பதிவு செய்த நாள்
09 அக்2013
00:47

புதுடில்லி:நடப்பு, 2013–14ம் நிதியாண்டில், ஏப்ரல் முதல் செப்டம்பர் வரையிலான, ஆறு மாத காலத்தில், நாட்டின் இயற்கை ரப்பர் இறக்குமதி, 1.79 லட்சம் டன்னாக அதிகரித்து உள்ளது.இது, கடந்த நிதியாண்டின் இதே காலத்தில் மேற்கொள்ளப்பட்ட இறக்குமதியை விட, 52.9 சதவீதம் அதிகம் என, ரப்பர் வாரியம் வெளியிட்டுள்ள புள்ளிவிவரத்தில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
டயர் நிறுவனங்கள்:சென்ற செப்டம்பர் மாதத்தில் மட்டும், இயற்கை ரப்பர் இறக்குமதி, 45,581 டன்னாக அதிகரித்து உள்ளது. இது, கடந்தாண்டின் இதே மாதத்தில், 14,779 டன்னாக இருந்தது.கடந்த, 2012–13ம் நிதியாண்டில், நாட்டின் இயற்கை ரப்பர் இறக்குமதி, 2.17 லட்சம் டன்னாக இருந்தது. இது, இதற்கு முந்தைய நிதியாண்டில், 2.14 லட்சம் டன்னாக குறைந்து காணப்பட்டது.
உள்நாட்டில், ரப்பர் உற்பத்திகுறைந்ததால், இந்திய டயர் தயாரிப்பு நிறுவனங்கள், தேவையை பூர்த்தி செய்து கொள்ள, அதிக அளவில் இயற்கை ரப்பரைஇறக்குமதி செய்து வருகின்றன. ரப்பர் வடிப்பு காலத்தில், கேரள மாநிலத்தில், அதிக மழைப் பொழிவால், இதன் உற்பத்தி குறைந்து போனது. இதன் காரணமாகவே, இயற்கை ரப்பரை அதிகளவில் இறக்குமதி செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது என, மோட்டார் வாகன டயர் தயாரிப்பு நிறுவனங்கள் கூட்டமைப்பின் தலைமை இயக்குனர் ராஜீவ் புத்தராஜா தெரிவித்தார்.நடப்பு நிதியாண்டின் முதல் ஆறு மாத காலத்தில், இயற்கை ரப்பர் உற்பத்தி, முந்தைய நிதியாண்டின் இதே காலத்தை விட, 13.3 சதவீதம் குறைந்து, 3.43 லட்சம் டன்னாக சரிவுஅடைந்துள்ளது.
மலேசியா:சென்ற செப்டம்பர் மாதத்திலும், இதன் உற்பத்தி, கடந்தாண்டின் இதே மாதத்தைவிட, 4.9 சதவீதம் குறைந்து, 78 ஆயிரம் டன்னாக இருந்தது.உலகளவில், இயற்கை ரப்பர் உற்பத்தியில், இந்தியா, 4வது இடத்தில் உள்ளது. இருப்பினும், உள்நாட்டு தேவையை பூர்த்தி செய்யும் அளவிற்கு, ரப்பர் உற்பத்தி இல்லாததால், நம் நாடு, மலேசியா, தாய்லாந்து மற்றும் இந்தோனேசியா ஆகிய நாடுகளிலிருந்து, இதை இறக்குமதி செய்து கொள்கிறது.
நாட்டின் ஒட்டு மொத்த இயற்கை ரப்பருக்கான தேவையில், டயர் தயாரிப்பு நிறுவனங்களின் பங்களிப்பு, 60 சதவீத அளவிற்கு உள்ளது.நடப்பு நிதியாண்டில், இதுவரையிலுமாக, டாலருக்கு எதிரான ரூபாய் மதிப்பு, 14 சதவீதம் சரிவடைந்துள்ளது. இந்நிலையிலும், உள்நாட்டை விட, அயல்நாடுகளில், இதன் விலை குறைவாக உள்ளது. இதற்கு எடுத்துகாட்டாக, பாங்காக் சந்தையில், ஒரு குவிண்டால் ஆர்.எஸ்.எஸ்–3 வகை இயற்கை ரப்பரின் விலை, 15,347 ரூபாயாக உள்ளது.
இது, இதற்கு இணையான, இந்திய ரப்பர் விலையை விட, 8.5 சதவீதம் குறைவாகும்.ஆனால், இறக்குமதியாகும், ஒரு கிலோ ரப்பருக்கு, 20 ரூபாய் சுங்க வரி விதிக்கப்படுகிறது. இதனால், இறக்குமதியாகும் ரப்பரின் விலை, அதிகமாக உள்ளது. என்றாலும், தேவையை பூர்த்தி செய்யும் அளவிற்கு உள்நாட்டில், இயற்கை ரப்பர் இல்லாததால்,இதை இறக்குமதி செய்ய வேண்டியுள்ளது என, ராஜீவ் புத்தராஜா குறிப்பிட்டார்.
இறக்குமதி வரி:உள்நாட்டு விவசாயிகளும், வர்த்தகர்களும், ஒரு கிலோ இயற்கை ரப்பர் மீதான இறக்குமதி வரியை, தற்போதைய, 20 ரூபாயிலிருந்து, 34 ரூபாயாக அதிகரிக்கும்படி, மத்திய அரசுக்கு கோரிக்கை விடுத்தனர்.ஆனால், இயற்கை ரப்பர் மீதான வரியை உயர்த்தினால், அது, உள்நாட்டு டயர் தயாரிப்பு நிறுவனங்களை பாதிக்கும் என்பதால், மத்திய அரசு, இக்கோரிக்கையை நிராகரித்தது.
நடப்பு நிதியாண்டில், இந்தியாவின் இயற்கை ரப்பர் இறக்குமதி, 2.50 லட்சம் டன்னாக அதிகரிக்க வாய்ப்புள்ளது என, இத்துறையைச் சேர்ந்தவர்கள் தெரிவித்தனர்.
மேலும் பொது செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|