பதிவு செய்த நாள்
23 ஆக2013
17:42

இயற்கை வளங்களிலேயே மிகவும் விலை மதிப்புள்ள வளம் எது தெரியுமா. தங்கமோ, வைரமோ அல்லது மண், செடி, கொடி, மரமோ கூட இல்லை. அது நாம் தான், அதாவது மனித வளம் தான். அந்த ஒப்பற்ற மனித வளத்தில், சீனாவுக்கு அடுத்தபடியாக இருப்பது, நம் இந்தியா தான். அதை எந்த அளவுக்கு ஆக்கப்பூர்வமாக பயன்படுத்துகிறோம் என்பது, வேறு விஷயம். ஆனால், மனித உயிர்களை வீணாக விரயமாக்குவதிலும், நாம் முன்னணியில் இருப்பது தான், வேதனை தரக் கூடியதாக இருக்கிறது. உலகிலேயே அதிக சாலை விபத்து மரணங்கள், இந்தியாவில் தான் ஏற்படுகின்றன. சாலை விபத்துகளால், நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில், ஒரு சதவீதம் இழப்பு ஏற்படுவதாக மதிப்பிடப்பட்டுள்ளது. உலக வங்கியின் கணிப்புப்படி, வளரும் நாடுகளுக்கு ஆண்டுதோறும், 100 பில்லியன் டாலர் அளவுக்கு இழப்பு ஏற்படுகிறது. இத்தொகையானது வளரும் நாடுகளுக்கு, வளர்ந்த நாடுகள் தரும் மேம்பாட்டு நிதியை காட்டிலும், இருமடங்கு அதிகம். ஆண்டுதோறும், சாலை விபத்துகளால் ஏற்படும் உயிர்ப்பலிகள், 8 சதவீதம் அதிகரித்து வருகிறது.
அரசு எவ்வளவு பாதுகாப்பு நடவடிக்கை மேற்கொண்டாலும், விபத்துகளை தடுக்க முடியாமல் போவதற்கு காரணம், பொதுமக்களின் அலட்சியமும், விதிமீறலும் தான். இன்று சாலையில் போவோர், ஒவ்வொருவரும் அடுத்த வரை உதாரணமாக கொண்டு, அவர்களும் விதியை மீறுகின்றனர். நாம்மட்டும் கடைபிடிப்பதால் நாடு திருந்தி விடுமா? என்பதே, எல்லாரது கேள்வியாகவும், அதுவே விதிகளை மீற அவர்களுக்கு கிடைக்கும் சாக்காகவும் உள்ளது.
இருசக்கர வாகனங்களில் செல்வோர், தலை கவசம் அணிய வேண்டும் என்கிற, அடிப்படை விதியினை கடைபிடிப்பதில், ஒருவர் காட்டும் அலட்சியம், அவர் வாழ்நாளில் திரும்ப பெற முடியாத, இழப்புகளை ஏற்படுத்தும் என்பது, அவருக்கும் தெரிந்தே இருக்கிறது. விபத்துகளில், உயிர் இழந்தவர்களின் குடும்பம் படும் துயரும், அதை பார்க்கும் மற்றவர்களுக்கு பாடமாக இருப்பதில்லை. சரி, அது அவர் விதி, அதுக்காக நாம் சாலையிலே போகமா இருக்க முடியுமா என்று பேசுபவர்கள் உண்டு.
நாம் நம் அனுபவத்திலிருந்து மட்டுமே பாடங்களை கற்று பழகியிருக்கிறோம். ஆனால், வாழ்க்கை, பரீட்சை வைத்து விட்டுதான் பாடம் நடத்தும் வினோத வாத்தியார். சில சமயம் பாடம் புரியும் போது, அது நமக்கு பயன்படாமல் போகலாம். இன்னொரு வாய்ப்பு என்பது எல்லாவற்றிலும் நிச்சயம் இல்லை. நடந்தால் பார்த்துக் கொள்ளலாம் என்று, இருப்பவர்கள் நடந்தபின் என்ன சொல்வார்கள். பல ஆண்டுகளாக, சாலையில் ஓட்டுனராக இருக்கலாம். ஆனால், விபத்து என்பது நம்முடைய அலட்சியத்தினால் மட்டும் அல்ல. அடுத்தவர்களின் அலட்சியமும் சம்பந்தப்பட்டது என்பதை, மனதில் கொள்ள வேண்டும்.
மொபைல்போன் என்கிற கண்டுபிடிப்பு எங்கிருந்தாலும் பேசலாம் என்பதற்கு தான். ஆனால், இப்போது என்ன செய்து கொண்டிருந்தாலும் பேசலாம் என்று ஆகி விட்டது. ஹீயர் போன் என்ற ஒன்று இருந்தாலும், அதை பயன்படுத்தாமல் வண்டி ஓட்டிக் கொண்டிருக்கும் போது அழைப்பு வந்தால், ஜீன்ஸ் பேண்ட்டில் டைட்டாக சொருகியிருக்கும் மொபைல் போனை கஷ்டப்படுத்து எடுத்து, அதை காதிற்கும் கழுத்திற்கும் இடையில் முட்டுக் கொடுத்து தலை சாய்த்தபடியே பேசிக் கொண்டு போகிறவர்களை பார்ததால், ஏதோ சர்க்கசில் சாகசம் செய்பவர் போல இருக்கிறார். நீங்கள் ஒரு இடத்திலிருந்து, மற்றொரு இடத்திற்கு போகிறீர்கள். நீங்கள் வண்டியில் போய்க் கொண்டிருப்பது, உங்களை மொபைலில் அழைக்கும் அந்த நபருக்கு தெரியாது. பின் எதற்கு அவசரத்துடன் அதை எடுத்து, பேசியே தீர்வது என்று, உங்கள் வாழ்க்கையே பணயம் வைக்கிறீர்கள். உங்கள், உயிரை விடவும் முக்கியமானதா, அந்த விஷயம் என்று யோசித்து பாருங்கள். எந்த தலை போகும் காரியமாக இருந்தாலும், ஓட்டும்போது, நீங்கள் ஏன் பேசவில்லை என்று, யாரும் கேட்கப்போவதில்லை. அப்படி பேசியே ஆகி வேண்டியிருந்தால், வண்டியை ஒரம் கட்டிவிட்டு பேசி விட்டு பின் பயணத்தை துவங்குங்கள். இதை அட்வைசாக எடுத்துக் கொண்டாலும், பாதகமில்லை. இது உங்களுக்காக எடுத்துக் கொள்ளும் அக்கறை.
குடித்து விட்டு வண்டி ஓட்டுபவரை பிடிக்க, போலீஸ் இருக்கிறது. ஒரு அப்பாவிடம், 7வது படிக்கும் அவர் மகன் கேட்டான். ""அப்போ டாஸ்மாக் கடை வாசல்ல நிக்குதே, அந்த வண்டில வந்தவங்களை, எல்லாம் குடிக்கத் தான் வந்திருக்காங்க. அவங்கள அங்கே புடிக்கலாமே. இதற்கு பதிலை நீங்களே யோசித்துக் கொள்ளுங்கள்.குடித்து விட்டு ஓட்டுபவர்கள் தான், இன்று நடக்கும் சாலை விபத்துகளுக்கு மிக முக்கிய காரணமாக இருக்கின்றனர். அவர்களுக்கு சட்டத்தில் இன்னும் கடுமையான தண்டனைகளை அமல்படுத்தலாம். மாட்டினால், அபராதம் கட்டி விடலாம் என்பது, இவர்களுக்கு இருக்கும், ஒரு வாய்ப்பாக இருக்கிறது. போலீசிடம் மாட்டினால் அபராதம் கட்டலாம். லாரிக்கு அடியில் மாட்டினால்... பயத்தை ஏற்படுத்துவது மட்டும், இந்த கட்டுரையின் நோக்கம் அல்ல. அந்த பயம் ஒரு தீர்மானமான முடிவை, உங்களுக்குள் ஏற்படுத்தாதா என்கிற எதிர்பார்ப்பு தான்.
மேலும் பொது செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|