பதிவு செய்த நாள்
04 பிப்2014
23:51

புதுடில்லி:நடப்பு பருவத்தில், ஜன., வரையிலான நான்கு மாத காலத்தில், நாட்டின் சர்க்கரை உற்பத்தி, 1.15 கோடி டன்னாக சரிவடைந்து உள்ளது.
இது, கடந்தாண்டின் இதே காலத்தில், 1.39 கோடி டன்னாக இருந்தது.ஆக, மதிப்பீட்டு காலத்தில், இதன் உற்பத்தி, 16.6 சதவீதம் சரிவடைந்துள்ளதாக, இந்திய சர்க்கரை ஆலைகள் கூட்டமைப்பு (இஸ்மா) தெரிவித்துள்ளது.நம் நாட்டில், சர்க்கரை பருவம், அக்., முதல் செப்., வரை கணக்கிடப்படுகிறது.
நாட்டில் சர்க்கரை அதிகளவில் உற்பத்தியாகும், மகாராஷ்டிரா, உத்தரபிரதேசம் ஆகிய மாநிலங்களில், கரும்பு அரவை தாமதமாக துவங்கியதால், சர்க்கரை உற்பத்தி குறைந்து போயுள்ளது.இந்நிலையில், கடந்த 15 மாதங்களில், உள்நாட்டில், சர்க்கரை விலை கிலோவுக்கு, 6 8 ரூபாய் வரை குறைந்துள்ளது. அதேசமயம், கரும்புக்கான விலை, அதிகரித்துள்ளது. இதனால், சர்க்கரை உற்பத்திக்கான செலவு அதிகரித்துள்ளது.
நடப்பு சர்க்கரை பருவத்தின் துவக்கத்தில், சர்க்கரை ஆலைகள், விவசாயிகளுக்கு கொடுக்க வேண்டிய நிலுவை தொகை, 3,000 கோடி ரூபாயாக இருந்தது. இது, ஜன., மாத இறுதியில், 10 ஆயிரம் கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது.உற்பத்தி செலவு அதிகரித்து, சர்க்கரையின் விலை சரிவடைந்துள்ளதால், விவசாயிகளுக்கு, உரிய காலத்தில், கரும்பிற்கான தொகையை அளிக்க முடியவில்லை என, ‘இஸ்மா’ தெரிவித்துள்ளது.
கணக்கீட்டு காலத்தில், மகாராஷ்டிராவில் சர்க்கரை உற்பத்தி, 48.50 லட்சம் டன்னிலிருந்து, 40.75 லட்சம் டன்னாக குறைந்துள்ளது.இதே போன்று, உத்தரபிரதேச மாநிலத்திலும், இதன் உற்பத்தி, 35.90 லட்சம் டன்னிலிருந்து, 27.60 லட்சம் டன்னாக சரிவடைந்துள்ளது.இருப்பினும், நடப்பு பருவத்தில், நாட்டின் சர்க்கரை உற்பத்தி, 2.50 கோடி டன்னாக இருக்கும் என, ‘இஸ்மா மதிப்பிட்டுள்ளது. கடந்த 2012 13ம் பருவத்தில், இதன் உற்பத்தி, 2.51 கோடி டன்னாக இருந்தது.உலகளவில், சர்க்கரை உற்பத்தியில், இந்தியா இரண்டாவது இடத்தில் உள்ளது.
அதேசமயம், பயன்பாட்டிலும் முன்னணி நாடாக திகழ்கிறது.நடப்பு பருவத்தில், உள்நாட்டில் சர்க்கரை பயன்பாடு, 2.30 கோடி டன்னாக இருக்கும் என, ‘இஸ்மா மேலும் தெரிவித்துள்ளது.
மேலும் கம்மாடிட்டி செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|