பதிவு செய்த நாள்
28 டிச2013
02:37

நடப்பு 2013–14ம் நிதியாண்டில், ஏப்ரல் முதல் அக்டோபர் வரையிலான ஏழு மாத காலத்தில், உருக்கு உருண்டைகள் ஏற்றுமதி, 11 மடங்கு அதிகரித்து, 4.35 லட்சம் டன்னாக உயர்ந்துள்ளது. இது, கடந்த நிதியாண்டின் இதே காலத்தில், 40 ஆயிரம் டன் என்ற அளவில் இருந்தது.
மூலப்பொருள்:உருக்கு உற்பத்தியில், உருக்கு உருண்டைகள் முக்கிய மூலப் பொருளாக உள்ளன. கணக்கீட்டு காலத்தில், நாட்டின் இரும்புத் தாது ஏற்றுமதியை விட, உருக்கு உருண்டைகள் ஏற்றுமதி சிறப்பான அளவில் அதிகரித்துள்ளது.நாட்டின் மொத்த இரும்புத் தாது ஏற்றுமதியில், உருக்கு உருண்டைகளின் பங்களிப்பு, 5 சதவீதம் என்ற அளவில் உள்ளது.
நடப்பு நிதியாண்டின் முதல் ஏழு மாத காலத்தில், நாட்டின் இரும்புத்தாது ஏற்றுமதி, 84.30 லட்சம் டன்னாக இருந்தது. இது, கடந்த நிதியாண்டின் இதே காலத்தில் மேற்கொள்ளப்பட்ட ஏற்றுமதியை விட, 43.50 சதவீதம் குறைவாகும். நடப்பு நிதியாண்டில், உருக்கு உருண்டைகள் ஏற்றுமதி, 8 லட்சம் டன்னை தாண்டும் என, மதிப்பிடப்பட்டுள்ளது.
இந்திய உருக்கு உருண்டைகளுக்கு, உலகளவில், குறிப்பாக, சீனாவில் அதிக தேவை உள்ளது. உள்நாட்டில் உருக்கு உருண்டைகளுக்கான தேவை குறைந்துள்ள நிலையில்,
பன்னாட்டு சந்தையில் இதற்கு தேவை அதிகரித்துள்ளது.
உள்நாட்டில், ஒரு டன் உருக்கு உருண்டை விலை, 7,000 டாலர் என்ற அளவில் உள்ள நிலையில், சர்வதேச சந்தையில் இதன் விலை, 9,900 டாலராக உள்ளது. சர்வதேச சந்தையில், இதற்கு நல்ல விலை கிடைப்பதால், உருக்கு உருண்டை உற்பத்தியில் ஈடுபட்டு வரும், பல நிறுவனங்கள், இதன் ஏற்றுமதியில் அதிக கவனம் செலுத்தி வருவதுடன், உற்பத்தி திறன் அதிகரிப்பிலும் ஈடுபட்டு வருகின்றன.
உற்பத்தி திறன்:தற்போது, உள்நாட்டில், 36 உருக்கு உருண்டைகள் தயாரிப்பு தொழிற்சாலைகள் உள்ளன. இவற்றின் ஒட்டு மொத்த உற்பத்தி திறன், ஆண்டுக்கு, 6.30 கோடி டன் என்ற அளவில் உள்ளது.
பல நிறுவனங்கள் விரிவாக்க நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதுடன், புதிய தொழிற்சாலைகளையும் அமைத்து வருகின்றன.இதையடுத்து, வரும் 2016–17ம் நிதியாண்டில், நாட்டின் உருக்கு உருண்டைகள் உற்பத்தி, கூடுதலாக, 7.20 கோடி டன் அதிகரித்து, ஆண்டுக்கு, 13.50 கோடி டன்னாக உயரும் என, இத்துறையைச் சேர்ந்த ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.
டாட்டா ஸ்டீல்:உள்நாட்டில், ஜே.எஸ்.பி.எல்., எஸ்ஸார் ஸ்டீல், அர்டன்ட், ஸ்டெம்கோர், கோதாவரி, டாட்டா ஸ்டீல், ஜே.எஸ்.டபிள்யூ., ஆர்யா பில்லட்ஸ் மற்றும் கே.ஐ.ஓ.சி.எல் (முன்பு குதிரைமூக்கு அயன் ஓர் கம்பெனி என்ற பெயரில் இருந்தது) போன்ற நிறுவனங்கள் உருக்கு உருண்டை உற்பத்தியில் ஈடுபட்டு வருகின்றன.
மேற்கண்ட நிறுவனங்களுள், எஸ்ஸார் ஸ்டீல், ஜே.எஸ்.டபிள்யூ, ஜே.எஸ்.பி.எல்., டாட்டா ஸ்டீல் மற்றும் ஸ்டெம்கோர் ஆகிய நிறுவனங்கள் விரிவாக்க நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றன.
நாட்டின் ஒட்டு மொத்த இரும்புத்தாது ஏற்றுமதியில், உருக்கு உருண்டைகளின் ஏற்றுமதி, 5 சதவீத அளவிற்குத்தான் உள்ளது. என்றாலும், பல வர்த்தக கூட்டமைப்புகள் உருக்கு உருண்டைகள் ஏற்றுமதி, மீது 30 சதவீதம் வரிவிதிக்க வேண்டும் என, கோரிக்கை விடுத்துள்ளன.அவ்வாறு வரி விதிக்கப்படும் நிலையில், உள்நாட்டில், உருக்கு உற்பத்தியில் ஈடுபட்டு வரும் நிறுவனங்களுக்கு, அதிகளவில் உருக்கு உருண்டைகள் கிடைக்கும்.
ஏற்றுமதி வரி:குறிப்பாக, உள்நாட்டில் போதிய அளவிற்கு இரும்புத்தாது கிடைக்காத நிலையில், இரும்புத் தாதுவிலிருந்து தயாரிக்கப்படும் உருக்கு உருண்டைகளை வரி இல்லாமல், இத்துறை நிறுவனங்கள் ஏற்றுமதி செய்து வருகின்றன. எனவே, மத்திய அரசு, உருக்கு உருண்டை கள் ஏற்றுமதி மீது வரி விதிக்க வேண்டும் என, வர்த்தக கூட்டமைப்புகள் கூறி வருகின்றன.
– பிசினஸ் ஸ்டாண்டர்ட் உடன் இணைந்து –
மேலும் பொது செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|