பதிவு செய்த நாள்
16 நவ2013
00:58

நடப்பு 2013-14ம் நிதியாண்டில், ஜூலை-செப்., வரையிலான இரண்டாவது காலாண்டில், நாட்டின் தங்கம் பயன்பாடு, 148 டன்னாக குறைந்துள்ளது. இது, இதற்கு முந்தைய காலாண்டில் (ஏப்., ஜூன்), 310 டன்னாக இருந்தது என, உலக தங்கம் கூட்டமைப்பு (டபிள்யூ.ஜி.சி.,) தெரிவித்துள்ளது.இது குறித்து வெளியிடப்பட்ட ஆய்வறிக்கை விவரம்:சென்ற 2012-13ம் நிதியாண்டின், இரண்டாவது காலாண்டில், தங்கத்திற்கான தேவை, 32 சதவீதம் அதிகரித்து, 210 டன்னாக இருந்தது.
பங்களிப்பு:இதே காலத்தில் சீனாவில், தங்கத்திற்கான தேவை, 18 சதவீதம் அதிகரித்து, 209.6 டன்னாக இருந்தது.இந்தியாவில், நடப்பு நிதிஆண்டின் மூன்றாவது காலாண்டில் (செப்.,-டிச.,), தங்கத்திற்கான தேவை, சென்ற நிதியாண்டின் இதே காலத்தில் காணப்பட்ட, 262 டன்னை விட, குறைவாக இருக்கும்.
இருந்த போதிலும், ஒட்டுமொத்த அளவில், தங்கம் பயன்பாடு, சென்ற 2012ம் ஆண்டை விட (864 டன்), நடப்பாண்டு, சற்று உயர வாய்ப்புள்ளது.
சென்ற செப்டம்பர் வரையிலான காலாண்டில், பயன்படுத்தப்பட்ட, 148 டன் தங்கத்தில், பழைய, அதாவது மறுசுழற்சியான தங்கத்தின் பங்களிப்பு, 61 டன்னாகும். எஞ்சிய 87 டன் தங்கம், வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்பட்டது.
அதேசமயம், இதே காலத்தில், சர்வதேச அளவில், மறுசுழற்சி தங்கத்தின் பங்களிப்பு, 11 சதவீதம் குறைந்துள்ளது.மத்திய அரசு, தங்கம் மீதான இறக்குமதி வரியை, 10 சதவீதமாக உயர்த்தியுள்ளது. இறக்குமதி :மேலும், இறக்குமதி செய்யப் படும் தங்கத்தில், 20 சதவீதத்தை, மதிப்பு கூட்டப்பட்ட ஆபரணங்களாக ஏற்றுமதி செய்வதை கட்டாயமாக்கியுள்ளது.இறக்குமதி செய்யப்படும் தங்கத்தில், 80 சதவீதம், நகை நிறுவனங்கள், தங்கம், வெள்ளி விற்பனையாளர்கள் மற்றும் வங்கிகளுக்கு வழங்கப்பட வேண்டும் எனவும் தெரிவித்துள்ளது.
இதன் காரணமாக, தங்கம் இறக்குமதி குறைந்துள்ளது.ஆனால்,கிறிஸ்துமஸ், புத்தாண்டு, திருமண சீசன் வர உள்ளதால், தங்கத்திற்கான தேவை, பெரிய அளவில் குறைய வாய்ப்பு இல்லை.சர்வதேச அளவில்,தங்கத்திற்கான தேவை, நடப்பு நிதியாண்டின் இரண்டாவது காலாண்டில், சென்ற ஆண்டின் இதே காலத்தை விட, 21 சதவீதம் சரிவடைந்து, 869 டன்னாக குறைந்துள்ளது.அது போன்று, நடப்பு நிதிஆண்டின் முதல் காலாண்டில், ஒரு அவுன்ஸ் தங்கம் விலை, 1,200 டாலருக்கும் கீழாக வீழ்ச்சி கண்டது. இது, ஏப்ரலில், 1,500 டாலருக்கும் அதிகமாக இருந்தது.உலக சந்தையில், தங்க ஆபரணங்களுக்கான தேவை, 5 சதவீதம் உயர்ந்து, 486.70 டன்னாக அதிகரித்துள்ளது.
இந்தோனேசியாஹாங்காங்கில், தங்க நகைகளுக்கான தேவை, 28 சதவீதம் உயர்ந்துள்ளது. இது, வியட்னாமில், 14 சதவீதமாகவும், தாய்லாந்தில், 57 சதவீதமாகவும், இந்தோனேசியாவில், 19 சதவீதமாகவும் அதிகரித்து உள்ளது.நடப்பு நிதியாண்டின் மூன்றாவது காலாண்டில், மேற்கு ஆசியா மற்றும் வட ஆப்ரிக்காவில், தங்க நகைகளுக்கான தேவை, 9 சதவீதமாகவும், அமெரிக்காவில், 14 சதவீதமாகவும் வளர்ச்சி கண்டுள்ளன.இவ்வாறு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவை விஞ்சும் சீனா:நடப்பாண்டு, தங்கம் பயன்பாட்டில், சீனா, இந்தியாவை விஞ்சும் என, மதிப்பிடப்பட்டுள்ளது. நடப்பாண்டு, இந்தியாவில் தங்கத்திற்கான தேவை, 1,000 டன்னாக இருக்கும் என, மதிப்பிடப்பட்டிருந்தது. இது, மத்திய அரசின் கட்டுப்பாடுகளால், 900 டன்னாக குறையும் என, கணிக்கப்பட்டுள்ளது. அதே சமயம், சீனாவில் தங்கத்திற்கான தேவை, 1,000 டன் என்ற அளவில் மாற்றமின்றி இருக்கும் என, தெரிகிறது.- பிசினஸ் ஸ்டாண்டர்ட் உடன் இணைந்து -
மேலும் பொது செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|