பத்தி, ஒட்டு மொத்த அளவில் அதிகரிக்கும் என, மதிப்பிடப்பட்டுள்ளது.உள்நாட்டில் பல மாநிலங்களில், பருவமழை மிகச் சிறப்பான அளவில் பெய்து வருவதால், சாகுபடி பரப்பளவு, கடந்தாண்டை விட, நடப்பாண்டில் உயர்ந்து உள்ளது.
நெல் சாகுபடி:இதையடுத்து, நெல், பருப்பு வகைகள், எண்ணெய் வித்துக்கள் உள்ளிட்ட, பல்வேறு தானியங்களின் உற்பத்தி, அதிகரிக்க வாய்ப்புள்ளது என, மத்திய வேளாண் அமைச்சகம் வெளியிட்டு உள்ள புள்ளிவிவரத்தில் தெரி விக்கப் பட்டுள்ளது.உள்நாட்டில், கரீப் மற்றும் ரபி ஆகிய இரு பருவங்களில் சாகுபடி மேற்கொள்ளப்படுகிறது. நடப் பாண்டு கரீப் பருவத்தில், மகாராஷ்டிரா, கர்நாடகா, ஆந்திரா, பஞ்சாப் உள்ளிட்ட பல மாநிலங்களில், மழைப் பொழிவு சாதாரண அளவை விட, கூடுதலாக பெய்துள்ளது. குறிப்பாக, நடப்பாண்டு ஜூன் மற்றும் ஜூலை மாதங்களில், சாதாரண அளவை விட, கூடுதலாக, 17 சதவீதம் அளவிற்கு மழை பெய்துள்ளது.
மேற்கு வங்கம்:இருப்பினும், நாட்டின் கிழக்கு மாநிலங்களான, ஒடிசா, மேற்கு வங்கம், ஜார்கண்ட் ஆகிய மாநிலங்களில் மழை பொழிவு குறைவாக உள்ளது. தற்போது தான், மேற்கண்ட மாநிலங்களில், முழு வீச்சில், நடவு பணிகள் மேற் கொள்ளப்பட்டு வருகின்றன.இது குறித்து, மத்திய நெல் ஆராய்ச்சி பயிலகம் வெளியிட்டு உள்ள புள்ளிவிவரம்:
நடப்பு கரீப் பருவத்தில், சென்ற வாரம் வரையிலுமாக, 2.40 கோடி ஹெக்டேரில், நெல் சாகுபடி மேற்கொள்ளப்பட்டு உள்ளது. இது, கடந்தாண்டின் இதே காலத்தில் மேற்கொள்ளப்பட்டதை (2.31 கோடி ஹெக்டேர்) விட, 3.51 சதவீதம் அதிகமாகும்.பொதுவாக கரீப் பருவத்தில்,4.40 கோடி ஹெக்டேரில், நெல் சாகுபடி மேற்கொள்ளப்படும். நாட்டின் மொத்த நெல் சாகுபடியில், கரீப் பருவத்தில் மட்டும், 88 சதவீதம் அளவிற்கு நெல் சாகுபடி மேற்கொள்ளப்படுகிறது.இவ்வாறு புள்ளிவிவரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த 2012-13ம் வேளாண் பருவத்தில், நாட்டின் சில மாநிலங்களில் பருவ மழை குறைந்திருந்த நிலையிலும், அவ்வாண்டில், நெல் உற்பத்தி, 10.40 கோடி டன்னாக இருந்தது. இதில், கரீப் பருவத்தில் மட்டும், 9 கோடி டன் நெல் உற்பத்தியானது என்பது குறிப்பிடத்தக்கது.
பருப்பு வகைகள்:இந்நிலையில், கடந்த 2009-10ம் வேளாண் பருவத்தில், பருவமழை பொய்த்ததால், நெல் உற்பத்தி, அதற்கு முந்தை பருவத்தை விட, 14 சதவீதம் குறைந்து, 8.91 கோடி டன்னாக இருந்தது.நடப்பு கரீப் பருவத்தில், பருவ மழை நன்கு உள்ளதால், நெல் சாகுபடி பரப்பளவு மட்டுமின்றி, பருப்பு வகைகள் சாகுபடி பரப்பளவும், சென்ற வாரம் வரையிலுமாக, 26 சதவீதம் அதிகரித்து, 79 லட்சம் ஹெக்டேராக உயர்ந்து உள்ளது. கடந்த ஆண்டின் இதே காலத்தில், இதன் சாகுபடி பரப்பளவு, 62 லட்சம் டன்னாக மிகவும் குறைந்திருந்தது.
எண்ணெய் வித்துக்கள்:உள்நாட்டு தேவையை பூர்த்தி செய்யும் அளவிற்கு, எண்ணெய் வித்துக்கள் உற்பத்தி இல்லா ததால், நம்நாடு சமையல் எண்ணெய் வகைகளை அதிகளவில் இறக்குமதி செய்து கொள்கிறது. இச்சூழ்நிலையில், நடப்பு கரீப் பருவத்தில், சாதகமான தட்பவெப்பசூழ்நிலையால், எண்ணெய் வித்துக்கள் சாகுபடி பரப்பளவு, சென்ற வார இறுதி வரையிலுமாக, 1.73 கோடி ஹெக்டேராக அதிகரித்துள்ளது. இது, சென்ற ஆண்டின் இதே காலத்தில், 1.49 கோடி ஹெக்டேராக இருந்தது.
தமிழகத்திலும், நடப்பு வேளாண் பருவத்தில், தானிய உற்பத்தி, அதிகரிக்கும் என, எதிர்பார்க்கப்படுகிறது. பல அணை களில் நீர்மட்டம் உயர்ந்து வருகிறது. வட கிழக்கு பருவமழை நன்கு அமையும் நிலையில், தமிழகத்திலும் இவ்வாண்டு நெல் உள்ளிட்ட தானியங்கள் உற்பத்தி நன்கு இருக்கும் என, மதிப்பிடப்பட்டுள்ளது.
மேலும் பொது செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|