பதிவு செய்த நாள்
16 செப்2013
14:10

புதுடில்லி: தங்க நகைகளின், இறக்குமதிக்கு தற்போது, 11.5 சதவீதம் வரி விதிக்கப்படுகிறது. இதை, மேலும் உயர்த்த மத்திய நிதியமைச்சகம் திட்டமிட்டு உள்ளது.
ரூபாய் மதிப்பின் சரிவு, நாட்டின் நடப்பு கணக்கு பற்றாக்குறை அதிகரிப்பு போன்ற பிரச்னைகளால், தங்கம், வெள்ளி, பிளாட்டினம் ஆகியவற்றின் மீதான இறக்குமதி வரி, 10 சதவீதமாக உயர்த்தப்பட்டு உள்ளது. ஒரே ஆண்டில், மூன்று முறை, தங்கத்தின் மீதான இறக்குமதி வரி, உயர்த்தப்பட்டு உள்ளது. வரி உயர்வால், சென்ற ஆகஸ்ட் மாதம், தங்கம் இறக்குமதி, 65 கோடி டாலராக, சரிவடைந்தது. இது, இதற்கு முந்தைய ஜூலை மாதத்தில், 220 கோடி டாலராக இருந்தது. தங்கம் இறக்குமதி குறைந்ததால், ஆபரண உற்பத்தியாளர்கள், நேரடியாக வெளிநாடுகளில் இருந்து, தங்க நகைகளை இறக்குமதி செய்யத் துவங்கி உள்ளனர்.
இது, தங்கம் இறக்குமதியை விட, லாபகரமாக உள்ளதாக கூறப்படுகிறது. ஏனெனில், மத்திய அரசு, இரு வாரங்களுக்கு ஒரு முறை, தங்கத்தின் சர்வதேச மதிப்பிற்கேற்ப, அதன் இறக்குமதி மதிப்பை நிர்ணயிக்கிறது. சர்வதேச சந்தையில், தங்கத்தின் விலை குறைந்து உள்ளதால், தங்க ஆபரணங்கள் இறக்குமதியில், மொத்த வியாபாரிகள் மட்டுமின்றி, சில்லரை வியாபாரிகளும் ஈடுபட்டு உள்ளனர். இதையடுத்து, தங்க ஆபரணங்கள் மீதான, இறக்குமதி வரியை உயர்த்த, மத்திய நிதியமைச்சகம் திட்டமிட்டு உள்ளது. விரைவில், இதுகுறித்த அறிவிப்பு வெளியாகும் என்று, எதிர்பார்க்கப்படுகிறது. இத்துடன் மேலும் பல, அத்தியாவசியமற்ற பொருட்களின் இறக்குமதிக்கும், கூடுதல் வரி விதிக்க, மத்திய அரசு திட்டமிட்டு உள்ளது.
மத்திய அரசு எடுத்து வரும் நடவடிக்கைகளால், சென்ற மே மாதம், 2,000 கோடி டாலர் என்ற அளவில் இருந்த, இந்தியாவின் வர்த்தகப் பற்றாக்குறை, ஆகஸ்ட் மாதம், 1,090 கோடி டாலராக குறைந்து உள்ளது. ஏற்றுமதியில், இரட்டை இலக்க வளர்ச்சி கண்டதால், இது சாத்தியமாயிற்று. இதே போன்று, சென்ற நிதிஆண்டில், மொத்த உள்நாட்டு உற்பத்தியில், 4.8 சதவீதமாக இருந்த நாட்டின் நடப்பு கணக்கு பற்றாக்குறையை, நடப்பு நிதியாண்டில், 3.7 சதவீதமாக குறைக்கவும் முயற்சி மேற்கொள்ளப்பட்டு உள்ளது. தங்கம் மீதான இறக்குமதி வரி உயர்வு உள்ளிட்ட, பல்வேறு நடவடிக்கைகள் மூலம், இது சாத்தியம் ஆக வாய்ப்புள்ளது என, பொருளாதார நிபுணர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
மேலும் பொது செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|