பதிவு செய்த நாள்
09 அக்2013
00:41

புதுடில்லி:சென்ற செப்டம்பரில், உள்நாட்டில், கார்கள் விற்பனை எண்ணிக்கை, 1.56 லட்சமாக வளர்ச்சி கண்டுள்ளது. இது, நடப்பு நிதியாண்டில், இதுவரை இல்லாத அதிகபட்ச அளவாகும் என, இந்திய மோட்டார் வாகன தயாரிப்பாளர் சங்கம் (சியாம்) தெரிவித்துள்ளது.
பருவமழை:இது குறித்து, ‘சியாம்’ அமைப்பின் தலைவர் விக்ரம் கிர்லோஸ்கர் மேலும் கூறியதாவது:பொருளாதார மந்த நிலை காரணமாக, நடப்பு நிதியாண்டில் வாகன விற்பனை சரிவடைந்துள்ளது. இந்நிலையில், சென்ற செப்டம்பரில், எண்ணிக்கை அடிப்படையில், பயணிகள் கார்கள் மற்றும் இருசக்கர வாகனங்கள் விற்பனை சிறப்பான அளவில் வளர்ச்சி கண்டுள்ளது. பருவமழை நன்கு உள்ளதால், வரும் மாதங்களிலும், வாகனங்கள் விற்பனை சிறப்பாக இருக்கும் என, எதிர்பார்க்கப்படுகிறது.
இருப்பினும், நடப்பு 2013ம் நிதியாண்டின் முதல் ஆறு மாதங்களில், கார் விற்பனை, 4.67 சதவீதம் குறைந்துள்ளது. இது, கடந்த 2002–03ம் நிதியாண்டிற்கு (6.96 சதவீதம்) பிறகு ஏற்பட்ட மிகப் பெரும் சரிவாகும்.நடப்பாண்டு செப்டம்பரில், பயணிகள் கார் விற்பனை, கடந்தாண்டின் இதே மாதத்தை காட்டிலும், 0.73 சதவீதம் உயர்ந்து, 1,54,884 என்ற எண்ணிக்கையிலிருந்து, 1,56,018 ஆக சற்று வளர்ச்சி கண்டுள்ளது.இதில், வாகன தயாரிப்பு மற்றும் விற்பனையில் முதலிடத்தில் உள்ள மாருதி சுசூகி நிறுவனத்தின், உள்நாட்டு கார் விற்பனை, 14.52 சதவீதம் வளர்ச்சி கண்டு, 68,957லிருந்து, 78,975 ஆக வளர்ச்சி கண்டுள்ளது.
அதேசமயம், ஹூண்டாய் மோட்டார் நிறுவனத்தின் கார் விற்பனை, 30,795 என்ற எண்ணிக்கையிலிருந்து, 30,580 ஆக சற்று குறைந்துள்ளது.இதே போன்று, டாட்டா மோட்டார்ஸ் நிறுவனத்தின் வாகன விற்பனையும், 42.99 சதவீதம் சரிவடைந்து, 17,133லிருந்து, 9,766 ஆக குறைந்துள்ளது.
வட்டி விகிதம்:வாகன கடனுக்கான வட்டி விகிதம் அதிகமாக இருப்பது, பணவீக்கம் மற்றும் எரிபொருள் விலை உயர்வு போன்றவை, நுகர்வோரை மிகவும் பாதித்துள்ளது.இதனால், ஒட்டு மொத்த அளவில், உள்நாட்டில் வாகன விற்பனை மந்தமடைந்துள்ளது.இது, இத்துறையில் பணிபுரியும், ஒப்பந்த தொழிலாளர்கள், பயிற்சியாளர்கள், உதிரிபாக தயாரிப்பாளர்கள் மற்றும் வினியோகஸ்தர்களை பெரிதும் பாதிப்புக்குள்ளாக்கியுள்ளது.எனவே, உள்நாட்டில், வாகன விற்பனையை துரிதப்படுத்தும் வகையில், ஊக்குவிப்பு சலுகை திட்டங்களை விரைந்து செயல்படுத்த மத்திய அரசை வலியுறுத்திவருகிறோம். இவ்வாறு, கிர்லோஸ்கர் கூறினார்.
மேலும் ஆட்டோமொபைல் செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|