பதிவு செய்த நாள்
26 மே2014
00:31

புதுடில்லி:கடந்த 2013–14ம் நிதியாண்டில், இந்தியாவின் ஒட்டு மொத்த தோல் பொருட்கள் ஏற்றுமதி, 31 சதவீதம் வளர்ச்சி கண்டு, 35,748 கோடியாக அதிகரித்துள்ளது. இது, முந்தைய நிதியாண்டில், 27,288 கோடி ரூபாயாக இருந்தது.
இதே காலத்தில், டாலர் மதிப்பு அடிப்படையிலான ஏற்றுமதி, 17.81 சதவீதம் வளர்ச்சி கண்டு, 501 கோடி டாலரிலிருந்து, 590 கோடி டாலராக உயர்ந்துள்ளது என, வர்த்தக புலனாய்வு மற்றும் புள்ளியியல் தலைமை இயக்குனரகம் வெளியிட்டுள்ள புள்ளிவிவரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
காலணிகள்:கணக்கீட்டு நிதியாண்டில், தோலினால் செய்யப்பட்ட காலணிகள் ஏற்றுமதி, 32.03 சதவீதம் அதிகரித்து, 9,216 கோடியிலிருந்து, 12,168 கோடி ரூபாயாக வளர்ச்சி கண்டுள்ளது.பயன்பாட்டிற்கு தயாரான தோல் பொருட்கள் ஏற்றுமதி, 30.59 சதவீதம் உயர்ந்து, 5,950 கோடியிலிருந்து, 7,771 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது.
காலணிகளுக்கான உதிரி தோல் பாகங்கள் ஏற்றுமதியும், 43.01 சதவீதம் உயர்ந்து, 1,337 கோடியிலிருந்து, 1,913 கோடி ரூபாயாக வளர்ச்சி கண்டு உள்ளது.இந்திய தோல் ஆடைகளுக்கு வெளிநாடுகளில் அதிக கிராக்கி உள்ளது. எனவே, மதிப்பீட்டு நிதியாண்டில், இதன் ஏற்றுமதியும், 17.63 சதவீதம் அதிகரித்து, 3,066 கோடியிலிருந்து, 3,606 கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது.
விலங்கு:மேற்கண்டவை தவிர, தோல் பொருட்கள் ஏற்றுமதி, கணக்கீட்டு நிதியாண்டில், 27.27 சதவீதம் உயர்ந்து, 6,424 கோடியிலிருந்து, 8,176 கோடி ரூபாயாக வளர்ச்சி கண்டுள்ளது.குதிரைகளுக்கான சேணம் போன்ற, விலங்குகளுக்கான தோல் பொருட்கள் ஏற்றுமதி, 46.57 சதவீதம் அதிகரித்து, 600 கோடியிலிருந்து, 880 கோடி ரூபாயாக வளர்ச்சி கண்டுள்ளது.
தோல் சாரா, இதர வகை காலணிகளுக்கு அயல்நாடுகளில் வரவேற்பு அதிகரித்ததையடுத்து, இவற்றின் ஏற்றுமதி, மதிப்பீட்டு நிதியாண்டில், 77.91 சதவீதம் உயர்ந்து, 691 கோடியிலிருந்து, 1,230 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது.மொத்த தோல் பொருட்கள் ஏற்றுமதியில், காலணிகள் பிரிவு,42.83 சதவீத பங்களிப்புடன் முதலிடத்தில் உள்ளது. இதையடுத்து, தோல் பொருட்கள் (22.87 சதவீதம்),பயன்பாட்டிற்கு தயாரான தோல் பொருட்கள் (21.74 சதவீதம்), தோல் ஆடைகள் (10.09 சதவீதம்), விலங்குகளுக்கான தோல் பொருட்கள் (2.46 சதவீதம்) ஆகியவை உள்ளன.
ஜெர்மனி:சென்ற நிதியாண்டில், நாட்டின் ஒட்டு மொத்த தோல் ஏற்றுமதியில், ஜெர்மனி, 12.92 சதவீத பங்களிப்புடன் முதலிடத்தில் உள்ளது. இந்நாட்டிற்கான, இந்தியாவின் தோல் பொருட்கள் ஏற்றுமதி, டாலர் மதிப்பின் அடிப்படையில், 20.96 சதவீதம் உயர்ந்து, 63 கோடி டாலரிலிருந்து, 76 கோடி டாலராக உயர்ந்துள்ளது.அமெரிக்கா, 11.32 சதவீத பங்களிப்புடன் இரண்டாமிடத்திலும், இங்கிலாந்து, 11.20 சதவீத பங்களிப்புடன், மூன்றாமிடத்திலும் உள்ளன.இதையடுத்து, இத்தாலி, ஹாங்காங், பிரான்ஸ், ஸ்பெயின் உள்ளிட்ட நாடுகள் உள்ளன.வரும் 2016–17ம் நிதியாண்டில், இந்தியாவின் தோல் பொருட்கள் ஏற்றுமதி, 1,400 கோடி டாலரை (84 ஆயிரம் கோடி ரூபாய்) எட்டும் என, தோல் பொருள் ஏற்றுமதி கவுன்சில் தெரிவித்துள்ளது.
மேலும் பொது செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|