பதிவு செய்த நாள்
29 செப்2013
01:15

புதுடில்லி:ஏற்றுமதி மண்டலங்களில், ஏற்றுமதி சார்ந்த பொருட்களை தயாரிக்கும் தொழிற்சாலைகளை அமைப்போருக்கு, பல்வேறு சலுகைகள் வழங்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.ஏற்றுமதியை அதிகரித்து, நாட்டின் நடப்பு கணக்கு பற்றாக்குறையை கட்டுப்படுத்தும் நோக்கில், ஊக்குவிப்பு நடவடிக்கை எடுக்கப்பட உள்ளது.
வருமான வரி விலக்கு:கடந்த, 1980ம் ஆண்டு, டிசம்பரில், ஏற்றுமதி செயல்பாட்டு மண்டலங்களில் (இ.பி. இசட்.,) அமைக்கப்படும் ஏற்றுமதி சார்ந்த நிறுவனங்கள் (இ.ஓ.யு.,) திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது.இந்த, ஏற்றுமதி மண்டலங்களில் அமைக்கப்படும் உற்பத்தி சார்ந்த தொழிற்சாலைகளுக்கு, பல்வேறு சலுகைகள் அறிவிக்கப் பட்டன.இத்தொழிற்சாலைகளில் இருந்து, வெளிநாடுகளுக்கு ஏற்றுமதியாகும் பொருட்கள் மூலம் கிடைக்கும் லாபத்திற்கு, 100 சதவீத வருமான வரி விலக்கு சலுகை வழங்கப்பட்டது.மேலும், இந்நிறுவனங்கள், வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யும் மூலப்பொருட்களுக்கு, சுங்க வரியில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டது. இச்சலுகைகள் காரணமாக, ஏற்றுமதி மண்டலங்களில், அதிக அளவில் சிறிய மற்றும் நடுத்தர நிறுவனங்களின் தொழிற்சாலைகள் அமைந்தன.
வேலைவாய்ப்பு:தயாரிப்பு துறையின் உற்பத்தி திறனை மேலும் உயர்த்தவும், அன்னிய முதலீடுகளை ஈர்க்கவும், உள்நாட்டில் வேலைவாய்ப்பை பெருக்கவும், மேற்கண்ட ஊக்குவிப்பு நடவடிக்கைகளை மத்திய அரசு மேற்கொண்டது.இதையடுத்து, நாடு முழுவதும் ஏற்றுமதி செயல்பாட்டு மண்டலங்கள் அதிகளவில் உருவாயின.கடந்த, 2009–10ம் நிதியாண்டு நிலவரப்படி, இத்தகைய மண்டலங்களில், ஏற்றுமதி அடிப்படையிலான, 2,586 தொழில் நிறுவனங்கள் செயல்பட்டு வந்தன. இவை, அந்த நிதியாண்டில், 84,135 கோடி ரூபாய் மதிப்பிற்கு, சரக்கு மற்றும் சேவைகளை ஏற்றுமதி செய்துள்ளன.அது போன்று, மென்பொருள் தொழில்நுட்ப பூங்காக்களில் (எஸ்.டி.பி.எஸ்.,) உள்ள 8,121 நிறுவனங்கள், 2.05 லட்சம் கோடி ரூபாய்க்கு ஏற்றுமதி மேற்கொண்டன. மின்னணு வன்பொருள் தொழில்நுட்ப பூங்காக்களில் (இ.எச்.டி.பி.எஸ்.,) உள்ள, 144 நிறுவனங்கள், 8,028 கோடி ரூபாய் அளவிற்கு ஏற்றுமதி வர்த்தகம் புரிந்துள்ளன.
ஆர்வம் குறைந்தது:இந்த நிலையில், ஏற்றுமதி செயல்பாட்டு மண்டலங்களில் அமைந்துள்ள, நிறுவனங்களுக்கான, 30 ஆண்டு வரிச் சலுகை காலம், கடந்த 2010ம் ஆண்டுடன் முடிவடைந்தது.இதனால், 2010ம் ஆண்டிற்கு பிறகு, இத்தகைய மண்டலங்களில், ஏற்றுமதி சார்ந்த தொழிற்சாலைகள் அமைப்பதற்கான ஆர்வம், தொழில்முனைவோருக்கு குறைந்தது. மேலும், இத்தகைய மண்டலங்களில், அன்னிய முதலீடுகளும் குறைந்தன.இதையடுத்து, மத்திய அரசு, கடந்த 2011ம் ஆண்டு, ஏற்றுமதி சார்ந்த தொழிற்சாலைகள் திட்டத்தை, மறுசீரமைக்க, குழு ஒன்றை நியமித்தது. இக்குழுவின் தலைவராக, நொய்டா சிறப்பு பொருளாதார மண்டல மேம்பாட்டு ஆணையரான எஸ்.சி. பாண்டா, நியமிக்கப்பட்டார்.சேவை வரி:இக்குழு, ஏற்றுமதி சார்ந்த நிறுவனங்களுக்கு, சுங்கம், உற்பத்தி மற்றும் சேவை வரிகளில் இருந்து விலக்களிப்பது உள்ளிட்ட பல்வேறு சலுகைகள் அடங்கிய, 32 அம்ச பரிந்துரைகளை மத்திய அரசுக்கு வழங்கி உள்ளது.
அந்த அறிக்கையில், ஏற்றுமதி மண்டலங்களில் தொழிற்சாலைகளை அமைப்பதற்கான நடைமுறைகளை எளிமைப்படுத்த வேண்டும்; போக்குவரத்து செலவுகளை குறைக்க, நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது உள்ளிட்ட அம்சங்கள் இடம்பெற்றுள்ளன.ஏற்றுமதி மண்டலங்களில் தொழிற்சாலைகள் அமைக்கவும், வெளிப்புறத்தில் கிடங்கு வசதிகள் ஏற்படுத்தவும் மற்றும் இதர வசதிகளை, மென்பொருள் மற்றும் வன்பொருள் தொழில்நுட்ப பூங்காக்களுடன் பகிர்ந்து கொள்ள வசதி செய்ய வேண்டும். இவற்றுக்கான, நிர்வாக நடைமுறை, மண்டலங்களிடையே பாரபட்சமின்றி, ஒரே சீராக இருக்க வேண்டும்.இப்பரிந்துரைகளை அமல்படுத்தும் பட்சத்தில், ஏற்றுமதி மண்டலங்களில், தொழிற்சாலைகள் அமைக்க, தொழில்முனைவோர் ஆர்வத்துடன் முன் வருவர்; இம்மண்டலங்களில் அன்னிய நேரடி முதலீடு அதிகரிக்கும் எனவும், பாண்டா குழு தெரிவித்துள்ளது.
விதிமுறைகள்:இதுகுறித்து, மத்திய வர்த்தகம் மற்றும் வருவாய் துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது;ஏற்றுமதி சார்ந்த நிறுவனங்களுக்கான, விதிமுறைகளை எளிமைப்படுத்துவது உள்ளிட்ட பல்வேறு அம்சங்களை, அரசு பரிசீலித்து வருகிறது. இதன் மூலம், ஏற்றுமதி மண்டலங்களில் தற்போது குறைந்துள்ள, முதலீடுகள் அதிகரிக்கும். அதே சமயம், இந்த மண்டலங்களில் உள்ள நிறுவனங்களுக்கு, வரிச்சலுகைகள் வழங்க அரசு விரும்பாது என்று தெரிகிறது.
முதலீடு சார்ந்த சலுகைகள் வழங்கவே, அரசு விரும்பும். அடுத்த, 10 நாட்களுக்குள் அனைத்து அம்சங்கள் குறித்தும் முடிவெடுக்கப்பட்டு, அறிவிப்பு வெளியாகும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.நடப்பு 2013–14ம் நிதிஆண்டில், ஏப்ரல் முதல் ஆகஸ்ட் வரையிலான ஐந்து மாதங்களில், நாட்டின் ஒட்டு மொத்த ஏற்றுமதி, 3.89 சதவீதம் உயர்ந்து, 12,440 கோடி டாலராக அதிகரித்து உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் பொது செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|