பதிவு செய்த நாள்
06 அக்2013
12:41

போலி சரக்கு மற்றும் விலைவாசி உயர்வு போன்ற காரணங்களால், டாஸ்மாக் நிறுவனத்தின் மதுபான விற்பனை, தொடர்ந்து, சரிவடைந்து வருகிறது.
தமிழகத்தில் 6,800க்கும் மேற்பட்ட, டாஸ்மாக் கடைகள் உள்ளன. இந்த கடைகளில், நாள்தோறும், சராசரியாக, 67 கோடி ரூபாய் மதிப்பிலான, மது வகைகள் விற்பனையாகின்றன. டாஸ்மாக் கடைகளில், உள்நாட்டில் தயாரிக்கப்படும் அயல்நாட்டு மது வகைகள் (ஐ.எம்.எப்.,) மற்றும் பீர் வகைகள், அரசு நிர்ணயம் செய்துள்ள விலையில் விற்கப்படுகின்றன. சென்ற செப்டம்பர் மாதம், 2.88 கோடி பாட்டில்களை உள்ளடக்கிய, 24 லட்சம் பெட்டி பீர் மட்டுமே விற்பனையாகியுள்ளது. இதன் மதிப்பு, 288 கோடி ரூபாய். அதேசமயம், கடந்த ஆகஸ்ட் மாதம், 324 கோடி ரூபாய் மதிப்பிலான, 27 லட்சம் பெட்டி பீர் விற்பனையானது.
இது, கடந்த ஜூலை மாதம், 29 லட்சம் பெட்டிகளாக இருந்தது. மது வகைகள் விற்பனை, ஜூலை, ஆகஸ்ட் மற்றும் செப்டம்பர் மாதங்களில் முறையே, 46 லட்சம், 45 லட்சம் மற்றும், 43 லட்சம் பெட்டிகள் குறைந்துள்ளன. டாஸ்மாக் விற்பனை தொடர் சரிவுக்கு, போலி சரக்கு விற்பனையே காரணம் என, கூறப்படுகிறது.
அண்டை மாநில சரக்கை பார்களில் நேரடியாக விற்பனை செய்தல், வெளி மாநில சரக்கை, கடைகளில் உள்ள காலி பாட்டிலில் ஊற்றி விற்பனை செய்தல், போலி சரக்கை விற்பனை செய்தல் போன்ற, மூன்று விதமான முறைகேடுகள், தொடர்ந்து நடப்பதாக கூறப்படுகிறது. மேலும், பெட்ரோல், டீசல் விலை உயர்வு உள்ளிட்ட காரணங்களால், பெரும்பாலான, 'குடிமகன்'கள் தங்கள் செலவை குறைத்துள்ளனர். இதுவும், சரக்கு விற்பனை சரிவுக்கு காரணம் என, தெரிய வந்துள்ளது.
இதுகுறித்து, டாஸ்மாக் மாவட்ட மேலாளர் ஒருவர் கூறியதாவது: டாஸ்மாக் நிறுவனம், சில்லரை விற்பனையில் மதுபான கடையை துவக்கிய போது, அதன் விற்பனை மற்றும் செயல்பாடுகள் குறித்து, அனைத்து மாவட்ட எஸ்.பி.யுடன், தொடர்ந்து, கலந்தாய்வு கூட்டம் நடத்தப்படும். அப்போது, உள்ளூர் பிரச்னை முதல், அனைத்து விவரங்களும் துல்லியமாக பரிமாறி கொள்ளப்பட்டது. தற்போது, டாஸ்மாக் ஆய்வு கூட்டங்களில், மது விலக்கு போலீசார் மட்டுமே பங்கேற்கின்றனர். இவர்கள், எண்ணிக்கை குறைவாக இருப்பதால், கண்காணிப்பு பணி தொய்வு ஏற்பட்டுள்ளது. இதனால், அண்டை மாநிலங்களில் இருந்து, சுலபமாக சரக்குகள் கொண்டு வரப்பட்டு, விற்பனை செய்யப்படுகின்றது. இவ்வாறு அவர் கூறினார்.
மேலும் பொது செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|