பதிவு செய்த நாள்
04 நவ2013
11:34

காரைக்குடி:நெல் விலை, மூட்டைக்கு, 250 ரூபாய் குறைந்துள்ளதால், 'விலை உயரும்' என, நினைத்து பதுக்கி வைத்தவர்கள், விற்க முடியாமல் தவிக்கின்றனர்.ஜனவரி, பிப்ரவரியில், நெல் அறுவடை நடைபெற்ற போது, விவசாயிகளிடம் மொத்தமாக நெல்லை கொள்முதல் செய்து, வியாபாரிகள் பலர் சேமித்து வைப்பர். விலை உயர்வுக்கு ஏற்றார் போல், அரிசி ஆலைகளுக்கு நெல்லை அனுப்புவர்.
உயரும் என எதிர்பார்ப்பு:ஜனவரி, பிப்ரவரி மாதங்களில், ஒரு மூட்டை டீலக்ஸ் பொன்னி நெல் - 61 கிலோ, 1,350 ரூபாயாக இருந்தது. அதற்கு முந்தைய மாதங்களில், 2012 நவம்பர், டிசம்பர் மாதங்களில், நெல் வரத்து குறைவாக இருந்ததால், ஒரு மூட்டை, 1,550 ரூபாயாக இருந்தது.வறட்சி, வரத்து குறைவு போன்றவற்றால், இந்த ஆண்டு, மூட்டை நெல் விலை, 2,000 வரை உயரும் என்ற எதிர்பார்ப்பில், பல வியாபாரிகள் நெல்லை வாங்கி இருப்பில் வைத்தனர். அவர்களின், எதிர்பார்ப்புக்கு ஏற்றார்ப் போல், அடுத்தடுத்த மாதங்களில், நெல் மூட்டை விலை, 1,500 ரூபாய் வரை உயர்ந்தது.
ஆனால், ஜூலை மாதத்திலிருந்து, நெல் விலை, திடீர் சரிவை கண்டது. ஒரு மூட்டை நெல்லை, 1,350 ரூபாய்க்கு வாங்கி, காய வைத்து, அவற்றை பாதுகாத்த நிலையில், ஒரு மூட்டையின் அடக்க விலை 1,550 ரூபாயாக உள்ளது. தற்போது ஒரு மூட்டை நெல், 1,300 என, விற்கப்படுகிறது. அதனால், 250 ரூபாய் நஷ்டத்துக்கு விற்கும், நெல்லை விற்கும் நிலையில், இருப்பு வைத்த வியாபாரிகள் உள்ளனர்.அதனால், ஒவ்வொரு வியாபாரியும், 20 லட்சம் ரூபாய் வரை நஷ்டம் அடையும் நிலை ஏற்பட்டுள்ளது. இன்னும் இரண்டு மாதத்தில், புது நெல் வரத்து தொடங்கி விடும் என்பதால், வேறு வழியின்றி, இவற்றை விற்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். இவர்களின் நெல் சந்தைக்கு வரும் பட்சத்தில், அரிசி விலை மேலும் குறைய வாய்ப்புள்ளது.
அரிசி ஆலை உரிமையாளர் ஒருவர் கூறியதாவது:வழக்கமாக, வியாபாரிகள் நெல்லை வாங்கும்போது, அரிசி ஆலை அதிபர்களிடம் கேட்டு, அதற்கேற்ப நெல் விலையை நிர்ணயம் செய்வர். விலையும் கணிசமான அளவில் இருக்கும். ஆனால், இந்த ஆண்டு துவக்கத்தில், நெல் வாங்கி வைத்தால், லாபம் கிடைக்கும், என்ற வகையில், புது வியாபாரிகள் பலர் களத்தில் குதித்தனர்.
பதுக்கியவர்கள் நிலை சிக்கல்:இவர்கள் வைத்தது தான் விலையாக இருந்தது. நாங்கள் இவர்களிடம் வாங்கும்போது, அதற்கேற்ப விலை வைக்க வேண்டிய நிலை இருந்தது.தற்போது, தமிழகம் மட்டுமன்றி, ஆந்திரா, கர்நாடகாவிலிருந்தும் நெல் வரத்து உள்ளது. அதனால், நெல்லை பதுக்கி வைத்த வியாபாரிகள், அவற்றை வந்த விலைக்கு போதும் என, மூட்டை 1,300 ரூபாய்க்கு விற்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.இவ்வாறு அரிசி ஆலை உரிமையாளர் கூறினார்.
மேலும் பொது செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|