பதிவு செய்த நாள்
28 டிச2013
02:29

சென்னை: கடுமையான பனிப்பொழிவு காரணமாக, தமிழகத்தில், குண்டு மல்லி உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது.ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம் மற்றும் அதன் சுற்றுப் பகுதியில், நூற்றுக்கணக்கான விவசாயிகள், குண்டு மல்லி சாகுபடியில் ஈடுபட்டுள்ளனர்.
இப்பகுதிகளில், 700 ஹெக்டேர் பரப்பளவில், குண்டு மல்லி சாகுபடி நடைபெறுகிறது. நடப்பு டிசம்பர் மாதத்தில், கடுமையான பனிப்பொழிவால், குண்டுமல்லி உற்பத்தி பாதிக்கப் பட்டுள்ளது. குறிப்பாக, மலைப்பகுதிகளில், உறைபனி காரணமாக, குண்டு மல்லி, மொட்டாக இருக்கும் போதே கருகி விடுகிறது.
இதனால், தாண்டம்பாளையம், புதுகொய்னூர், கொத்தமங்கலம், வடவல்லி, கெஞ்சனூர், சிக்கரசம்பாளையம் பகுதிகளில், குண்டு மல்லி சாகுபடியில் ஈடுபட்டுள்ள விவசாயிகள் கடுமையான இழப்பை சந்தித்துள்ளனர்.
குண்டு மல்லி உற்பத்தி குறைவால், சத்தியமங்கலம் சந்தையில், அதன் வரத்து, 30 டன்னில் இருந்து, 1 – 2 டன் என்ற அளவில், வீழ்ச்சி கண்டுள்ளது.அதே சமயம், சந்தைக்கு வரும் சிறிய அளவிலான குண்டு மல்லியின் தரம் நன்கு உள்ளதால், அதன் விலை, அதிக வேறுபாடின்றி, கிலோ, 300 ரூபாயாக உள்ளது என, வர்த்தகர்கள் தெரிவிக்கின்றனர்.
குண்டு மல்லிக்கு புகழ் பெற்ற சத்தியமங்கலம் சந்தைக்கு, ஈரோடு, கோயம்புத்தூர் ஆகிய மாவட்டங்களில் இருந்து ஏராளமான வியாபாரிகள் வருவர்.அதுபோன்று, கர்நாடகா மாநிலத்தின், பெங்களூரு, மைசூர், சாம்ராஜ்நகர் ஆகியபகுதிகளை சேர்ந்த வியாபாரிகளும், சத்தியமங்கலம் சந்தையில், குண்டு மல்லி வாங்க வருவது வழக்கம்.
தற்போது, குண்டு மல்லி வரத்து குறைந்துள்ளதால், அவற்றை கொள்முதல் செய்ய வரும் வியாபாரிகளின் எண்ணிக்கையும் குறைந்துள்ளது.வரும்,2014 பிப்ரவரி வரை, குண்டு மல்லி உற்பத்தியும், வரத்தும் குறைவாகவே இருக்கும் என,சந்தையாளர்கள் தெரிவித்தனர்.
மேலும் பொது செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|