பதிவு செய்த நாள்
09 அக்2013
00:38

புதுடில்லி:நாட்டின் நிலக்கடலை உற்பத்தி, நடப்பாண்டு கரீப் பருவத்தில் (ஜூன்–செப்.,) 55.69 லட்சம் டன்னாக உயரும் என, மத்திய வேளாண் அமைச்சகத்தின் முதலாவது முன்கூட்டிய மதிப்பீட்டு அறிக்கையில் தெரிவிக்கப் பட்டுள்ளது.சென்ற ஆண்டின் இதே காலத்தில், நாட்டின் நிலக்கடலை உற்பத்தி, 31 லட்சம் டன்னாக இருந்தது.
உற்பத்தி:நாடு முழுவதும் குறித்த காலத்தில் மழை பொழிந்ததும், வழக்கத்தை விட, 6 சதவீதம் கூடுதலாக மழை பொழிவு இருந்ததாலும், உணவு தானியங்களின் உற்பத்தியில், இந்தியா சாதனை படைக்கும் என, மதிப்பிடப்பட்டுள்ளது.இது குறித்து இந்திய எண்ணெய் உற்பத்தியாளர்கள் கூட்டமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கை:
நடப்பாண்டு கரீப் பருவத்தில், குஜராத்தில் நிலக்கடலை பயிரிடும் பரப்பளவு, 36 சதவீதம் அதிகரித்து, 16.60 லட்சம் ஹெக்டேராக உயர்ந்துள்ளது.இது, சென்ற ஆண்டு, இதே காலத்தில், 12.24 லட்சம் ஹெக்டேராக இருந்தது.நடப்பாண்டு, ஒரு ஹெக்டேரில்,நிலக்கடலை உற்பத்தி, சராசரியாக, 1,560 கிலோ என்ற அளவில், இரு மடங்கு அதிகரிக்கும் என, மதிப்பிடப்பட்டுள்ளது. இது, கடந்த ஆண்டு, 760 கிலோவாக இருந்தது.
ஜூன் மாத துவக்கத்தில் நடப்பட்ட நிலக்கடலை பயிர், தற்போது நன்கு வளர்ச்சி கண்டு, முதிர்ச்சி அடைந்துள்ளது. அறுவடைக்கு வறண்ட வானிலை தேவைப்படுகிறது.ஆனால், தற்போது ஒரு சில பகுதிகளில் மழை பெய்து வருகிறது. இந்த மழை தொடர்ந்து நீடித்தால், நன்கு விளைந்துள்ள நிலக்கடலை பயிர் பாதிக்கப்படும். இதனால், நிலக்கடலை உற்பத்தி, 5–7 சதவீதம் குறையவும் வாய்ப்புள்ளது.
வறட்சி நிலை:கடந்த ஆண்டு, குஜராத்தின் சவுராஷ்டிரா பகுதிகளில், கடுமையான வறட்சி காணப்பட்டது. இதனால், குஜராத்தின் நிலக்கடலை உற்பத்தி, 6.95 லட்சம் டன்னாக சரிவடைந்தது. ஆனால், நடப்பு ஆண்டு கரீப் பருவத்தில், குஜராத்தில் நிலக்கடலை உற்பத்தி, சாதனை அளவாக, 25.95 லட்சம் டன்னாக உயரும் என, எதிர்பார்க்கப்படுகிறது.இதற்கு, நிலக்கடலை பயிரிடும் பரப்பளவு அதிகரித்துள்ளதும் காரணமாகும்.
சோயா புண்ணாக்கு:சென்ற செப்டம்பருடன் முடிவடைந்த, 2012–13ம் எண்ணெய் பருவத்தில், நாட்டின் சோயா புண்ணாக்கு ஏற்றுமதி, ரூபாய் மதிப்பின் அடிப்படையில், 36 சதவீதம் உயர்ந்துள்ளது.அதே சமயம், சோயா புண்ணாக்கு ஏற்றுமதி, அளவின் அடிப்படையில், 4 சதவீதம் குறைந்து, 34.73 லட்சம் டன்னாக சரிவடைந்துள்ளது. இது, 2011–12ம் எண்ணெய் பருவத்தில், 36.23 லட்சம் டன்னாக இருந்தது.
அரவைக்கு போதுமான அளவிற்கு எண்ணெய் வித்துக்கள் கிடைக்காததால், மதிப்பீட்டு காலத்தில், சோயா புண்ணாக்கு ஏற்றுமதி குறைந்துள்ளது.சென்ற எண்ணெய் பருவத்தில், ஈரான், ஜப்பான், பிரான்ஸ், தாய்லாந்து, வியட்னாம், இந்தோனேஷியா, கொரியா ஆகிய நாடுகளுக்கு, அதிக அளவில் சோயா புண்ணாக்கு ஏற்றுமதி செய்யப்பட்டது.சென்ற செப்டம்பர் மாதத்தில் மட்டும், 1.73 லட்சம் டன் சோயா புண்ணாக்கு ஏற்றுமதி செய்யப்பட்டது. இது, கடந்த ஆண்டின், இதே காலத்தில், 2,864 டன் என்ற அளவிற்கு மிக குறைவாக இருந்தது.
ஏற்றுமதி:நடப்பு நிதியாண்டில், சென்ற ஏப்ரல் முதல் செப்டம்பர் வரையிலான அரையாண்டில், சோயா புண்ணாக்கு ஏற்றுமதி, 4.68 சதவீதம் உயர்ந்து, 8.76 லட்சம் டன்னாக அதிகரித்துள்ளது. இது, சென்ற நிதியாண்டின் இதே காலத்தில், 8.37 லட்சம் டன்னாக இருந்தது.சென்ற, எண்ணெய் பருவத்தில், சோயா ஏற்றுமதி, 7,745 கோடி ரூபாயில் இருந்து, 10,558 கோடி ரூபாயாக உயர்ந்திருக்கும் என, மதிப்பிடப்பட்டு உள்ளது.
மேலும் கம்மாடிட்டி செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|