பதிவு செய்த நாள்
10 நவ2013
00:36

கோல்கட்டா:நடப்பு, 2013ம் ஆண்டிலும், நாட்டின் தேயிலை உற்பத்தி, 100 கோடி கிலோவை தாண்டி, 119 கோடி கிலோவாக வளர்ச்சி காணும் என, மதிப்பிடப்பட்டு உள்ளது.கடந்த, 2012ம் ஆண்டில், நாட்டின் தேயிலை உற்பத்தி, 113 கோடி கிலோவாக இருந்தது என, இந்திய தேயிலை வாரியம் தெரிவித்து உள்ளது.
இரண்டாவது இடம்:உலகளவில், தேயிலை உற்பத்தி மற்றும் பயன்பாட்டில், இந்தியா இரண்டாவது மிகப் பெரிய நாடாக உள்ளது. கடந்த ஒரு சில ஆண்டுகளாக, நாட்டின் தேயிலை உற்பத்தி, சிறப்பான அளவில் வளர்ச்சி கண்டு வருகிறது.
இதுகுறித்து, இந்திய தேயிலை வாரியத்தின் தலைவர் அருண் என்.சிங் கூறியதாவது:கடந்த, 2012ம் ஆண்டை விட, நடப்பாண்டில் தேயிலை உற்பத்தி, 6 கோடி கிலோ அதிகரித்து, 118.50 – 119 கோடி கிலோவாக உயர வாய்ப்புள்ளது.நடப்பாண்டின், ஜனவரி முதல் செப்டம்பர் வரையிலான ஒன்பது மாத காலத்தில், நாட்டின் தேயிலை உற்பத்தி, கடந்தாண்டின் இதே காலத்தை விட, 5.36 கோடி கிலோ அதிகரித்து, 80.80 கோடி கிலோவிலிருந்து, 86.16 கோடி கிலோவாக உயர்ந்துள்ளது.
நடப்பாண்டின் முதல் ஒன்பது மாதங்களில், வட மாநிலங்களில் தேயிலை உற்பத்தி, 69.09 கோடி கிலோவாகவும், தென் மாநிலங்களில் இதன் உற்பத்தி, 17.07 கோடி கிலோவாகவும் இருந்தது. இவ்வாறு, அருண் சிங் தெரிவித்தார்.அசாம் மாநிலம்:நடப்பாண்டின் முதல் ஒன்பது மாத காலத்தில், உள்நாட்டு தேயிலை உற்பத்தியில், அதிக பங்களிப்பை கொண்டுள்ள அசாம் மாநிலத்தில், இதன் உற்பத்தி, 44.71 கோடி கிலோவாக அதிகரித்து உள்ளது. இது, கடந்தாண்டின் இதே காலத்தில், 43.30 கோடி கிலோவாக இருந்தது.
இதுகுறித்து, வடகிழக்கு மாநில தேயிலை கூட்டமைப்பின் தலைவர் பித்யானந்தா பர்ககோடி கூறியதாவது:நடப்பாண்டில், அசாம் மாநிலத்தின் தேயிலை உற்பத்தி மிகவும் சிறப்பாக இருக்கும் என, எதிர்பார்க்கிறோம். மாநிலத்தில், தேயிலை அதிகம் உற்பத்தியாகும் பகுதிகளில், தட்பவெப்ப நிலை சாதகமாக இருப்பதுடன், பூச்சி தாக்குதலும் மிகவும் குறைவாக உள்ளது.
கடந்த, 2012ம் ஆண்டில், மாநிலத்தின் தேயிலை உற்பத்தி, 58 கோடி கிலோவாக இருந்தது. சென்ற அக்டோபர் மாதத்தில் பெய்த மழையும், தேயிலை சாகுபடிக்கு உறுதுணையாக உள்ளது. தற்போதைய தட்பவெப்ப நிலை நீடிக்கும் நிலையில், மாநிலத்தின் தேயிலை உற்பத்தி நடப்பாண்டில், புதிய சாதனை அளவை எட்டும்.
நாட்டின் ஒட்டு மொத்த தேயிலை உற்பத்தியில், அசாம் மாநிலத்தின் பங்களிப்பு, 53 சதவீத அளவிற்கு உள்ளது. மேலும், இங்கு உற்பத்தியாகும் தேயிலையிலிருந்து தயாரிக்கப் படும் தேநீர் மிகவும் சுவையானது. இவ்வாறு, பித்யானந்தா கூறினார்.கறுப்பு தேயிலை உற்பத்தி:சர்வதேச அளவில், கறுப்பு தேயிலை உற்பத்தி, நடப்பாண்டு ஜனவரி முதல் செப்டம்பர் வரையிலான, ஒன்பது மாத காலத்தில், 8.40 சதவீதம் அதிகரித்து, 158 கோடி கிலோவாக வளர்ச்சி கண்டுள்ளது.
இது, கடந்தாண்டின் இதே காலத்தில், 146 கோடி கிலோவாக இருந்தது.கறுப்பு தேயிலை உற்பத்தியில், இந்தியா முன்னணி நாடுகளுள் ஒன்றாக திகழ்கிறது.மதிப்பீட்டு காலத்தில், நம் நாடு, 86 கோடி கிலோ கறுப்பு தேயிலையை உற்பத்தி செய்துஉள்ளது. இதில், வட மாநிலங்களின் பங்களிப்பு, 69 கோடி கிலோவாகவும், தென் மாநிலங்களின் பங்களிப்பு, 17 கோடி கிலோவாகவும் உள்ளது.கென்யா:சாதகமற்ற வானிலையால், இலங்கை மற்றும் கென்யா ஆகிய நாடுகளில், கறுப்பு தேயிலை உற்பத்தி குறைந்து உள்ளது.
கணக்கீட்டு காலத்தில், கென்யாவில் கறுப்பு தேயிலை உற்பத்தி, 15 லட்சம் கிலோ குறைந்து, 3.20 கோடி கிலோவாகவும், இலங்கையில் இதன் உற்பத்தி, 24.40 லட்சம் கிலோ குறைந்து, 2.50 கோடி கிலோவாகவும் சரிவடைந்து உள்ளது.இருப்பினும், ஒட்டு மொத்த அளவில், சர்வதேச கறுப்பு தேயிலை உற்பத்தி, நடப்பாண்டில், 480 கோடி கிலோவாக அதிகரிக்கும் என, மதிப்பிடப்பட்டு்ள்ளது. கடந்த, 2012ம் ஆண்டில், இதன் உற்பத்தி, 460 கோடி கிலோவாக இருந்தது.
மேலும் கம்மாடிட்டி செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|