பதிவு செய்த நாள்
22 பிப்2014
16:32

பெருந்துறை: முன்பணம் செலுத்துவோருக்கே முட்டை வினியோகம் செய்ய வேண்டும்' என, தேசிய மண்டல முட்டை ஒருங்கிணைப்பு குழு ஆலோசனைக் கூட்டத்தில் (நிக்), முடிவு செய்யப்பட்டது.
ஈரோடு மாவட்டம், பெருந்துறையில், நடந்த இக்கூட்டத்தில், தலைமை வகித்த சேர்மன், செல்வராஜ் பேசியதாவது: இனி வரும், ஐந்து மாதங்களில், முட்டை உற்பத்தி குறையும்; தேவைக்கு ஏற்ப, உற்பத்தி இருக்காது. பிற மாநிலங்களின் முட்டையை விட, தமிழகத்தில் உற்பத்தியாகும் முட்டை, நல்ல தரத்துடன் உள்ளதால், சந்தையில், தமிழக முட்டைகளுக்கு நல்ல கிராக்கி உள்ளது. வரும் கோடையில், முன்பணம் செலுத்துபவர்களுக்கு மட்டுமே, கோழிப் பண்ணைக்காரர்கள், முட்டை சப்ளை செய்ய வேண்டும். இன்றும், சில பண்ணைக்காரர்களிடம், முன்பணம் செலுத்தி, வியாபாரிகள் முட்டையை எடுத்து வருகின்றனர். இதை, நாமும் பழக்கத்துக்கு கொண்டு வர வேண்டும். அதனால், முட்டை உற்பத்தி அதிகமாக இருக்கும் காலத்திலும், பணம் கொடுத்து, வியாபாரிகள் முட்டை வாங்கும் பழக்கத்துக்கு வந்து விடுவர். இதை ஒற்றுமையாக இருந்து, செய்ய வேண்டும். புதிதாக பண்ணை அமைப்பவர்கள், ஒரு கோழிக்கு, "ஷெட்' அமைக்க குறைந்தது, 600 ரூபாய் வரை செலவு செய்ய வேண்டும். தொழிலாளர்கள் தட்டுப்பாடு மற்றும் தண்ணீர் பிரச்னை காரணமாக. புதிய பண்ணைகள் வருவதற்கு, இன்று வாய்ப்புகள் மிக மிக குறைவு.
நிக் விலைக்கு, பண்ணைக்காரர்கள் முட்டை விற்பனை செய்வதால், பண்ணைக்காரர்களுக்கு நல்ல விலை கிடைப்பதுடன், நுகர்வோர்களுக்கு குறைந்த விலைக்கு, முட்டை கிடைக்கிறது. முட்டை சாப்பிடுபவர்கள் எண்ணிக்கையும், கணிசமாக அதிகரித்துள்ளது. நாம் அனைவரும் ஒற்றுமையாக இருந்தால், நஷ்டத்தில் இருந்து தப்பிக்க முடியும்.இவ்வாறு, அவர் கூறினார்.
மேலும் பொது செய்திகள்




|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|