பதிவு செய்த நாள்
24 பிப்2014
12:41

மதுரை: 'காஸ் சிலிண்டர் டீலர்களின் பல கோரிக்கைகளை, அரசு நிறைவேற்ற வலியுறுத்தி, நாளை முதல் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக', காஸ் டீலர்கள் அறிவித்தனர். இதனால், சிலிண்டர் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் உள்ளது.
மதுரையில் நேற்று, அகில இந்திய எல்.பி.ஜி., வினியோகஸ்தர்கள் கூட்டமைப்பு மற்றும் இந்திய எல்.பி.ஜி., வினியோகஸ்தர்கள் கூட்டமைப்பு சார்பில், தென்மாவட்டங்களை சேர்ந்த நிர்வாகிகளின் ஆலோசனை கூட்டம் நடந்தது. கூட்டமைப்பு துணைத் தலைவர் சுரேஷ்குமார் கூறியதாவது: காஸ் சிலிண்டர்களில் வீட்டு உபயோக மானிய விலை சிலிண்டர், மானியம் இல்லாத சிலிண்டர், வர்த்தக சிலிண்டர் என விலைகளில் உள்ள வேறுபாடுகள் தான் எல்.பி.ஜி., வியாபாரத்தில் உள்ள அனைத்து முரண்பாடுகளுக்கும் காரணமாக உள்ளது. இதனால், ஒற்றை விலை நிர்ணயம் செய்ய வேண்டும். எண்ணெய் நிறுவனங்களில் இருந்து லாரிகளில் வெளிவரும் காஸ் சிலிண்டர்களில், திருட முடியாத வகையில் 'சீல்' பயன்படுத்த வேண்டும். மார்க்கெட்டுகளில் 2 முதல் 5 கிலோ சிலிண்டர்கள் பயன்படுத்தப்படுகிறது. இந்த சிலிண்டர்களுக்கு காஸ் நிரப்பும் உரிமை யாருக்கும் இல்லாத நிலையில், இதன் பயன்பாடு அனைத்து இடங்களிலும் உள்ளது. திருட்டு கும்பலால் இந்த முறைகேடுகள் தொடர்ந்து வருகிறது.
எம்.டி.ஜி., 2014 வழிகாட்டுதல்களிலிருந்து, டீலர்களின் உரிமையை ரத்து செய்யும் பிரிவை அகற்ற வேண்டும். புதிய டீலர்கள் என்ற அறிவிப்புகள் வாடிக்கையாளர்கள் சேவையை எதிர்மறையாக பாதிக்கும். எனவே, இந்த அறிவிப்பை ரத்து செய்ய வேண்டும். இது போன்ற பல கோரிக்கைகளுக்காக, அகில இந்திய அளவில் நாளை முதல் காஸ் டீலர்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட உள்ளனர்.பிரச்னைகளுக்கு தீர்வு கிடைக்கும் வரையில், தொடர்ந்து போராட்டம் நடக்கும். மதுரையில் 28 டீலர்கள் உட்பட தென்மாவட்ட அளவில் 200 டீலர்கள், இப்போராட்டத்தில் பங்கேற்க உள்ளனர், என்றார். பாரத் காஸ் ஏரியா செயலர் ரவீந்திரன், எச்.பி., காஸ் நாகராஜன் உடனிருந்தனர். 'ஸ்டிரைக்' அறிவிப்பால், காஸ் சிலிண்டர் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் உள்ளது.
மேலும் பொது செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|