பதிவு செய்த நாள்
21 ஜூன்2014
00:49

மும்பை :நடப்பு 2014–15ம் நிதிஆண்டின் முதல் இரண்டு மாத (ஏப்.,–மே) காலத்தில், நாட்டின் நவரத்தினங்கள் மற்றும் ஆபரணங்கள் ஏற்றுமதி, 2.82 சதவீதம் வளர்ச்சி கண்டு, 32,193 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது என, நவரத்தினங்கள் மற்றும் ஆபரணங்கள் ஏற்றுமதி மேம்பாட்டு கவுன்சிலின் (ஜி.ஜே.இ.பி.சி.,) தற்காலிக புள்ளிவிவரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வளர்ச்சி:கடந்த நிதியாண்டின் இதே காலத்தில், இவற்றின் ஏற்றுமதி, 31,309 கோடி ரூபாயாக இருந்தது.கணக்கீட்டு காலத்தில், டாலருக்கு எதிரான ரூபாய் மதிப்பு உயர்வால், நவ ரத்தினங்கள் மற்றும் ஆபரணங்கள் ஏற்றுமதி, ரூபாய் மதிப்பு அடிப்படையில் சிறப்பாக, வளர்ச்சி கண்டுள்ளது.அதேசமயம், டாலர் மதிப்பின் அடிப்படையில் இவற்றின் ஏற்றுமதி, 6.08 சதவீதம் சரிவடைந்து, 572 கோடி டாலரிலிருந்து, 537 கோடி டாலராக குறைந்துள்ளது.
வைரம்: மதிப்பீட்டு காலத்தில், நறுக்கப்பட்ட மற்றும் பட்டை தீட்டப்பட்ட வைரங்கள் ஏற்றுமதி, 8.60 சதவீதம் உயர்ந்து,18,023 கோடியிலிருந்து, 19,573 கோடி ரூபாயாக வளர்ச்சி கண்டுள்ளது. அதேசமயம், அளவின் அடிப்படையில், இவற்றின் ஏற்றுமதி, 58.62 லட்சம் காரட்டிலிருந்து, 54.12 லட்சம் காரட்டாக சரிவடைந்துள்ளது.
தங்கம்: தங்க ஆபரணங்கள் ஏற்றுமதி, கணக்கீட்டு காலத்தில், 27.24 சதவீதம் உயர்ந்து, 5,979 கோடியிலிருந்து, 7,608 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது.அதேசமயம், தங்க நாணயங் கள் மற்றும் பதக்கங்கள் ஏற்றுமதி, 24.15 சதவீதம் வீழ்ச்சி கண்டு, 2,542 கோடியிலிருந்து, 1,928 கோடி ரூபாயாக சரிவடைந்து உள்ளது.குறிப்பாக, சென்ற மே மாதத்தில், இவற்றின் ஏற்றுமதி முற்றிலும் நின்று போயுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
வெள்ளி:மதிப்பீட்டு காலத்தில், வெள்ளி ஆபரணங்கள் ஏற்றுமதி, 18.27 சதவீதம் சரிவு அடைந்து, 1,613 கோடியிலிருந்து, 1,318 கோடி ரூபாயாக குறைந்து உள்ளது.மேலும், நவரத்தினங்கள் ஏற்றுமதியும், 71.74 சதவீதம் வீழ்ச்சி கண்டு, 550 கோடியில்இருந்து, 155 கோடி ரூபாயாக சரிவடைந்துள்ளது.இவை தவிர, செயற்கை கற்கள் மற்றும் முத்துகள் ஏற்றுமதி முறையே,78 கோடி ரூபாய் (79 கோடி), 1.29 கோடி ரூபாய் ( 5.32 கோடி) என்ற அளவில் குறைந்துள்ளன.
புள்ளிவிவரம்: மேலும், கச்சா வைரங்கள் ஏற்றுமதியும், கணக்கீட்டு காலத்தில், 9.03 சதவீதம் குறைந்து, 1,635 கோடியில் இருந்து, 1,487 கோடி ரூபாயாக சரிவடைந்துள்ளது.இவற்றின் ஏற்றுமதி அளவின் அடிப்படையிலும், 83 லட்சம் காரட்டிலிருந்து, 53 லட்சம் காரட்டாக வீழ்ச்சி கண்டுள்ளது என, ஜி.ஜே.இ.பி.சி., புள்ளிவிவரத்தில் மேலும் தெரிவிக்கப்பட்டுஉள்ளது.
மேலும் பொது செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|