பதிவு செய்த நாள்
23 நவ2013
00:25

இந்தியாவில் உற்பத்தியாகும் சோயா புண்ணாக்கின் தரம் குறைவாகவும், அதே சமயம் விலை உயர்ந்தும் காணப்படுவதால், அதன் ஏற்றுமதி பாதிக்கும் என, எதிர்பார்க்கப்படுகிறது.நாட்டின் சோயா புண்ணாக்கு ஏற்றுமதி, ஆண்டுக்காண்டு அதிகரித்து வந்தது.
விவசாயிகள்:சென்ற 2012ம் ஆண்டு, ஏப்ரல் முதல் அக்டோபர் வரையிலான ஏழு மாதங்களில், நாட்டின் சோயாபுண்ணாக்கு ஏறறுமதி, 8.72 லட்சம் டன்னாக இருந்தது. இது, நடப்பு ஆண்டின், இதே காலத்தில், 15 சதவீதம் அதிகரித்து, 10.56 லட்சம் டன்னாக உயர்ந்து உள்ளது.எனினும், நடப்பு நிதியாண்டில் (2013–14), எஞ்சிய ஐந்து மாதங்களில் (நவ.,–மார்ச்), சோயா புண்ணாக்கு ஏற்றுமதி குறையும் என, மதிப்பிடப்பட்டுள்ளது.
தாமதமான மழை பொழிவால், சோயாவில் ஈரப்பதம் அதிகரித்து, அதன் புரதச் சத்து குறைந்துள்ளது. அதே சமயம், உள்நாட்டில் விவசாயிகள், சோயா விலை உயரும் என்ற எதிர்பார்ப்பில், அளவிற்கதிகமாக அதனை, இருப்பு வைத்துள்ளனர்.
இதனால், நடப்பு நிதியாண்டில், அரவைக்கான சோயா வரத்து, 50 சதவீதம் குறையும் என, மதிப்பிடப்பட்டுள்ளது.இதன் காரணமாக, சோயா புண்ணாக்கு ஏற்றுமதி சரிவடையும் என, எதிர்பார்க்கப்படுகிறது.இது, வியட்நாம் நாட்டிற்கு சாதகமாக அமையும். இந்திய சோயா புண்ணாக்கு ஏற்றுமதி குறைந்தால், ஜப்பான், ஈரான், இந்தோனேஷியா, தாய்லாந்து ஆகிய நாடுகள், வியட்நாம் போன்ற இதர நாடுகளில் இருந்து, அதனை இறக்குமதி செய்து கொள்ள வாய்ப்புள்ளது.இத்துடன், இந்திய சோயா புண்ணாக்கு விலை உயர்வும், ஏற்றுமதியை பாதிக்கக் கூடியதாக உள்ளது.
சராசரி விலை :இதர நாடுகளின் விலையை விட, இந்திய சோயா புண்ணாக்கின், சராசரி துறைமுக விலை, டன்னுக்கு, 20 30 டாலர் அதிகமாக உள்ளது.
சென்ற செப்டம்பரில், இந்தியாவின், 1 டன் சோயா புண்ணாக்கின் சராசரி துறைமுக விலை, 510 டாலராக இருந்தது. இது, அக்டோபரில், 540 டாலராக உயர்ந்து, நடப்பு நவம்பர் மாதம், 555 டாலராக அதிகரித்துள்ளது.அதே சமயம், அமெரிக்கா, பிரேசில், அர்ஜெண்டினா, போர்ச்சுகல் போன்ற நாடுகளில், இது, 530–535 டாலராக உள்ளது.இதனிடையே, கடந்த இரண்டு மாதங்களில், இந்தியாவின் 1 டன் சோயா புண்ணாக்கு விலை, 5.6 சதவீதம் உயர்ந்து, 33,010 ரூபாயாக அதிகரித்துள்ளது.இதே காலத்தில், 1 குவிண்டால் சோயா விலை, 14.1 சதவீதம் உயர்ந்து, 3,864 ரூபாயாக ஏற்றம் கண்டுள்ளது.
ஏற்கனவே செய்து கொண்ட ஒப்பந்தம் காரணமாக, வரும் டிசம்பர் வரையில், வர்த்தகர்கள், சோயா புண்ணாக்கை ஏற்றுமதி செய்ய முடியும்.அதற்கடுத்த மாதங்களுக்கு சப்ளை செய்வதற்கான வாய்ப்பு குறையத் துவங்கியுள்ளது."தரம் குறைந்த சோயா புண்ணாக்கு காரணமாக, எண்ணெய் உற்பத்தியாளர்களின் லாப வரம்பு பாதிக்கப்பட்டுள்ளது" என, எண்ணெய் உற்பத்தியாளர்கள் கூட்டமைப்பின் (எஸ்.இ.ஏ.,) செயல் இயக்குனர் பீ.வி.மேத்தா தெரிவித்தார்.
"நடப்பு எண்ணெய் பருவத்தில் (நவ.,–அக்.,) ஒட்டுமொத்த எண்ணெய் வித்துக்கள் ஏற்றுமதி, கடந்த பருவத்தை விட, 10 லட்சம் டன் குறையும்" என, ஜி.ஜி.என் நிறுவனத்தின் பங்குதாரர், நீரவ் தேசாய் தெரிவித்தார்.
எண்ணெய் உற்பத்தி:"பல இறக்குமதியாளர்கள், இந்திய சோயா புண்ணாக்கு ஏற்றுமதி 'ஆர்டர்' களை ரத்து செய்துள்ளனர்" என, மும்பையை சேர்ந்த சோயா புண்ணாக்கு தரகர் ரமேஷ் கோடெச்சா கூறினார்."வழக்கமாக, இம்மாதத்தில், எண்ணெய் உற்பத்தியாளர்கள், முழு வீச்சில் எண்ணெய் உற்பத்தியில் ஈடுபட்டிருப்பர்.
ஆனால், தற்போது 50 சதவீத உற்பத்தி மட்டுமே நடைபெறுகிறது ", என, சோயா பதப்படுத்தல் கூட்டமைப்பின் தலைமை ஒருங்கிணைப்பாளர் ராஜேஷ் அகர்வால் தெரிவித்தார்.– பிசினஸ் ஸ்டாண்டர்ட் உடன் இணைந்து –
மேலும் பொது செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|