பதிவு செய்த நாள்
16 செப்2013
18:35

புதுடில்லி:ரூபாய் மதிப்பு வீழ்ச்சி அடைந்து வருவது கவலையளிப்பதாக இருந்தாலும், வெளிநாட்டு வாழ் இந்தியர்களில், கேரள மாநிலத்தைச் சேர்ந்தவர்கள், இந்த ஆண்டின் முதல் ஆறு மாதங்களில், 75 ஆயிரம் கோடி ரூபாயை, இந்தியாவுக்கு அனுப்பி உள்ளனர். இது ஒரு புதிய சாதனையாகும்.
அமெரிக்க டாலருக்கு எதிராக இந்திய ரூபாய் மதிப்பு, கடந்த வாரம் வரை, வீழ்ச்சியடைந்து இருந்தது. 70 ரூபாயை எட்டும் அளவுக்கு சென்றது. ரிசர்வ் வங்கியின் புது கவர்னர் வரவுக்கு பின், சில மாற்றங்கள் காரணமாக, ரூபாய் மதிப்பு சற்றே கூடி வருகிறது.இந்த சூழ்நிலையிலும், வெளிநாட்டில் வசிக்கும் இந்தியர்கள், இந்தியாவுக்கு பணம் அனுப்புவதில் ஆர்வம் காட்டி வருகின்றனர்.அதிலும் குறிப்பாக, வெளிநாட்டில் வசிக்கும் கேரள மாநிலத்தவர்கள், கடந்தாண்டுடன் ஒப்பிடுகையில், அபரிமிதமாக பணத்தை அனுப்பி உள்ளனர்.
இது தொடர்பாக, மாநில அளவிலான வங்கிகள் கமிட்டி அளித்துள்ள புள்ளி விவரம்:கடந்த, 2012ல், ஜூன் மாதம் வரையிலான, ஆறு மாத காலத்தில், வெளிநாட்டில் உள்ள கேரள மாநிலத்தவர்கள், தங்கள் மாநிலத்திலுள்ள வங்கிகளில் முதலீடு செய்த தொகை, 55,700 கோடி ரூபாய். ஆனால், இந்த ஆண்டில், ஜூன் வரையிலான காலத்தில், 75,900 கோடி ரூபாய்க்கு பணம் அனுப்பியுள்ளனர். இது, முந்தைய ஆண்டை விட, 32.8 சதவீதம் அதிகம்.
கேரளாவைச் சேர்ந்த, 25 லட்சம் பேர் வெளிநாட்டில் வசிக்கின்றனர். இதில், 40 சதவீதத்தினர், ஐக்கிய அரபு நாடுகளிலும், 25 சதவீதத்தினர் சவுதி அரேபியாவிலும் வசிக்கின்றனர். இவர்கள், கேரள மாநிலத்தின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில், 35 சதவீத பங்களிப்பை அளிக்கின்றனர்.
இந்தாண்டு ஜூன் மாதம் வரை, கேரளாவில் உள்ள வங்கிகளில், மொத்தம் டிபாசிட் தொகை, 2.39 லட்சம் கோடி ரூபாய்.இவ்வாறு, புள்ளிவிவரத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.கடந்த, 2012ம் ஆண்டு, மே மாத நிலவரப்படி, வெளிநாட்டில் வசிக்கும் இந்தியர்களின் எண்ணிக்கை, 2.20 கோடி.
மேலும் பொது செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|