பதிவு செய்த நாள்
16 நவ2013
00:27

பொருளாதார வளர்ச்சி 5.5 சதவீதமாக உயரும் - சிதம்பரம்
மும்பை:நடப்பு 2013-14ம் நிதியாண்டில், நாட்டின் பொருளாதார வளர்ச்சி, 5-5.5 சதவீதமாக இருக்கும் என, மத்திய நிதி அமைச்சர் ப. சிதம்பரம் தெரிவித்தார். மும்பையில், இந்திய வங்கிகள் சங்கம் சார்பில் 'பேங்கான் 2013', கூட்டம் நடைபெற்றது. இதில், கலந்து கொண்டு சிதம்பரம் கூறியதாவது:
ரிசர்வ் வங்கி:நாட்டின் பொருளாதார வளர்ச்சியை மேம்படுத்த, மத்திய அரசு, பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இதற்கு, நல்ல அளவில் பலன் கிடைத்து வருகிறது. ரிசர்வ் வங்கியும், பிரதமரின் பொருளாதார ஆலோசனை குழுவும், நடப்பு நிதியாண்டில், நாட்டின் பொருளாதார வளர்ச்சி, 5 மற்றும் 5.5 சதவீதத்திற்கும் இடையில் இருக்குமென அறிவித்துள்ளன. இந்த இலக்கு நிச்சயமாக எட்டப்படும்.
கடந்த2012-13ம் நிதியாண்டில், நாட்டின்பொருளாதார வளர்ச்சி, கடந்த10 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு, 5 சதவீதமாக சரிவடைந்தது. நடப்பு நிதியாண்டின் முதல் காலாண்டில், பொருளாதார வளர்ச்சி, 4.4 சதவீதமாக இருந்தது.இரண்டாவது காலாண்டிற்கான பொருளாதார வளர்ச்சி குறித்த அறிவிப்பு, இம்மாதம், 29ம் தேதி அறிவிக்கப்பட உள்ளது. அரசு எடுத்து வரும் நடவடிக்கைகளால், வரும் 2014ம் ஆண்டில், பொருளாதார வளர்ச்சி சிறப்பான அளவில் மேம்படும்.
நிதி பற்றாக்குறை:கடந்த நிதியாண்டில், நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் நிதி பற்றாக்குறை, 4.8 சதவீதமாக இருந்தது. நடப்பு நிதிஆண்டில், இதனை குறைக்கும் வகையில், நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
அதேபோன்று, நடப்பு கணக்கு பற்றாக்குறை, 8,800 கோடி டாலராக இருந்தது. ஏற்றுமதியை அதிகரிக்கச் செய்து, இறக்குமதியை குறைக்கும் வகையில் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகளால், நடப்பு நிதியாண்டில், நடப்பு கணக்கு பற்றாக்குறையை, 6,000 கோடி டாலராக குறைக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், இருதினங்களுக்கு முன்பு, ரிசர்வ் வங்கியின் கவர்னர், ரகுராம் ராஜன், நாட்டின் நடப்பு கணக்கு பற்றாக்குறை, 5,600 கோடி டாலராக சரிவடைய வாய்ப்புள்ளது என, தெரிவித்திருந்தார். இந்த அளவிற்கு குறைக்கும் வகையிலும் நடவடிக்கை எடுக்கப்படும்.
இந்நிலையில், கடந்த அக்டோபர் மாதத்தில், நாட்டின் பணவீக்கம், 7 சதவீதமாக அதிகரித்துள்ளது. இது, மத்திய அரசிற்கு சவாலாக உள்ளது.பணவீக்கம் அதிகரிப்பிற்கு, ஒரு சில உணவுப் பொருட்களின் உற்பத்தி மற்றும் அளிப்பு குறைந்ததுதான் காரணமாக உள்ளது.
பணவீக்கத்தை கட்டுப்படுத்த, உணவு தானிய உற்பத்தியை அதிகரிப்பதுடன், வினியோக ஒருங்கிணைப்பு சேவையை மேம்படுத்தி, பொருட்களை சேமித்து வைப்பதற்கான வசதியை ஏற்படுத்த வேண்டிஉள்ளது.
வசூலாகாத கடன்: வங்கிகளின் வசூலாகாத கடன் அதிகரித்து வருகிறது. எனவே, வங்கியாளர்கள், கடனை திரும்பச் செலுத்தாதவர்கள் மீது உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.அதேசமயம், பொருளாதார சுணக்க நிலையால் உண்மையிலேயே பாதிப்புக்குள்ளாகியுள்ள துறைகளில் மென்மையான போக்கை கடைபிடித்து, வசூலாகாத கடனை திரும்பப் பெறவேண்டும். இவ்வாறு சிதம்பரம் கூறினார்.
மேலும் பொது செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|