பதிவு செய்த நாள்
04 டிச2013
00:48

புதுடில்லி: சென்ற செப்டம்பர் மாதத்தில், நாட்டில் மேற்கொள்ளப்பட்ட அன்னிய நேரடி முதலீடு, 39 சதவீதம் சரிவடைந்து, 291 கோடி டாலராக (17,460 கோடி ரூபாய்) வீழ்ச்சி கண்டுள்ளது என, தொழிற் கொள்கை மற்றும் மேம்பாட்டு துறை தெரிவித்து உள்ளது.கடந்தாண்டின் இதே மாதத்தில், இந்தியாவில் மேற்கொள்ளப் பட்ட அன்னிய நேரடி முதலீடு, 467 கோடி டாலராக(28,020 கோடி ரூபாய்) அதிகரித்து காணப்பட்டது. நடப்பு, 2013-14ம் நிதியாண்டின் ஏப்ரல் முதல் செப்டம்பர் வரையிலான முதல் ஆறுமாத காலத்தில், நாட்டில் மேற்கொள்ளப்பட்ட அன்னியநேரடி முதலீடு, 11 சதவீதம் சரிவடைந்து, 1,137 கோடி டாலராக (68,220 கோடி ரூபாய்) குறைந்துள்ளது. இது, கடந்த நிதியாண்டின் இதே காலத்தில், 1,284 கோடி டாலராக (77,040 கோடி ரூபாய்) உயர்ந்து காணப்பட்டது. குறிப்பாக சேவைகள், தொலைத்தொடர்பு, உலோகம் ஆகிய துறைகளில், மேற்கொள்ளப்பட்ட அன்னிய நேரடி முதலீடு குறிப்பிடத்தக்க அளவிற்கு சரிவடைந்து உள்ளது.நடப்பு நிதியாண்டின் முதல் ஆறுமாத காலத்தில், நாட்டின் உலோக துறையில் மேற்கொள்ளப்பட்ட அன்னிய நேரடி முதலீடு, 68.50 கோடி டாலரிலிருந்து, 24 கோடி டாலராக வீழ்ச்சி கண்டு உள்ளது. இதே போன்று, இந்தியதொலைத்தொடர்பு துறையில் மேற்கொள்ளப்பட்ட அன்னிய நேரடி முதலீடு, 4.3 கோடி டாலரிலிருந்து, 3.2 கோடி டாலராக குறைந்துள்ளது. இதே காலத்தில், சேவைகள் துறையில் மேற்கொள்ளப்பட்ட அன்னிய நேரடி முதலீடு, 304 கோடி டாலரிலிருந்து, 132 கோடி டாலராக வீழ்ச்சி கண்டுள்ளது. மத்திய அரசு, அன்னிய நேரடி முதலீட்டை அதிகளவில் கவரும் வகையில், பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. குறிப்பாக தொலை தொடர்பு, தேயிலை, பெட்ரோலியம், இயற்கை எரிவாயு உள்ளிட்ட, 12 துறைகளில், அன்னிய நேரடி முதலீடு மேற்கொள்வது தொடர்பான விதிமுறைகள் தளர்த்தப்பட்டு உள்ளன.இதன் காரணமாக, வரும் மாதங்களில், அன்னிய நேரடி முதலீடு சிறப்பான அளவில் அதிரிக்கும் என, எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த, 2011-12ம் நிதிஆண்டில், இந்தியாவில் மேற்கொள்ளப்பட்ட அன்னிய நேரடி முதலீடு, 3,650 கோடி டாலராக இருந்தது. இது, 2012-13ம் நிதியாண்டில், 2,242 கோடி டாலராக வீழ்ச்சி கண்டது.
மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|