பதிவு செய்த நாள்
19 அக்2013
01:24

புதுடில்லி:நடப்பு நிதியாண்டின் முதல் ஆறு மாத காலத்தில், இந்திய நிறுவனங்கள், உரிமை பங்கு வெளியீடு வாயிலாக திரட்டிய தொகை, 68 சதவீதம் சரிவடைந்து, 2,166 கோடி ரூபாயாக குறைந்துள்ளது.
கடந்த நிதியாண்டின் இதே காலத்தில், நிறுவனங்கள் திரட்டிய தொகை, 6,749 கோடி ரூபாயாக மிகவும் அதிகரித்து காணப்பட்டது என, பிரைம் டேட்டாபேஸ் ஆய்வு நிறுவனம் தெரிவித்துள்ளது.இது குறித்து இந்நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் பிரணவ் ஹால்டியா கூறியதாவது:
மதிப்பீட்டு காலத்தில், 9 நிறுவனங்கள், உரிமை பங்கு வெளியீடு வாயிலாக நிதியை திரட்டி கொண்டுள்ளன. இந்த எண்ணிக்கை, கடந்த நிதியாண்டின் இதே காலத்தில், 10 ஆக இருந்தது.நடப்பு நிதியாண்டில் இதுவரையிலுமாக, பங்கு வர்த்தகம், அதிக ஏற்ற, இறக்கத்துடன் காணப்படுகிறது. இந்நிலையில், நிறுவனங்கள் விரிவாக்க நடவடிக்கைகளை மேற்கொள்ள, நிதி திரட்டும் ஆர்வமும் குறைந்துள்ளது.
இது போன்ற காரணங்களால், உரிமை பங்கு வெளியீடு வாயிலாக, நிறுவனங்கள் நிதி திரட்டி கொள்வது குறிப்பிடத்தக்க அளவிற்கு குறைந்துள்ளது.
நடப்பு நிதியாண்டின் எஞ்சிய காலத்திலும், இவ்வகை வெளியீ்டுகள்மூலம், குறைந்த அளவு நிறுவனங்களே நிதி திரட்டிக்கொள்ளும் என, எதிர்பார்க்கப் படுகிறது. இதனை எடுத்துக்காட்டும் வகையில், 652 கோடி ரூபாயை திரட்டி கொள்ள, 13 நிறுவனங்கள் மட்டுமே, பங்குச் சந்தை கட்டுப்பாட்டு அமைப்பான ‘செபி’யிடம் அனுமதி வேண்டி விண்ணப்பித்துள்ளன.இவ்வாறு பிரணவ் கூறினார்.
நடப்பு நிதியாண்டின் முதல் ஆறு மாத காலத்தில், உரிமை பங்கு வெளியீடு வாயிலாக, கோத்ரெஜ் நிறுவனம், மிகவும் அதிகபட்சமாக, 700 கோடி ரூபாயை திரட்டி கொண்டுள்ளது.இதனை தொடர்ந்து, ரிலையன்ஸ் மீடியாஒர்க்ஸ் (600 கோடி ரூபாய்), கிஷோரம் இண்டஸ்ட்ரீஸ் (416 கோடி ரூபாய்) ஆகிய நிறுவனங்கள் உள்ளன.ஒரு நிறுவனம், அதன் பங்குதாரர்களுக்கு, முன்னரே நிர்ணயிக்கப்பட்ட விலையில், சலுகை அடிப்படையில், பங்குகளை ஒதுக்கீடு செய்து, நிதி திரட்டி கொள்வதே உரிமை பங்கு வெளியீடாகும்.
மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|