தங்கம் விலை ரூ.23 ஆயிரத்தை தொட்டது தங்கம் விலை ரூ.23 ஆயிரத்தை தொட்டது ... காரை சிக்கனமாக சுத்தம் செய்வது எப்படி? காரை சிக்கனமாக சுத்தம் செய்வது எப்படி? ...
வர்த்தகம் » ஆட்டோமொபைல்
எல்லோருக்கும் சொந்தமாக ஒரு கார் கனவை நிறைவேற்றியது நானோ!
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

16 ஆக
2013
23:07

சொந்தமாக கார் வாங்குவது என்பது, ஒவ்வொரு நடுத்தர மக்களின் கனவு. இந்த கனவு நிறைவேற பல ஆண்டுகளாகும் என நம்பியிருந்தவர்கள், இன்று டாடா நானோவின் வருகையால், மகிழ்ச்சியில் மூழ்கியுள்ளனர். கனவு போலவும் சவால் போலவும் நிறைவேறாத ஆசை போலவும் இந்தியர்களுக்கு அறிமுகமான டாடா நானோ, இன்றைக்கு எதார்த்தமான நிஜமாகிவிட்டது. உலகப் புகழ்பெற்ற அந்த ஒரு லட்ச ரூபாய் கார் இன்று ஒன்றரை லட்சத்தைத் தாண்டிவிட்டது. ஆனாலும் இன்றைய தேதிக்குச் சந்தையில் மிகவும் விலை குறைவான கார் என்றால், அது நானோதான்!.

நானோ அறிமுகமாவதற்கு முன்பாகவே அதுதொடர்பான சர்ச்சைகள் தொடங்கிவிட்டன, இன்னும் சரியாகச் சொல்வதென்றால் இப்படி ஒரு மலிவு விலைக் காரை வடிவமைப்பது என்று டாடா குழுமம் பிள்ளையார் சுழி போடுவதற்கு முன்பாகவே. ரத்தன் டாடாவின் கனவுத் திட்டம் அது. சின்னதாக, சிக்கனமாக ஒரு கார், அதுதான் இந்திய மோட்டார் துறையில் நிகழப்போகும் அடுத்த புரட்சி என்று அவர் (சரியாக) ஊகித்திருந்தார். ஆரம்பத்தில் ஸ்கூட்டரின் உதிரி பாகங்களை வைத்துக் கார் தயாரிக்கமுடியுமா என்கிற திசையில்தான் டாடா குழுமத்தின் ஆராய்ச்சிகள் தொடங்கின. அது சரிப்படாத யோசனை என்று புரிந்தவுடன், தூக்கிப் போட்டுவிட்டு வேறு விதமாகச் சிந்திக்கத் தொடங்கினார்கள். அடுத்து, பிளாஸ்டிக் கார் மாடல் ஒன்று தயாரிக்கப்பட்டது. அதன்பிறகு, வழக்கமான ஒரு காரை எடுத்துக்கொண்டு அதில் என்னவெல்லாம் மாற்றங்களைச் செய்து செலவைக் குறைக்கமுடியும் என்று யோசித்தார்கள். கொஞ்சம் கொஞ்சமாக ஒரு மலிவு விலைக் காரைத் தயாரிப்பது சாத்தியம்தான் என்கிற நம்பிக்கை கூடியது.

யோசிக்காமல் வேடிக்கையாக ஒரு முறை ரத்தன் டாடா காரின் விலையை அறிவித்தார். சுமார் ஒரு லட்ச ரூபாய். உண்மையில் அப்போது டாடா குழுமத்துக்கு ஒரு லட்ச ரூபாயில் கார் தயாரிக்கும் எண்ணமே இல்லை. இந்தச் செய்தி பரபரப்பாக எல்லார் மத்தியிலும் பேசப்பட்டபிறகுதான் அப்படி ஒரு கடினமான இலக்கு நிர்ணயித்துக்கொண்டு அதனைத் துரத்தி ஓட ஆரம்பித்தார்கள். ஒரு லட்ச ரூபாய் என்பதை இலக்காக வைத்து வடிவமைப்புகள் நடந்தன. பல எஞ்சினியரிங் புதுமைகள், தொழில்நுட்ப ஆச்சர்யங்கள், எல்லாமாகச் சேர்ந்து ஒரு வழியாகக் கனவு நிஜமானது. உண்மையில், இந்தச் சவாலில் டாடா ஜெயிக்கவும் இல்லை, தோற்கவும் இல்லை. ஒரு லட்சம் என்பது இனி கட்டுப்படியாகாது என்னும் நிலையில், இந்தியாவின் மத்தியவர்க்கத்தினர் வாங்கக்கூடிய மலிவு விலையில் ஒரு கார் என்று சற்றே மாற்றி அமைத்துக்கொண்டார்கள். ஆரம்ப காலத்தில் வெளியான நானோக்களில் ஏகப்பட்ட பிரச்னைகள் சொல்லப்பட்டன. கார் சரியாக ஓடுவதில்லை என்பதில் ஆரம்பித்துச் சட்டென்று விபத்தில் சிக்குகிறது, தீப்பிடித்து எரிகிறது என்றெல்லாம் பலவிதமான குற்றச்சாட்டுகள். எது உண்மை, எது பொய் என்றுகூட உறுதி செய்யமுடியாதபடி மீடியாவில் செம கலாட்டா.
போதாக்குறைக்கு மேற்கு வங்காளத்தில் டாடா நானோ கார்களைத் தயாரிப்பதற்காக உருவாக்கப்பட்டிருந்த தொழிற்சாலையை மையமாக வைத்துப் பல அரசியல் பிரச்னைகள். மொத்தக் கூடாரத்தையும் தூக்கிக்கொண்டு குஜராத்துக்கு ஓடினார்கள். இதுவும் பெரிய பரபரப்பைக் கிளப்பியது. நல்லவேளையாக, இந்திய மீடியா நானோ அவலை ரொம்ப நாளைக்கு மெல்லவில்லை. சில மாதங்களுக்குள் வேறு பரபரப்புகளில் மூழ்கி அவர்கள் இதனை மறந்துவிட, டாடா மிகக் கவனமாகத் தனது அடுத்தகட்ட நடவடிக்கைகளில் இறங்கியது. ஆரம்ப கால நானோ வெளியீடுகளில் இருந்த குறைகள் அனைத்தும் நுணுக்கமாகக் கவனித்துச் சரி செய்யப்பட்டன.

இப்போது விலை ஒரு கட்டுப்பாடாக இல்லாததால் எஞ்சினியர்கள் நல்ல சுதந்தரத்துடன் செயல்படமுடிந்தது. அடுத்தபடியாக, புதிய நானோவுக்கான மார்க்கெட்டிங் வியூகங்கள் வகுக்கப்பட்டன. விலை குறைவு என்பதை மட்டுமே பேசிக்கொண்டிருக்காமல் இன்னும் எதையெல்லாம் குறிப்பிட்டுச் சொல்லி இந்தக் காரை விற்பனை செய்யலாம் என்று ஆராய்ந்தார்கள். பலதரப்பட்ட மக்களிடம் நேரடியாகப் பேசி அதன் அடிப்படையில் நானோவுக்கான புதிய விளம்பரங்கள் உருவாக்கப்பட்டன. இவற்றைக் கவனித்துப் பார்த்தால் ஒரு விஷயம் தெளிவாகப் புரியும். நானோவின் விலை குறைவு என்பதை எந்த விளம்பரமும் சொல்லுவதே இல்லை. அதுதான் ஏற்கெனவே மக்கள் மனத்தில் அழுத்தமாகப் பதிந்துவிட்டது அல்லவா? அதற்குப் பதிலாக, நானோவின் பெட்ரோல் சிக்கனம், பளிச் வண்ணங்கள், பார்ப்பதற்குச் சிறியதாகத் தெரிந்தாலும் உள்ளே அதிக இடம், கூடுதல் சௌகர்யம், செயல்திறன் போன்ற விஷயங்கள் வலியுறுத்திப் பேசப்படு கின்றன. குறிப்பாக இது இளைய தலைமுறைக்கான கார் என்கிற செய்தி நிறுவப்படுகிறது.

ஒரு காலத்தில் நாற்பது வயது கடந்தபின் எட்டப்படவேண்டிய ஒரு கவுரவ அடையாளமாக இருந்த கார், இப்போது சவுகரியத்தின் சின்னமாகக் கருதப்படுகிறது. பத்து வருடங்களுக்கு முன்புவரை இந்திய இளைஞர்கள் சம்பாதிக்கத் தொடங்கியவுடன் ஒரு லோனைப் போட்டு பைக் வாங்கிவிடவேண்டும் என்று நினைத்தார்கள், அவர்களை இப்போது டாடா நானோ குறி வைக்கிறது. இதற்கு ஏற்ப, இந்தக் காலகட்டத்தில் பைக் விலையும் கணிசமாக உயர்ந்துள்ளது. அதற்கும் டாடா நானோவுக்கும் நடுவிலான இடைவெளி குறைந்துகொண்டே வருகிறது.
இதை முன்கூட்டியே ஊகித்து அறிந்திருந்த நானோ, தெளிவான விற்பனைத் திட்டங்களுடன் களத்தில் குதித்துள்ளது. உங்களது பழைய பைக் அல்லது காரை மாற்றி நானோ வாங்கினால் கூடுதல் போனஸ், எளிய கடன் திட்டங்கள்! விற்பனையும் அவர்கள் எதிர்பார்த்தபடி மாதாமாதம் எகிறிவருகிறது.மற்றொரு பக்கம், காரின் அடிப்படை விற்பனை விலை, குறைந்துவிட்டபடியால், புதிதாக கார் வாங்குகிறவர்களும் அதிகரிப்பார்கள். இதன் விளைவாக சாலைகளில் நெரிசல் கூடும்.

இப்படி ஒரு திடீர் வீக்கத்தைச் சமாளிக்கக்கூடிய அடிப்படைச் சாலை வசதிகள் கூட நம்மிடம் இல்லை. இவை நானோ கார் பற்றிய கவலைகள். ரத்தன் டாடா நானோ பற்றிப் பேசத் தொடங்கியபோதே இந்தப் பிரச்னைகள் எழுப்பப்பட்டன. அப்போது அவர் அளித்த பதில் இது.
டாடா நானோ பற்றிக் குறை சொல்கிறவர்களில் பெரும்பாலானோர் நகரங்களில் வசிக்கிறவர்கள்; ஏற்கெனவே ஒரு கார் வைத்திருப்பவர்கள்; அந்த வாழ்க்கை முறைக்குப் பழகிவிட்டவர்கள்; இவர்களைத் தாண்டி இன்னும் பல கிராமங்களில், சிறு நகரங்களில் ஒரு கார் வாங்க முடியாத சூழ்நிலையில் இருக்கும் குடும்பங்கள் லட்சகணக்கில் உண்டு. இந்தக் கார் அவர்களுடைய அந்தஸ்தை, தன்னம்பிக்கையைக் கூட்டும்.

Advertisement

மேலும் ஆட்டோமொபைல் செய்திகள்

business news
மும்பை : கடந்த நான்கு வர்த்தக நாட்களில், எல்.ஐ.சி., நிறுவனப் பங்குகளில் முதலீடு செய்துள்ளவர்கள், கிட்டத்தட்ட 77 ... மேலும்
business news
புதுடில்லி : கடந்த ஆண்டில், கொரோனா காலத்தை விட, ஆண்களுக்கான ஆடம்பர பிராண்டு பொருட்கள் விற்பனை அதிகரித்து ... மேலும்
business news
மும்பை : ‘யூட்டிலிட்டி வெகிக்கிள்’ எனும், பயன்பாட்டு வாகனங்களின் விற்பனை மேலும் அதிகரிக்கும் என, ‘பிட்ச் ... மேலும்
business news
புதுடில்லி : மூன்று ஆண்டுகளுக்கு பின், மீண்டும் வானில் பறக்க உள்ளன ‘ஜெட் ஏர்வேஸ்’ விமானங்கள். ஜெட் ஏர்வேஸ் ... மேலும்
business news
உலகலாவிய தொழில்நுட்ப பிராண்டான ஒன் பிளஸ், முன்னெப்போதும் இல்லாத அளவிற்கு இந்தியாவின் மிகவும் அணுகக்கூடிய 5ஜி ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)