பதிவு செய்த நாள்
23 ஆக2013
14:52

ஆட்டோ கட்டணம் இறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், கட்டண விவரங்களை, அரசு இன்று வெளியிட வாய்ப்புள்ளதாக தெரிகிறது. தமிழகம் முழுவதும், 2.18 லட்சம் ஆட்டோக்கள் இயக்கப்படுகின்றன. சென்னையில் மட்டும் ஆட்டோ, அபே ஆட்டோ, ஷேர் ஆட்டோ என, 70 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆட்டோக்கள் உள்ளன. ஆட்டோக்களில் அதிக கட்டணம் வசூலிப்பது, தொடர்ந்து நீடிக்கும் பிரச்னை. இதையடுத்து, 'ஆட்டோ கட்டணத்தை, நான்கு வார காலத்திற்குள் முறைப்படுத்தி, நிர்ணயம் செய்து, அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்' என, சுப்ரீம் கோர்ட், தமிழக அரசுக்கு கெடு விதித்துள்ளது. எனவே, வரும், 26ம் தேதி, ஆட்டோ கட்டண விவரங்கள் குறித்த அறிக்கையை, சுப்ரீம் கோர்ட்டில், தமிழக அரசு தாக்கல் செய்ய வேண்டியுள்ளது. இதையடுத்து, ஆட்டோ கட்டண நிர்ணயம், கட்டணத்திற்கான ரசீது வழங்குதல், கண்காணிக்க ஜி.பி.எஸ்., தொழில்நுட்பத்தை கொண்டு வருவது குறித்து, தொழிற்சங்கத்தினர், நுகர்வோர் சங்க பிரதிநிதிகள் ஆகியோரிடம், இம்மாதம், 10ம் தேதி, போக்குவரத்துத் துறை பேச்சுவார்த்தை நடத்தியது. முதல், இரண்டு கி.மீ.,க்கு, 30 ரூபாயும், அடுத்தடுத்த கி.மீ.,க்கு, 15 ரூபாயும் நிர்ணயிக்க வேண்டும் என, தொழிற்சங்கங்கள் கோரிக்கை வைத்தன. முதல், இரண்டு கி.மீ.,க்கு, 25 ரூபாய் முதல், 30 ரூபாயும், அடுத்தடுத்த கி.மீ.,க்கு, 12 ரூபாயும் நிர்ணயிக்க வேண்டும் என, நுகர்வோர் சங்க பிரதிநிதிகள் வேண்டுகோள் வைத்தனர். இரு தரப்பு கருத்துகளையும் கேட்டறிந்த நிலையில், ஆட்டோ கட்டணத்தை இறுதி செய்வதற்கு, முதல்வர் தலைமையில் உள்துறை செயலர், போக்குவரத்துத் துறை அதிகாரிகளின் முக்கிய ஆலோசனைக் கூட்டம் நேற்று நடைபெற்றது. இதில், ஆட்டோ தொழிற்சங்கங்கள் மற்றும் நுகர்வோர் சங்க பிரதிநிதிகள் நிர்ணயம் செய்ய வேண்டுமென கேட்டுக் கொண்ட கட்டண விவரங்கள் குறித்து அலசப்பட்டுள்ளது. தொழிற்சங்கத்தினர், நுகர்வோர் ஆகிய இரு தரப்பினரும் ஏற்றுக் கொள்ளக் கூடிய வகையில், ஆட்டோ கட்டணம் இறுதி செய்யப்பட்டுள்ளதாகவும், இன்று (23ம் தேதி) கட்டண விவரங்கள் வெளியாக வாய்ப்புள்ளதாகவும் போக்குவரத்துத் துறை வட்டாரங்கள் தெரிவித்தன.
மேலும், ஆட்டோக்களில் வசூலிக்கும் கட்டணத்திற்கான ரசீது மற்றும் ஜி.பி.எஸ்., தொழில்நுட்பத்தை கொண்டு வருவதில், அரசு உறுதியாக உள்ளதாகவும், அவற்றிற்கு கால அவகாசம் வழங்க உள்ளதாகவும் கூறினர்.
மேலும் பொது செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|