பதிவு செய்த நாள்
04 நவ2013
00:48

சென்னை: தமிழகத்திற்கு வரும், உள்நாட்டு, வெளிநாட்டு சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை, ஆண்டுக்காண்டு அதிகரித்து வருகிறது.கடந்த, 2009 – 10ம் நிதியாண்டில், தமிழகத்தில் உள்ள பல்வேறு பிரசித்தி பெற்ற சுற்றுலாத் தலங்களை காண, 8.04 கோடி பேர் வந்துள்ளனர். இதில், உள்நாட்டு சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை, 7.80 கோடியாகவும், வெளிநாட்டு சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை, 24 லட்சமாகவும் இருந்தது.இது, இதற்கு முந்தைய நிதிஆண்டில், தமிழகம் வந்த சுற்றுலா பயணிகளை விட, 24 சதவீதம் அதிகமாகும்.
இதே போன்று, 2010 – 11ம் நிதியாண்டில், தமிழகத்திற்கு வந்த சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை, 32 சதவீதம் வளர்ச்சி கண்டு, 10.58 கோடியாக (உள்நாட்டினர் – 10.3 கோடி; வெளிநாட்டினர், 28 லட்சம்) அதிகரித்து காணப்பட்டது.கடந்த 2011 – 12ம் நிதியாண்டிலும், இதே அளவிலான வளர்ச்சி காணப்பட்டது. அவ்வாண்டில், தமிழகத்திற்கு வந்த 13.93 கோடி சுற்றுலா பயணிகளில், உள்நாட்டினர் மற்றும் வெளிநாட்டினரின் எண்ணிக்கை முறையே, 13.60 கோடி மற்றும் 33 லட்சம் என்ற அளவில் இருந்தது.கடந்த, 2012 – 13ம் நிதியாண்டில், உள்நாட்டை சேர்ந்த, 18.41 கோடி சுற்றுலா பயணிகளும், 36 லட்சம் வெளிநாட்டினரும், தமிழகத்தில் உள்ள முக்கிய சுற்றுலா தலங்களை கண்டு ரசித்துள்ளனர். இதன் மூலம், தமிழகத்திற்கு வரும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை வளர்ச்சி, 34 சதவீதமாக உயர்ந்துள்ளது. நடப்பு, 2013 – 14ம் நிதியாண்டில், சென்ற செப்டம்பர் வரையிலான ஆறு மாதங்களில், தமிழகத்திற்கு வந்த உள்நாடு மற்றும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை, கடந்த ஆண்டின் இதே காலத்தை விட, 18 சதவீதம் வளர்ச்சி கண்டு, 14.45 கோடியாக உயர்ந்து உள்ளது.இதில்,14.19 கோடி உள்நாட்டினரும், 26 லட்சம் வெளிநாட்டினரும் அடங்குவர். இந்தியாவில், 16 இடங்கள், உலக பாரம்பரிய கலாசார பகுதிகளாக அறிவிக்கப்பட்டு உள்ளன.
இதில், தமிழகத்தின் மகாபலிபுரம், தஞ்சை பெரிய கோவில் ஆகியவையும் அடங்கும்.மகாபலிபுரத்தில், தொன்மையான கலாசாரத்தை பிரதிபலிக்கும் கற்கோவில், நேர்த்தியான கற்சிலைகள் உள்ளிட்டவற்றை காணவும், ராஜராஜ சோழன் கட்டிய பிரமாண்டமான தஞ்சை பெரியகோவிலை பார்க்கவும், உள்நாட்டினரும், வெளிநாட்டினரும் அதிக அளவில் வருகின்றனர்.ஸ்பெயின், பிரான்ஸ் நாட்டினர், ஆன்மிகத் தேடலை நாடி, திருவண்ணாமலை அண்ணாமலையாரை தரிசிக்க வருகின்றனர். அது போன்று, திருச்சி உச்சிப் பிள்ளையார் கோவில், மதுரை மீனாட்சி அம்மன் கோவில், ராமேஸ்வரம் உள்ளிட்ட சுற்றுலா தலங்களும், இங்கிலாந்து, அமெரிக்கா, ஜெர்மனி நாட்டவரின், காணவேண்டிய பட்டியலில் இடம் பெற்றுள்ளன.
மேலும் பொது செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|