பதிவு செய்த நாள்
21 டிச2013
00:16

பரமக்குடி:வரலாறு காணாத அளவிற்கு, பட்டு நூலிழை விலை உயர்ந்து உள்ளதால், நெசவாளர்கள், சிறு வியாபாரிகள் ஆகியோர் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.
காஞ்சிபுரம்;பரமக்குடி, எமனேஸ்வரம், கும்பகோணம், தஞ்சாவூர், காஞ்சி புரம் ஆகிய ஊர்களில், பட்டு கைத்தறி நெசவுத் தொழில் செய்பவர்கள், பம்பர் பட்டு, பருத்தி பட்டு ரகங்களை நெய்கின்றனர்.இதற்கான பிரதான மூலப் பொருட்களான பெங்களூரு பட்டு, மால்டா பட்டு மற்றும் ஓரிழை, ஈரிழை பாவுகளின் விலை, 1,000 ரூபாய்க்கும் மேல்
அதிகரித்துள்ளது.
கடந்த ஆண்டு டிசம்பரில், 3,600 ரூபாயாக இருந்த பெங்களூரு பட்டு விலை, நடப்பாண்டு அக்டோபரில், 4,300 ரூபாயாகவும், நவம்பரில், 4500 ரூபாய் என்ற அளவிலும், தற்போது, 4,700 ரூபாயாகவும் உயர்ந்துள்ளது.இதே காலத்தில், மால்டா பட்டு விலை, 3,100 லிருந்து, 3,850 ரூபாயாகவும், கோரா சாதாபாவு (ஓரிழை), 3,000 லிருந்து, 3,700 ரூபாயாகவும், கோரா கெண்டம்பாவு (ஈரிழை) 3,200லிருந்து, 3,850 ரூபாயாகவும் அதிகரித்துள்ளன.தங்கத்திற்கு ஈடாக பட்டு, பாவுகளின் விலை தினமும் நெசவாளர்களையும், உற்பத்தியாளர்களையும் மிரட்டி வருகிறது.
ஆனால், சந்தையில் பட்டு சேலைகளின் விலை ஏற்றம் இன்றி, பழைய விலைக்கே விற்பனை செய்யும் நிலை உள்ளது. கைத்தறி நெசவிற்கென, 11 ரகங்களை அரசு ஒதுக்கி உள்ளது.
குறைந்த விலை:ஆனால், அது முழுமையாக அமல்படுத்தப்படாததால், கைத்தறியில் நெய்ய வேண்டிய அனைத்து ரகங்களும், டிசைன்களும், விசைத்தறியில் குறைந்த விலையில் நெய்யப்படுகின்றன.மேலும், கோ–ஆப்டெக்ஸ் போன்ற, அரசு நிறுவனங்களும் விசைத்தறி சேலைகளை மட்டுமே, அதிக அளவில் கொள்முதல் செய்கின்றன.இதனால், உண்மையான கைத்தறி சேலைகளை, தரம் பிரித்து பார்க்க முடியாமல், மக்கள் ஏமாற்றமடைந்து வருகின்றனர்.
பட்டு நெசவு உற்பத்தியாளர்கள் சிலர் கூறியதாவது:2011ம் ஆண்டு ஜனவரியில், 4,000 ரூபாயாக இருந்த பட்டு நுாலிழை விலை, டிசம்பரில் 2,000 ஆக குறைந்தது. தற்போது மீண்டும் உயர்ந்துள்ளது.இந்தியாவில் பட்டு நூலிழை உற்பத்தி, மொத்த தேவையில், 40 சதவீத அளவிற்கே உள்ளது. 60 சதவீத பட்டு நூலிழையை இறக்குமதி செய்ய வேண்டி உள்ளது. ஆனால், இறக்குமதி செய்யும் பட்டிற்கு, அரசு, 15 சதவீதம் வரி விதிக்கிறது. கைத்தறியில் ஒரு சேலையின் எடை ஒரு கிலோவாக இருந்தால், அதே சேலையை, 800 கிராமில்,விசைத்தறி மூலம் நெய்து விடுகின்றனர்.இதனால், 300 கிராம் பட்டு தேவைப்படும் இடத்தில், 200 கிராம் மட்டுமே அவர்களுக்கு தேவைப்படுகிறது.
விசைத்தறி:இதனால்,விசைத்தறி மூலம் நெய்யப்படும் பட்டு, கைத்தறியை விட குறைந்த விலைக்கு கிடைக்கிறது. ஆகவே, இறக்குமதி செய்யப் படும் நூலிழைக்கான சேவை வரியை, ரத்து செய்ய வேண்டும். இல்லாத பட்சத்தில், நெசவாளர்களுக்கு ‘ஆர்டர்’ கொடுப்பதில் சிக்கல் ஏற்படும்.நெசவு தொழிலை ஊக்கப்படுத்த மத்திய, மாநில அரசுகள் பட்டு மூலப் பொருட்களின் விலை உயர்வை கட்டுப்படுத்த வேண்டும். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.
மேலும் கம்மாடிட்டி செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|