பதிவு செய்த நாள்
28 ஆக2013
16:43

கடலூர்:தங்கத்தின் விலை திடீர், திடீரென குறைவதும், ஏறுவதுமாக உள்ளதால் மக்கள் தங்கத்தை வாங்குவதைத் தவிர்த்து கையிருப்பில் உள்ளதை விற்பனை செய்வது அதிகரித்துள்ளது. இதனால், நகைக்கடைகளில் விற்பனையின்றி வெறிச்சோடுகிறது.
தங்கத்தின் மீதான மோகம் மக்களுக்கு நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால், அதன் விற்பனை வெகுவாக உயர்ந்து வருகிறது. இதன் காரணமாக தங்க நகைகள் விற்பனை செய்யும் நகைக் கடைகளின் எண்ணிக்கை பல மடங்கு உயர்ந்துள்ளது. இவர்கள், வியாபார போட்டி காரணமாக பல்வேறு சலுகைகள், பரிசு போன்ற திட்டங்களை அறிவித்து வாடிக்கையாளர்களை கவர்ந்து வருகின்றனர்.கடலூர் மாவட்டத்தில் 600க்கும் மேற்பட்ட நகைக்கடைகள் உள்ளன. இவற்றில், தங்கத்தின் விலை, சென்னை விலையை விட கிராமுக்கு 5 ரூபாய் முதல் 10 ரூபாய் வரை கூடுதலாக இருக்கும். இந்நிலையில், மாவட்டத்தில் முன் எப்போதும் இல்லாத வகையில், கடந்த 15 தினங்களாக சென்னை விலையை விட கிராமிற்கு 200 ரூபாய் குறைவாக விற்பனை செய்யப்பட்டு வந்தது. நேற்று முன்தினம் சென்னையில் தங்கம் கிராம் 3,055 ரூபாயாக இருந்த நிலையில் கடலூரில் 2,838 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது.கடலூர் மாவட்ட தங்க சந்தையில், எப்போதும் இல்லாத அளவிற்கு தங்கத்தின் விலை கடுமையாக குறைந்த போதிலும், கடந்த 15 தினங்களாக நகைக் கடைகள் விற்பனையின்றி வெறிச்சோடி வருகிறது. அதே நேரத்தில் தங்கத்தை விற்க வருபவர்களின் எண்ணிக்கை பல மடங்கு உயர்ந்துள்ளது.
இதுகுறித்து கடலூரைச் சேர்ந்த நகைக் கடை உரிமையாளர் ஒருவர் கூறியதாவது:தங்கத்தின் மீதான மோகம் அதிகரித்து வருகிறது. அதற்கேற்ப தங்கத்தை வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்யப்பட்டு வந்தது. இந்நிலையில், இந்திய ரூபாயின் மதிப்பு குறைந்து வந்ததாலும், வங்கிகளில் வைப்பு தொகைகளுக்கான வட்டி குறைவாக இருப்பதால், பொதுமக்கள் தங்கள் சேமிப்புகளை தங்கத்தில் முதலீடு செய்வது அதிகரித்து வருவதால், வங்கிகளில் பொதுமக்கள் சேமிப்பாக முதலீடு செய்திருந்த வைப்பு தொகைகள் குறைந்து வருகிறது.நிலமையை சமாளிக்க மத்திய நிதியமைச்சர், வங்கிகளில் சுத்த (24 கேரட்) தங்க நாணயங்கள் மீதான வரியை உயர்த்தியது. மேலும், தங்க நாணய விற்பனையில் கடும் கட்டுப்பாடுகளை விதித்தது.
இந்நிலையில் தங்கத்தின் விலை கிராமிற்கு 500 ரூபாய் வரை குறைந்தது. இதனால், வங்கி நிர்வாகங்கள், அடகு நகைகளை மீட்டுச் செல்லுமாறு வாடிக்கையாளர்களுக்கு "நோட்டீஸ்' அனுப்பியது.அதில், தங்கத்தின் விலை குறைந்து வருவதால், தாங்கள் அடகு வைத்துள்ள நகைகளை உடனடியாக மீட்டுச் செல்லுமாறு குறிப்பிட்டிருந்ததைக் கண்டு, தங்கத்தின் விலை வீழ்ச்சி அடைந்து வருவதாக கருதி பலர், வங்கிககளில் அடகு வைத்திருந்த நகைகளை மீட்டு, விற்பனை செய்து வருகின்றனர்.
அதே நேரத்தில் உலக சந்தையில் தங்கத்தின் விலை உயர்ந்து வருகிறது. ஆனால், அதே நேரத்தில் இந்திய தங்க விலையை விட உள்ளூர் சந்தையில் கிராமிற்கு 200 ரூபாய் குறைவாகவே 24 கேரட் தங்கம் கிடைக்கிறது.இதன் பயனை வாடிக்கையாளர்களை சென்றடைய வேண்டும் என்பதற்காகவே, தங்கத்தின் விலையை கிராமிற்கு 200 ரூபாய் குறைத்து விற்கப்படுகிறது. இவ்வாறு அவர் கூறினார்.சென்னை விலையை விட கடலூர் மாவட்டத்தில் தங்கத்தின் விலை கிராமுக்கு 200 ரூபாய் குறைவாக இருந்த போதிலும், நகை விற்பனை 10 சதவீதம் மட்டுமே நடைபெற்று வருகிறது. அதே நேரத்தில், தங்கத்தை விற்பனை செய்யும் வாடிக்கையாளர்களின் வருகை 80 சதவீதம் அதிகரித்துள்ளது.விற்பனை இல்லாமல், தங்க கொள்முதல் மட்டுமே நடைபெற்று வருவதால், வாடிக்கையாளர்கள் கொண்டு வரும் தங்கத்தை கடைக்காரர்கள் விலை குறைத்து வாங்குவதாக நுகர்வோர் தரப்பில் கூறப்படுகிறது.
மேலும் பொது செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|