பதிவு செய்த நாள்
08 ஆக2013
01:05

வெங்காயம் வரத்து குறைந்து உள்ளதால், அதன் சில்லரை விலை, கிலோவுக்கு, 100 ரூபாய்என்ற உச்சத்தை எட்டும் என, இத்துறை சார்ந்த வர்த்தகர்கள் தெரிவித்தனர்.
கோயம்பேடு:தற்போது, நாடு முழுவதும் உள்ள சந்தைகளில், 1 கிலோ வெங்காயம், 50- 80 ரூபாய்வரை, தரம் மற்றும் இடத்திற்கேற்ப விற்கப்படுகிறது. சென்னை கோயம்பேடு காய்கறி சந்தையில், சென்ற வாரம், மொத்த விற்பனையில், 1 கிலோ வெங்காயம், 35 ரூபாய்க்கு விற்பனையானது. இது, தற்போது, 40-50 ஆக உயர்ந்துள்ளது.
டில்லி, ஆசாத்பூர் மொத்த விற்பனை சந்தையில்,கடந்த வாரம்,1 குவிண்டால் (100 கிலோ)வெங்காயம், 2,650-2,800 ரூபாய்வரை விற்கப்பட்டது. இது, தற்போது, 3,250 ரூபாயாக உயர்ந்து உள்ளது.சில்லரையில்,இதை விட, 2- 2.5 மடங்கு அதிக விலையில், வெங்காயம் விற்கப்படுகிறது.வெங்காய வரத்து குறைவு காரணமாக, கடந்த ஏப்ரல் முதல், இதுவரை அதன் விலை மூன்று மடங்கு உயர்ந்துள்ளது. இத்துடன் வெங்காயம் வரத்தும், நாள்ஒன்றுக்கு, 18,600 குவிண்டால் என்ற அளவில் இருந்து, 7,500 குவிண்டாலாக குறைந்துள்ளது.
லசல்கான்:கடந்த ஆண்டு, இதே காலத்தில் வரத்தான வெங்காயத்தை விட, தற்போது, மூன்று மடங்கு வரத்து குறைந் துள்ளது.இந்தியாவின் மிகப்பெரிய, லசல்கான் வெங்காய சந்தையில், சென்ற திங்களன்று,7,540 குவிண்டால் அள விற்கே வெங்காயம் வரத்தானது.இது,கடந்த, 2012ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம், 22,430 குவிண்டால் என்ற அளவில் உயர்ந்து இருந்தது.
இதே காலத்தில்,1 குவிண்டால் வெங்காயம் விலை,540 ரூபாயில் இருந்து, 3,000 ரூபாயாக அதிகரித்து உள்ளது என, தேசிய தோட்டக்கலை ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு கழகத்தின் புள்ளி விவரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இச் சந்தையில், நடப்பு ஆகஸ்ட் 1ம் தேதி நிலவரப்படி, 1 குவிண்டால் வெங்காயம், 2,401 ரூபாய்க்கு விற்பனை செய்யப் பட்டது, என்பது குறிப்பிடத்தக்கது.
இதுகுறித்து, வர்த்தகர் ஒருவர் கூறியதாவது:லசல்கான் சந்தையின் விலை உயர்வு, நாட்டின் இதர சந்தைகளில் எதி ரொலிக்கும். நடப்பு மாத இறுதியில் புதிய வெங்காயம் வரத்தாகும் வரை, அதன் விலை உச்சத்திலேயே இருக்கும். தற்போது வெங்காயத்திற்கு பற்றாக்குறை இல்லை. ஆனால், அதன் தேவை அதிகரித்துள்ளது. அளிப்பிற்கும், சப்ளைக் கும் உள்ள, இந்த தற்காலிக இடைவெளியால், வெங்காயம் விலை உயர்ந்துள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.
விலை உச்சம்:இதை மறுக்கும் சந்தை ஆய்வாளர்கள், வெங்காயத்திற்கான தேவை இனிமேல் தான் அதிகரிக்கும். வர்த்தகர்களும், மொத்த வினியோகிப்பாளர்களும், தொடர்ந்து வெங்காயத்தின் விலையை உச்சத்திலேயே வைத்திருக் கும் நோக்கில், அதை அதிக அளவில் இருப்பு வைத்து உள்ளதாக குற்றம் சாட்டியுள்ளனர்.
நடப்பாண்டு, பாகிஸ்தானுக்கான இந்தியாவின் வெங்காய ஏற்றுமதி அதிகரித்துள்ளது. எனினும் ஒட்டுமொத்த ஏற்றுமதி குறைந்துள்ளது. நடப்பு 2013 - 14ம் நிதியாண்டில், சென்ற ஏப்ரல் முதல் தற்போது வரை, 6.15 லட்சம்டன் வெங்காயம் ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளது. இது, சென்ற நிதியாண்டின் இதே காலத்தில், 6.95 லட்சம் டன்னாக இருந்தது.
மதிப்பீடு:ஆக, மதிப்பீட்டு காலத்தில், வெங்காயம் ஏற்றுமதி, 80 ஆயிரம் டன் குறைந்துள்ளது.இதை சுட்டிக் காட்டி, வெங்காயத்தின் விலை உயர்வு, தற்காலிகமானது என்பதால், அதன் ஏற்றுமதிக்கு தடை விதிக்க தேவையில்லை என்று, மத்திய வேளாண், வர்த்தகம், நுகர்வோர் அமைச்சகங்களின் மூத்த அதிகாரிகளைக் கொண்ட குழு, மத்திய அரசுக்கு பரிந்துரைத்து உள்ளது.
இதன் மூலம், உள்நாட்டில் வெங்காயம் விலையை கட்டுப்படுத்த, அதன் ஏற்றுமதிக்கு தடை விதிக்க வேண்டும் என்ற எதிர்க்கட்சிகளின் கோரிக்கை நிராகரிக்கப்பட்டுள்ளது. அதே சமயம், நடப்பாண்டு இறுதிக்குள், சில்லரை விற்பனையில், 1 கிலோ வெங்காயம் விலை, 100 ரூபாயை எட்டுவதற்கான சாத்தியம் உள்ளது என, வர்த்தகர்கள் தெரிவிக்கின்றனர்.
- பிசினஸ் ஸ்டாண்டர்ட் உடன் இணைந்து -
மேலும் பொது செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|