பதிவு செய்த நாள்
04 நவ2013
11:05

மத்திய அரசின் வரி விதிப்பு கொள்கையால், தீபாவளி தங்கம் விற்பனை, 40 சதவீதம் சரிந்தது.
இந்து மத பண்டிகைகளில் முதன்மையானதாக திகழும், தீபாவளிக்கு தங்கம் வாங்க வேண்டும் என்ற ஆவலோடு, இல்லத்தரசிகள், மாதம் தோறும், 200 ரூபாய் முதல், 10 ஆயிரம் ரூபாய் வரை, தங்க நகை கடைகளில், பல்வேறு சேமிப்பு திட்டங்களில் முதலீடு செய்வது வழக்கம். தீபாவளி தினத்தன்று, கடைகளுக்கு சென்று, தாங்கள் சேமித்த பணத்திற்கு ஈடாக செய்கூலி, சேதாரம் இல்லாமல், தங்க ஆபரணம் வாங்குவதை ஆர்வமாக கொண்டிருந்தனர். வட மாநிலங்களில் மட்டுமே பிரசித்தி பெற்றதாக இருந்த, "அட்சய திருதியை' நடைமுறை, தமிழகத்திலும் பிரபலமானதை தொடர்ந்து, தீபாவளி சேமிப்பு திட்டம், "அட்சய திருதியை' தினத்துக்கு மாறியது.
இருந்தாலும், சுப தினமான தீபாவளிக்கு தங்கம் வாங்கும் பழக்கத்தில் இருந்து, இன்னும் சிலர் மாறவில்லை. தமிழகத்தில், சராசரியாக, நாள்தோறும், புதிய மற்றும் பழைய தங்கம் விற்பனை, 1,000 கிலோ என்ற அளவில் உள்ளது. இதில், புதிய தங்கத்தின் பங்களிப்பு, 700 கிலோ. வழக்கமான விற்பனையை விட, தீபாவளிக்கு, 20 30 சதவீதம் கூடுதல் விற்பனையாகும். நடப்பு கணக்கு பற்றாக்குறை அதிகரித்து வருவதை கட்டுப்படுத்த, மத்திய அரசு, தங்கம் மீதான இறக்குமதி வரியை, அவ்வப்போது உயர்த்தி வருகிறது. இதனால், தங்கம் விலை அதிக ஏற்ற, இறக்கத்துடன் காணப்படுவதால், மக்கள் தங்கம் வாங்குவதை குறைத்து வருகின்றனர். இதனால், நேற்று முன்தினம் தீபாவளிக்கு, தமிழகம் முழுவதும், 550 கிலோ புதிய தங்கம் மட்டுமே விற்பனையாகி உள்ளது. இது, கடந்த ஆண்டு, 900 கிலோ என்ற அளவில் இருந்தது.
ஆக, கடந்த ஆண்டுடன் ஒப்பிடும் போது, தீபாவளி தங்கம் விற்பனை, 38 சதவீதம் குறைந்துள்ளது. பணவீக்கம் அதிகரிப்பு, விலைவாசி உயர்வு ஆகியவை காரணமாக அதிக அளவு தங்க சேமிப்பில் ஈடுபட முடியாத நிலையில் பலரும் உள்ளனர். அதனால் வழக்கமாக தங்கம் வாங்குவோர் இதில் ஆர்வம் காட்டவில்லை. அதேசமயம், பிளாட்டினம், வைர நகைகள் பக்கம் பெண்கள் கவனம் திரும்பியிருப்பதாக கூறப்படுகிறது.இதுகுறித்து, தங்க நகை வர்த்தகர்கள் கூறுகையில், "கடந்த தீபாவளியுடன் ஒப்பிடும் போது, இந்த தீபாவளிக்கு, தங்கம் விலை குறைவாக இருந்தது. விலை நிலையில்லாமல் இருப்பதால், மக்கள் குழப்பம் அடைந்துள்ளனர். தங்கம் வாங்குவதை ஒத்தி போட்டுள்ளதால், தீபாவளிக்கு, தங்கம் விற்பனை, 40 சதவீதம் குறைந்துள்ளது' என்றனர்.
விலை குறைவு: கடந்த ஆண்டு தீபாவளிக்கு, 22 காரட் ஆபரண தங்கம் ஒரு கிராம், 2,998 ரூபாய்க்கும், ஒரு சவரன், 23,984 ரூபாய்க்கும் விற்பனையானது. இந்த ஆண்டு ஒரு கிராம், தங்கம், 2,861 ரூபாய்க்கும், ஒரு சவரன், 22,888 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டது. ஆக, கடந்த ஆண்டுடன் ஒப்பிடும் போது, இந்த ஆண்டு தங்கம் விலை கிராமுக்கு, 137 ரூபாயும், சவரனுக்கு, 1,096 ரூபாயும் குறைந்துள்ளது இருப்பினும், விற்பனை அதிகரிக்கவில்லை.
மேலும் பொது செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|