பதிவு செய்த நாள்
17 நவ2013
00:05

புதுடில்லி:வரலாற்றில் முதன் முறையாக, நாட்டின் தாவர எண்ணெய் இறக்குமதி, சென்ற 2012–13ம் சந்தைப்படுத்தும் பருவத்தில் (நவ.,–அக்.,), 1.07 கோடி டன்னாக உயர்ந்துள்ளது என, இந்திய எண்ணெய் உற்பத்தியாளர்கள் சங்கம் ெவளியிட்டு உள்ள புள்ளிவிவரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.தேவை:உள்நாட்டில், தாவர எண்ணெய் உற்பத்தி குறைந்து உள்ள அதே நேரத்தில், அதன் பயன்பாடு அதிகரித்து வருகிறது. தேவையை பூர்த்தி செய்யும் அளவிற்கு, உற்பத்தி இல்லாததால், நம்நாடு, 50 சதவீத சமையல் எண்ணெய் வகைகளை ெவளிநாடுகளிலிருந்து இறக்குமதி செய்து கொள்கிறது.
கடந்த 2011–12ம் பருவத்தில், நாட்டின் தாவர எண்ணெய் இறக்குமதி, 1.02 கோடி டன்னாக இருந்தது. ஆக, சென்ற பருவத்தில், இதன் இறக்குமதி, 4.77 சதவீதம் அதிகரித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.கடந்த பருவத்தில் மேற்கொள்ளப்பட்ட ஒட்டு மொத்த தாவர எண்ணெய் இறக்குமதியில், சமையல் எண்ணெய் வகைகளின் இறக்குமதி, 1.04 கோடி டன்னாக அதிகரித்துள்ளது. இது, கடந்த பருவத்தில், 99.80 லட்சம் டன்னாக இருந்தது.
கணக்கீட்டு காலத்தில், சமையல் சாராத இதர எண்ணெய் இறக்குமதி, 2.11 லட்சம் டன்னிலிருந்து, 2.94 லட்சம் டன்னாக அதிகரித்துள்ளது.இந்தோனேசியா:நம்நாடு, மலேசியா மற்றும் இந்தோனேசியா ஆகிய நாடுகளிலிருந்து, பாமாயிலை அதிகஅளவில் இறக்குமதி செய்து கொள்கிறது.அர்ஜென்டினா, பிரேசில் ஆகிய நாடுகளிலிருந்து, சோயா எண்ணெய் இறக்குமதி செய்யப்படுகிறது. மலேசியா மற்றும் இந்தோனேசியா ஆகிய நாடுகளில், பாமாயில் உற்பத்தி அதிகரித்ததை அடுத்து, இந்நாடுகள், கையிருப்பை குறைக்கும் வகையில், ஏற்றுமதி செய்யப்படும், பாமாயில் மீதான வரியை வெகுவாக குறைத்தன. இதனால், சர்வதேச சந்தையில் பாமாயில் விலை குறைந்தது.
இதை சாதகமாக பயன்படுத்தி, இந்திய வர்த்தகர்கள், மேற்கண்ட நாடுகளிலிருந்து, அதிக அளவில் பாமாயிலை இறக்குமதி செய்தனர்.இந்நிலையில், உள்நாட்டில், தனிநபர் எண்ணெய் பயன்பாடு, 3 சதவீதம் உயர்ந்துள்ளதுடன், கணக்கீட்டு காலத்தில், மக்கள் தொகையும், 1.76 சதவீதம் அதிகரித்துள்ளது. இதுவும், எண்ணெய் இறக்குமதி உயர்விற்கு முக்கிய காரணம் என, இச்சங்கத்தின் புள்ளிவிவரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நடப்பு நிதியாண்டின், ஏப்ரல் முதல் அக்டோபர் வரையிலான, ஏழு மாத காலத்தில், சுத்திகரிக்கப்பட்ட பாமாயில் இறக்குமதி, 16 லட்சம் டன்னிற்கும் அதிகமாக உயர்ந்துள்ளது. எண்ணெய் வித்துக்கள்:அதேசமயம், கடந்த நிதிஆண்டின் இதே காலத்தில், இதன் இறக்குமதி, 7.50 லட்சம் டன் என்ற அளவில், மிகவும் குறைவாக இருந்தது.
உள்நாட்டில், எண்ணெய் வித்துக்கள் உற்பத்தி குறைந்து, சமையல் எண்ணெய்க்கான தேவை அதிகரித்ததையடுத்து, கடந்த ஆறு ஆண்டுகளில், சமையல் எண்ணெய் இறக்குமதி, இரண்டு மடங்கிற்கும் மேல் அதிகரித்துள்ளது.மேலும், இதே காலத்தில் சுத்திகரிக்கப்பட்ட பாமாயில் இறக்குமதி, 3 மடங்கு உயர்ந்து உள்ளது.
கணக்கீட்டு காலத்தில், சுத்திகரிக்கப்பட்ட எண்ணெய் இறக்குமதி, 41 சதவீதம் அதிகரித்து, 15.80 லட்சம் டன்னிலிருந்து, 22.20 லட்சம் டன்னாக உயர்ந்துள்ளது.அதேசமயம், கணக்கீட்டு காலத்தில், சுத்திகரிக்கப்படாத கச்சா எண்ணெய் இறக்குமதி, 3 சதவீதம் குறைந்து, 84 லட்சம் டன்னில் இருந்து, 82 லட்சம் டன்னாக சரிவடைந்துள்ளது.சென்ற அக்டோபர் மாதத்தில் மட்டும், தாவர எண்ணெய் இறக்குமதி, கடந்த ஆண்டின் இதே மாதத்தை விட, 1.36 சதவீதம் குறைந்து, 10.37 லட்சம் டன்னிலிருந்து, 10.22 லட்சம் டன்னாக குறைந்துள்ளது என, இந்திய எண்ணெய் உற்பத்தியாளர்கள் சங்கம் மேலும் தெரிவித்துள்ளது.
உற்பத்தி:நடப்பு 2013–14ம் வேளாண் பருவத்தில், நாட்டின் பல மாநிலங்களில், பருவமழை பொழிவு நன்கு உள்ளதையடுத்து, எண்ணெய் வித்துக்கள் சாகுபடி பரப்பளவு சிறப்பான அளவில் அதிகரித்துள்ளது. இதனால், சமையல் எண்ணெய் வகைகளின் உற்பத்தி அதிகரிக்கும் என, மதிப்பிடப்பட்டுள்ளது.அவ்வாறு, சமையல் எண்ணெய் வகைகளின் உற்பத்தி அதிகரிக்கும் நிலையில், நடப்பு சந்தைப்படுத்தும் பருவத்தில், தாவர எண்ணெய் இறக்குமதி கணிசமாக குறைய வாய்ப்புஉள்ளது என, இத்துறையைச் சேர்ந்த ஆய்வாளர் ஒருவர் தெரிவித்தார்.
மேலும் கம்மாடிட்டி செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|