பதிவு செய்த நாள்
19 அக்2013
01:31

புதுடில்லி:"பொதுத்துறை நிறுவனங்கள், கடந்த நிதியாண்டை விட, நடப்பு நிதியாண்டில், அதிக டிவிடெண்டு வழங்க வேண்டும்," என, மத்திய நிதி அமைச்சர் ப.சிதம்பரம் தெரிவித்தார்.
பேச்சுவார்த்தை:டில்லியில், பொதுத் துறை நிறுவன தலைவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்திய பின்னர், அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:நடப்பு நிதியாண்டிற்கு, பொதுத்துறை நிறுவனங்கள் வழங்கும் டிவிடெண்டு, கடந்த நிதியாண்டை விட, குறைவாக இருக்கக் கூடாது. அதை மத்திய அரசு ஏற்காது. கடந்த நிதியாண்டில், பொதுத் துறை நிறுவனங்கள் மூலம், லாபம் மற்றும் டிவிடெண்டாக, 55,443 கோடி ரூபாய் கிடைத்தது. நடப்பு நிதியாண்டிற்கு, 73,866 கோடி ரூபாய் பெற இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
முதலீடு மற்றும் வளர்ச்சியை கருத்தில் கொண்டு, பெரும்பாலான பொதுத்துறை நிறுவனங்கள், அவற்றின் உற்பத்திதிறன் விரிவாக்க திட்ட இலக்கை எட்டியுள்ளன. திட்டத்தை நிறைவேற்றாமல் உள்ள ஐந்தாறு நிறுவனங்கள் குறித்து, ஜனவரியில் ஆய்வு மேற்கொள்ளப்படும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.
பொதுத்துறையை சேர்ந்த ஓ.என்.ஜி.சி., நிறுவனத்தின் தலைவர் சுதிர் வாசுதேவா கூறியதாவது:நடப்பு நிதியாண்டில், 35 ஆயிரம் கோடி ரூபாய் செலவில், விரிவாக்க திட்டத்திற்கான இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதில், முதல் அரையாண்டிற்கு, 14 ஆயிரம் கோடி ரூபாய் என, இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதில், 99.3 சதவீதம் செலவிடப்பட்டுள்ளது. முழு நிதியாண்டிற்கான இலக்குஎட்டப்படும். நிறுவனத்திடம், 13 ஆயிரம் கோடி ரூபாய் ரொக்கம் உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.
செயில்நிறுவனதலைவர் சி.எஸ். வர்மாகூறும்போது, 'முழு நிதிஆண்டில், விரிவாக்க திட்டத்திற்கு, 11,500 கோடி ரூபாய் செலவிட இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. முதல் அரையாண்டில், இலக்கு தொகையில், 87 சதவீதம் எட்டப்பட்டுள்ளது' என்று தெரிவித்தார்.
நடப்பு நிதியாண்டில், மொத்த உள்நாட்டு உற்பத்தியில், நிதிப் பற்றாக்குறையை, 4.8 சதவீதமாக குறைக்க, மத்திய அரசு இலக்கு நிர்ணயித்துள்ளது.பொதுத் துறை நிறுவனங்களின் பங்கு விற்பனை மற்றும் அவை வழங்கும் டிவிடெண்டு மூலம், நிதியாதாரத்தை அதிகரித்துக் கொள்ளவும் திட்டமிடப்பட்டுஉள்ளது.
பங்கு விற்பனை:நடப்பு நிதியாண்டில், பொதுத்துறை நிறுவனங்களின் பங்கு விற்பனை மூலம், 40 ஆயிரம் கோடி ரூபாய் திரட்ட இலக்கு நிர்ணயித்துள்ளது. இதில், தற்போது, 1,400 கோடி ரூபாய் என்றஅளவிற்கே திரட்டப்பட்டுள்ளது. அதனால், நிதிப் பற்றாக்குறையை சமாளிக்க, பொதுத்துறை நிறுவனங்களிடம், அதிக டிவிடெண்டு வழங்குமாறு கோரப்பட்டுள்ளது.பொருளாதார மந்தநிலை, தொழில் வளர்ச்சியில் தேக்கம் போன்றவற்றாலும், மத்திய அரசின் வருவாய் குறிப்பிடத்தக்க அளவிற்கு குறைந்து உள்ளது.
மேலும் பொது செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|