பதிவு செய்த நாள்
02 ஏப்2014
15:16

புதுடில்லி: வேறு வங்கிகளின் ஏ.டி.எம்.,களை பயன்படுத்தி பணப் பரிவர்த்தனை மேற்கொள்வதை தவிர்க்குமாறு, ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா (எஸ்.பீ.ஐ.,), அதன் ஊழியர்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளது.
இவ்வங்கி அதன் அனைத்து ஊழியர்களுக்கும் மின்னஞ்சல் அனுப்பியுள்ளது. அதில், 'நமது வங்கியில் பணியாற்றிக் கொண்டு, வேறு வங்கிகளின் 'ஏ.டி.எம்.,'களை பயன்படுத்துவது நியாயமா? இதை தவிர்க்க முடியாதா? இது நமது பெருமைக்கு பாதிப்பை ஏற்படுத்தாதா?' என, அடுக்கடுக்கான கேள்விகள் கேட்கப்பட்டுள்ளன. வங்கியின் ஒருங்கிணைந்த ஏ.டி.எம்., சேவையை அனைத்து ஊழியர்களும் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். இதன் மூலம், வங்கி நிர்வாகத்துடனான உறவு வலுப்படும். இதனால், பிற ஏ.டி.எம்., பயன்பாட்டிற்கு, குறிப்பாக, போட்டி வங்கிகளுக்கு பரிவர்த்தனை கட்டணம் செல்வது தடுக்கப்படும் என, எஸ்.பீ.ஐ., தெரிவித்துள்ளது.
கடந்த, 2013ம் ஆண்டு, டிசம்பர் 31ம் தேதி நிலவரப்படி, எஸ்.பீ.ஐ., பணியாளர்களின் எண்ணிக்கை, 2 லட்சத்து 23 ஆயிரத்து 675 ஆக உள்ளது. இவர்களுள் பல ஊழியர்கள், பிற வங்கிகளின் ஏ.டி.எம்.,கள் மூலம், மாதம், சராசரியாக 2.80 லட்சம் பரிவர்த்தனைகளை மேற்கொள்கின்றனர். இந்த வகையில், வங்கிக்கு, மாதந்தோறும் வரிகள் நீங்கலாக, 42 லட்சம் ரூபாய் செலவாகிறது. வேறு வங்கியின் ஏ.டி.எம்.,ஐ ஒரு முறை பயன்படுத்தினால், அந்த வங்கிக் கிளைக்கு, 15 ரூபாய் அளிக்க வேண்டியுள்ளது. இதனால், எஸ்.பீ.ஐ., அதன் லாபத்தில், ஆண்டுக்கு, 5 கோடி ரூபாயை இழக்கிறது. இதை தடுக்கும் நோக்கில், எஸ்.பீ.ஐ., அதன் ஊழியர்களுக்கு மேற்கண்ட வேண்டுகோளை விடுத்துள்ளது. அதிக அளவில் வசூலாகாத கடனை கொண்டுள்ள எஸ்.பீ.ஐ., அதன் செலவினங்களை குறைக்க, பல்வேறு சிக்கன நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
மேலும் வங்கி மற்றும் நிதி செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|