பதிவு செய்த நாள்
18 செப்2013
00:30

மும்பை:தங்கத்திற்கான தேவையை கட்டுப்படுத்தும் நோக்கில், நகை கடன்களுக்கான விதிமுறைகளை, ரிசர்வ் வங்கி மேலும் கடுமையாக்கியுள்ளது.இதுகுறித்து, ரிசர்வ் வங்கியின் உத்தரவில் கூறப்பட்டுள்ளதாவது:தற்போது, வங்கி சாரா நிதி நிறுவனங்களில், அடமானம் வைக்கப்படும் நகைகளை மதிப்பீடு செய்வதில், ஒரு நிலையான நடைமுறை எதுவும் பின்பற்றப்படுவது இல்லை.
மதிப்பீடு:அதனால், நகைகளின் மதிப்பு, தன்னிச்சையாக நிர்ணயிக்கப்படுகிறது. அதில், வெளிப்படையான அணுகு முறையும் காணப்படுவதில்லை.இத்தகைய போக்கை தடுக்கும் நோக்கில், அடமானம் வைக்கப்படும் தங்க நகைகளை மதிப்பீடு செய்வதில் ஒரு நிலையான நடைமுறையை பின்பற்ற தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி, அடமானம் வைக்கப்படும் தங்க நகையை, மும்பை தங்கச் சந்தையில், முந்தைய, 30 நாட்கள் வர்த்தகத்தின் முடிவில் காணப்பட்ட, 22 காரட் தங்கத்தின் சராசரி விலையில், மதிப்பிட வேண்டும்.
வங்கி சாரா நிதி நிறுவனம்:தங்க நகையை அடமானமாக பெறும் வங்கி சாரா நிதி நிறுவனம், அவற்றின் சுய முகவரி கொண்ட தாளில், தங்கத்தின் தூய்மை (காரட்டில்)மற்றும் எடை குறித்து,எழுத்துபூர்வமாக, கடனாளிக்கு வழங்க வேண்டும். தங்கத்தின் தூய்மை, 22 காரட்டிற்கும் குறைவாக இருந்தால், அதை, 22 காரட்டாக கணக்கிட்டு, அடமான நகையின் எடையை குறிப்பிட வேண்டும். அதாவது, தங்க நகையின் தரம் குறைவாக இருந்தாலும், அதற்கேற்ற சரியான விகிதத்தில், அதை மதிப்பிட வேண்டும்.தங்க நகைகளின் மதிப்பில், 60 சதவீதம் மட்டுமே, கடன் வழங்க வேண்டும்.
வருமான வரி கணக்கு எண்: தங்க நகைகளை அடமானம் வைத்து, 5 லட்சம் ரூபாய்க்கு மேற்பட்ட தொகையை பெறும் கடனாளிகளிடம் கண்டிப்பாக, வருமான வரி கணக்கு எண் (பான் கார்டு) நகலை வாங்க வேண்டும்.ஒரு லட்சம் ரூபாய்க்கு மேற்பட்ட நகை கடனுக்கான தொகையை, காசோலை மூலமாக மட்டுமே கடனாளிக்கு வழங்க வேண்டும்.நகை கடன் நிறுவனங்கள், அவற்றின் அனைத்து கிளைகளிலும், ஒரே மாதிரியான கடன் ஆவணங்களை பராமரிக்க வேண்டும்.
2-3 நிமிடங்களில் நகைக் கடன் வழங்குவதாக, தவறாக வழிநடத்தும் விளம்பரங்களுக்கு தடை விதிக்கப்படுகிறது.1,000 கிளைகளுக்கு மேல் உள்ள வங்கி சாரா நிதி நிறுவனங்கள், மேலும், கிளைகளை திறக்க, ரிசர்வ் வங்கியிடம் முன் அனுமதி பெறவேண்டும்.தங்க நகைகளை வைப்பதற்கான கிடங்கு அல்லது, அடமான நகைகளுக்கு குறைந்தபட்ச பாதுகாப்பு வசதிகள் இல்லாவிட்டால்,புதிய கிளைகள் திறப்பதற்கு, அனுமதி வழங்கப்படமாட்டாது.
கிளைகள்: நகைகள் அடமானம் வைக்கப்பட்டுள்ள கிளைகள் அமைந்துள்ள நகரம் அல்லது தாலுகாவில் தான், மீட்கப்படாத நகைகளை ஏலம் விட வேண்டும்.அடமான நகைகளை ஏலம் விடும்பொழுது,மும்பை தங்கச் சந்தையில், முந்தைய 30 நாட்கள் வர்த்தகத்தின் சராசரி இறுதி விலையில்,85 சதவீதத்திற்கு குறையாமல்,குறைந்தபட்ச கேட்புத் தொகையாக நிர்ணயிக்க வேண்டும். இவ்வாறு, ரிசர்வ் வங்கியின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் பொது செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|