பதிவு செய்த நாள்
24 அக்2013
01:04

மும்பை:பொருளாதார சுணக்க நிலையால், உள்நாட்டில் தயாரிப்பு துறைகளின் உற்பத்தி வளர்ச்சி பாதிக்கப்பட்டுள்ள நிலையில், இந்தியாவில் உள்ள தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் ஆயிரக்கணக்கானோருக்கு வேலைவாய்ப்பு வழங்கியுள்ளதாக, ஆய்வு ஒன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
டி.சி.எஸ்., நிறுவனம்: இதற்கு எடுத்துக்காட்டாக, நடப்பு நிதியாண்டின் செப்டம்பர் மாதத்துடன் நிறைவடைந்த இரண்டாவது காலாண்டில், தகவல் தொழில்நுட்ப துறையைச் சேர்ந்த, டி.சி.எஸ்., இன்போசிஸ் மற்றும் எச்.சி.எல்., ஆகிய மூன்று நிறுவனங்கள் நிகர அளவில், 12,319 பேருக்கு வேலை வாய்ப்பு வழங்கியுள்ளன.
அதேசமயம், ஏப்ரல்–ஜுன் மாத முதல் காலாண்டில், இந்நிறுவனங்களில், நிகர அளவில், புதிதாக, பணி வாய்ப்பு பெற்றவர்களின் எண்ணிக்கை, 3,067 ஆக இருந்தது.
இதுகுறித்து இத்துறையைசேர்ந்த ஆய்வாளர் ஒருவர் கூறியதாவது: அமெரிக்காவில் பொருளாதாரம் இயல்பு நிலைக்கு திரும்பி வருகிறது. மேலும், ஒரு சில ஐரோப்பிய நாடுகளிலும், தகவல் தொழில்நுட்பங்களுக்கு செலவிடுவது அதிகரித்து வருகிறதுஇது போன்ற காரணங்களால், இந்திய தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களின் செயல்பாடு வேகமெடுத்துள்ளது.
பணிகளை விரைந்து முடித்து தரும் வகையில், இந்தியஐ.டி., துறை நிறுவனங்கள், வளாகத் தேர்வு மூலம், பணிக்கு ஆட்களை தேர்வு செய்து வருகின்றன.மேலும், டாலருக்கு எதிரான ரூபாய் மதிப்பு சரிவால், நடப்பு நிதியாண்டின் இரண்டாவது காலாண்டில், பல இந்திய தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களின், வருவாய் மற்றும் லாபவளர்ச்சி, சந்தை மதிப்பீட்டை விட, மிகவும் அதிகரித்துள்ளது. புதிதாக, பணிக்கு ஆட்களை சேர்த்ததில் டி.சி.எஸ்., நிறுவனம் முதலிடத்தில் உள்ளது.
இந்நிறுவனம், முதல் காலாண்டில், புதிதாக, 1,390 பேருக்கு வேலைவாய்ப்பு வழங்கியது. இந்த எண்ணிக்கை, இரண்டாவது காலாண்டில், 7,664 ஆக உயர்ந்தது.
இன்போசிஸ்:இதை தொடர்ந்து, இன்போசிஸ் நிறுவனத்தின் பணியாளர்களின் மொத்த எண்ணிக்கை, முதல் காலாண்டில், 1,57,263 ஆக இருந்தது. இது, இரண்டாவது காலாண்டில், 1,60,227 ஆக உயர்ந்துள்ளது.இதே காலத்தில், எச்.சி.எல்., நிறுவனத்தின் பணியாளர்களின் எண்ணிக்கை, 85,505 லிருந்து, 87,196 ஆக வளர்ச்சி கண்டுள்ளது.
அதேசமயம், கணக்கீட்டு காலத்தில், விப்ரோ நிறுவனத்தின் பணியாளர்களின் எண்ணிக்கை, 65 குறைந்து, அதாவது, 1,47,281லிருந்து, 1,47,216 ஆக குறைந்துள்ளது. விப்ரோ நிறுவனத்தில், பணியாளர்களின் எண்ணிக்கை அதிகமாக இருப்பதுடன், திட்ட அமலாக்க பணி ஒதுக்கீடுகளுக்காக, பல பணியாளர்கள் காத்துள்ளனர். இதன் காரணமாகவே, இந்நிறுவனம் புதிய பணியாளர்களை தேர்வு செய்யவில்லை என, மனிதவள தேர்வு நிறுவனத்தின் உயரதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
மதிப்பீடு:ஒட்டு மொத்த அளவில், நடப்பாண்டில், இந்திய தகவல் தொழில்நுட்ப துறையில், புதிதாக, 1.65 லட்சம் பேருக்கு வேலை வாய்ப்பு உருவாகும் என, கணிக்கப்பட்டுள்ளது. அதேசமயம், ‘நாஸ்காம்’ அமைப்பு இவ்வாண்டு, இந்திய ஐ.டி. துறையில், 1.50 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு உருவாகும் என, முன்பு மதிப்பிட்டிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் ஐ.டி செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|