பதிவு செய்த நாள்
16 செப்2013
14:09

டாலருக்கு எதிரான, ரூபாயின் வெளிமதிப்பு சரிவடைந்ததை தொடர்ந்து, நுகர்பொருட்கள் தயாரிப்பு நிறுவனங்கள், சோப்பு, சலவைத் தூள், பற்பசை, அழகு சாதன பொருட்கள் போன்றவற்றின் விலையை, உயர்த்தி வருகின்றன.
இந்துஸ்தான் யூனிலிவர்
குறிப்பாக, நுகர்பொருட்கள் தயாரிப்பு மற்றும் விற்பனையில் ஈடுபட்டு வரும், இந்துஸ்தான் யூனிலிவர், கோல்கேட், ஜி.எஸ்.கே. கன்ஸ்யூமர் போன்ற நிறுவனங்கள், அவற்றின் தயாரிப்புகளின் விலையை, 2 சதவீதம் முதல் 12 சதவீதம் வரை உயர்த்தும் வகையில், நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றன. நுகர் பொருட்கள் துறையில், முன்னணியில் உள்ள, இந்துஸ்தான் யூனிலிவர் நிறுவனம், கடந்த இரண்டு மாதங்களில், இரண்டாவது முறையாக, விலையை உயர்த்த திட்டமிட்டு உள்ளது. இந்நிறுவனம், கடந்த, ஜூலை மாதத்தில், டோவ் மற்றும் லேக்மி ஆகியவற்றின் விலையை, 7 சதவீத அளவிற்கு உயர்த்தியது.
பாதிப்பு
இதுகுறித்து, எடில் வைஸ் நிறுவனத்தின் துணை இயக்குனர் (ஆராய்ச்சி) அபினேஷ் ராய் கூறியதாவது: டாலருக்கு எதிரான, ரூபாய் மதிப்பு சரிவடைந்ததை தொடர்ந்து, நுகர் பொருட்கள் துறை லாப வரம்பு பாதிப்புக்குள்ளாகியுள்ளது. இதை ஈடுகட்டும் வகையில், இத்துறை நிறுவனங்கள், அவற்றின் தயாரிப்புகளின் விலையை உயர்த்தி வருகின்றன. நடப்பாண்டில், ஆகஸ்ட் மாதம் வரையிலுமாக, டாலருக்கு எதிரான ரூபாய் வெளி மதிப்பு, 20 சதவீதம் சரிவடைந்தது. குறிப்பாக, கடந்த மாத இறுதியில், ரூபாயின் மதிப்பு, 68க்கும் மேல் வீழ்ச்சி கண்டது. இது, தற்போது, 63 ரூபாய் என்ற அளவில் உள்ளது.
பாமாயில்
நுகர் பொருட்கள் பிரிவில், சோப்பு தயாரிப்பிற்கு முக்கிய மூலப் பொருளான, பாமாயிலின் விலை, ரூபாய் மதிப்பின் சரிவால் அதிகரித்து உள்ளது. அதேசமயம், டிடர் ஜென்ட் தயாரிப்பிற்கு உதவும், சலவை சோடா சாம்பல் ஆகியவற்றின் விலை, உயரவில்லை என்றாலும், ரூபாய் மதிப்பின் சரிவால், இறக்குமதி செலவினம் அதிகரித்துள்ளது. கடந்த, ஜூன் மாதத்துடன் நிறைவடைந்த காலாண்டில், ஒரு சில மூலப் பொருட்களின் விலை, குறைந்ததையடுத்து, இத்துறை நிறுவனங்கள், சோப்பு மற்றும் டிடர்ஜென்ட்டுகளுக்கு சலுகை திட்டங்களை அறிவித்தன. ஆனால், தற்போது, மூலப் பொருட்களின் விலை உயர்ந்ததையடுத்து, இந்நிறுவனங்கள், அவற்றின் தயாரிப்பு பொருட்களின் விலையை உயர்த்த துவங்கியுள்ளன. இவ்வாறு அபினேஷ் தெரிவித்தார்.
இந்துஸ்தான் யூனிலிவர் நிறுவனத்தை தொடர்ந்து, கோத்ரெஜ் கன்ஸ்யூமர், விப்ரோ மற்றும் ரெக்கிட் பென்கிஸர் ஆகி நிறுவனங்களும், அவற்றின் தயாரிப்புகளின் விலையை உயர்த்த, வாய்ப்புள்ளது என, சந்தையாளர்கள் தெரிவித்தனர். இமாமி நிறுவனம், விலை உயர்வு குறித்து அறிவிப்பு எதுவும் வெளியிடவில்லை. என்றாலும், சந்தை வட்டாரத்தினர், இந்நிறுவனம், அதன் தயாரிப்புகளான, ஜன்டு பாம், போரோ பிளஸ் ஆகியவற்றின் விலையை உயர்த்தி உள்ளதாக, தெரிவித்தனர்.
கோல்கேட் நிறுவனம்
ஆனால், விலை உயர்வு குறித்து, கருத்து வெளியிட விரும்பவில்லை என, இதன் தலைமை செயல் அதிகாரி (நிதி மற்றும் வர்த்தக மேம்பாடு) நரேஷ் பன்சாலி தெரிவித்தார். கோல்கேட் மற்றும் ஜி.எஸ்.கே., ஆகிய நிறுவனங்கள், அவற்றின் தயாரிப்புகளான, கோல்கேட் மேக்ஸ் பிரஷ், கோல்கேட் ஆக்டிவ் சால்ட் மற்றும் சென்சொடைன் ரபிட் ரிலிப் ஆகியவற்றின் விலையை உயர்த்த இருப்பதாக, தெரியவந்துள்ளது.
மேலும் பொது செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|