பதிவு செய்த நாள்
06 அக்2013
16:04

மத்திய அரசின் சார்பில் ஐந்து கிலோ எடை கொண்ட சிறிய எரிவாயு உருளை (காஸ் சிலிண்டர்) திட்டத்தை மத்திய இணை அமைச்சர் பனபகா லட்சுமி நேற்று சென்னையில் அறிமுகப்படுத்தி, விற்பனையை துவக்கி வைத்தார்.
ஐ.டி.,நிறுவனங்களில் பணிபுரிபவர்கள், கல்லூரி மாணவர்கள், தனியாக வேலை பார்க்கும் இளைஞர்கள் ஊர் விட்டு ஊர்வந்து நகரங்களில் வேலை பார்க்கும்போது, எரிவாயு உருளை இணைப்பு பெருவது மிகவும் கடினமான ஒன்றாகும். அதுபோன்றவர்களின் வசதிக்காக மிகவும் எளிய முறையில் எரிவாயு உருளைகளை பெறும் வகையில் மத்திய அரசின் சார்பில் ஐந்து கிலோ எடை கொண்ட எரிவாயு உருளைகளை தயாரித்துள்ளது. அவற்றை நாட்டின் முக்கிய நகரங்களான டில்லி, கொல்கத்தா, சென்னை, மும்பை, பெங்களூரு ஆகியவற்றில் பரிசோதனை அடிப்படையில் நேற்று அறிமுகப்படுத்தியது.
சென்னை, அடையாறு எல்.பி., சாலையில் உள்ள ஐ.ஓ.பி., பெட்ரோல் நிலையத்தில் ஐந்து கிலோ எரிவாயு உருளை அறிமுகப்படுத்தும் விழா நேற்று நடந்தது. விழாவில், இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் மாநில ஒருங்கிணைப்பு செயல் இயக்குனர் ஜெயச்சந்திரன் வரவேற்றார். பெட்ரோலியம், இயற்கை எரிசக்தி துறை இணை அமைச்சர் பனபகா லட்சுமி ஐந்து கிலோ எரிவாயு உருளை,, காஸ் இணைப்புகளை விருப்பப்படும் நிறுவனத்திற்கு மாற்றும் திட்டங்களை அறிமுகப்படுத்தி பேசியதாவது: பெட்ரோலியம், இயற்கை வாயு அமைச்சகம் வாடிக்கையாளர்களுக்கு நல்ல பலன்களை அளிக்கும் பல்வேறு முயற்சிகளை எடுத்து வருகிறது. மார்க்கெட் விலையில் ஐந்து கிலோ எரிவாயு உருளைகளை பெட்ரோல் நிலையங்கள் மூலம் விற்பனை செய்யப்படுகிறது.
முதல்கட்டமாக பெரு நகரங்களில் குறிப்பிட்ட பெட்ரோல் நிலையங்களில் மட்டும் விற்பனை செய்யப்படும். இடம் விட்டு இடம் பெயரும் மாணவர்கள், தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களில் பணிபுரிவோர், பி.பி.ஓ.,நிறுவன ஊழியர்கள், அகால நேரங்களில் பணிபுரிபவர்களுக்கு இந்த வகை எரிவாயு உருளை மிகவும் பயனுள்ளதாக அமையும். அதேபோல, போர்ட்டபிலிட்டி திட்டமும் அறிமுகப்படுத்தப்படுகிறது. இதன்படி சமையல் எரிவாயு வாடிக்கையாளர்கள் ஒரு நிறுவனத்தில் இருந்து மற்றொரு நிறுவனத்திற்கு தங்களை இணைப்புகளை மாற்றிக்கொள்ளலாம். இதை இணையதளம் மூலம் விண்ணப்பித்து மாற்ற வழி செய்யப்பட்டுள்ளது. இந்த திட்டம் நாடு முழுவதும் 30 நகரங்களில் அறிமுகப்படுத்தப்படுகிறது. மேலும், நாட்டு மக்கள் எரிவாயு, பெட்ரோல், டீசல் ஆகியவற்றில் சிக்கனத்தை கடைபிடிக்க வேண்டும். பள்ளிகளுக்கு பிள்ளைகளை விட செல்லும்போது, காருக்கு பதிலாக இருசக்கர வாகனம், அரசு பேருந்துக்களை பயன்படுத்தவேண்டும். இவ்வாறு மத்திய இணை அமைச்சர் பனபகா லட்சுமி பேசினார்.
தற்போது அறிமுகப்படுத்தியுள்ள ஐந்து கிலோ எரிவாயு உருளை சென்னையில் அடையாறு, அண்ணாநகர், மாதவரம் ஆகிய இடங்களல் சோதனை அடிப்படையில் முதல்கட்டமாக விற்பனை செய்யப்படுகிறது. மேலும், 15 இடங்களுக்கு மேல் விற்பனை செய்ய இடங்கள் தேர்வு செய்யப்படவுள்ளன. இந்த எரிவாயு உருளையை யார் வேண்டுமானாலும் வாங்கிக் கொள்ளலாம். ஏதேனும் ஒரு அடையாள அட்டை வழங்கினால் மட்டும் போதும். தற்போது, காலை 8 மணி முதல் இரவு 8 மணிவரை விற்பனை செய்யப்படவுள்ளது. விரைவில் 24 மணிநேர சேவையாக மாற்றப்படும். ஒரு மாதத்தில் 600 எரிவாயு உருளைகள் வரை விற்பனை செய்ய திட்டமிடப்பட்டுள்ளது என ஐ.ஓ.சி.,அதிகாரிகள் தெரிவித்தனர்.
புதிய எரிவாயு உருளை விலை: மத்திய அரசு புதியதாக அறிமுகப்படுத்தியுள்ள ஐந்து கிலோ எரிவாயுவுடன் உருளையின் விலை ஆயிரத்து 649 ரூபாய்; ரெகுலேட்டர் 286 ரூபாய்; உருளையில் இருந்த அடுப்பு இணைப்பு ரப்பர் குழாய் 170; பதிவு கட்டணம் 25 ரூபாய்; இது இல்லாமல் 12.6 சதவீதம் வரி என அனைத்தும் சேர்த்து இரண்டாயிரத்து 133 ரூபாய் பெறப்படுகிறது. ஒவ்வொரு முறையும் உருளையில் ஐந்து கிலோ எரிவாயு நிரப்ப 504 ரூபாய் வசூலிக்கப்படுகிறது;
எல்லாரும் ஸ்டண்ட் அடிக்குறாங்க: சிறிய எரிவாயு உருளையை அறிமுகப்படுத்திய மத்திய இணை அமைச்சர் ஆந்திரா இரண்டாக பிரிப்பது குறித்து கருத்து கூறுகையில், "நான் காங்கிரஸ் கட்சியின் தீவிர தொண்டன். மத்திய அரசின் நிலைப்பாடே எனது நிலைப்பாடு. ஆந்திராவை பிரிபதற்கு தற்போது எதிர்ப்பு தெரிவித்து வரும் சந்திரபாபு நாயுடு, ஜெகன்மோகன் ரெட்டி உள்ளிட்டோர் ஆரம்பத்தில் ஆதரவு தெரிவித்தவர்கள்தான். இதெல்லாம் அரசியல் "ஸ்டண்ட்' என்றார்.
மேலும் பொது செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|