பதிவு செய்த நாள்
24 ஜூலை2014
10:21

இந்திய சாலைகளில் ஓடும் கார்களின், பாதுகாப்பு கட்டமைப்பு எந்த அளவிற்கு உள்ளது என்பதை கண்டறிய உதவும், ‘கிராஷ் டெஸ்ட்’ என்ற சோதனை முறையை, கட்டாய மாக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது.
இந்தியாவில், ஏராளமான வௌிநாட்டு கார் நிறுவனங்கள், உள்நாட்டு கார் நிறுவனங்கள், பல்வேறு இடங்களில், கார் தொழிற்சாலைகளை அமைத்துள்ளன. இந்த கார்கள், பாதுகாப்பு கட்டமைப்பு கொண்டது, எந்த விதமான விபத்து சூழ்நிலையையும் சமாளிக்கும் திறன் படைத்தது என்றே நிறுவனங்கள் தரப்பில் தெரிவிக்கப்படுகின்றன.
ஆனால், இந்தியாவில், வாகன விபத்துக்களில் உயிர் இழப்போர் என்ணிக்கை, ஆண்டுதோறும் அதிகரித்த வண்ணம் உள்ளது. இதையடுத்தே, ‘கிராஷ் டெஸ்ட்’ என்ற நடைமுறையை, கட்டாயமாக்க, மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. குறிப்பாக, வரும், 2017 ஆண்டு முதல், இந்தியாவில் தயாரிக்கப்படும் கார்கள், இந்தியாவில் அமைக்கப்படும், ‘கிராஷ் டெஸ்ட்’ மையத்தில், சோதனைக்கு உட்படுத்தப்பட வேண்டும் என்ற நிபந்தனை விதிக்கப்பட உள்ளது.
இதற்கு, கார் உற்பத்தி நிறுவனங்கள் தரப்பில், இரண்டு விஷயங்களை குறிப்பட்டு எதிர்ப்பு தெரிவிக்கப்படுகிறது. முதலாவதாக, இந்தியாவில், ‘கிராஷ் டெஸ்ட்’ மேற்கொள்ளும் மையமே இல்லை என்பது அவர்களின் வாதம். இரண்டாவதாக, இத்தகைய சோதனையை மேற்கொண்டால், கார்களின் விலை, 25 சதவீதம் உயரும் என்றும் அவர்கள் கூறுகின்றனர்.
ஆனால், இந்த எதிர்ப்பை, மத்திய அரசு ஏற்கவில்லை. வரும் டிசம்பருக்குள், மகாராஷ்டிரா மாநிலம், புனே நகரிலும், அரியானா மாநிலம் குர்காவ் அருகில் உள்ள மனேசர் நகரிலும், இந்த மையம் ஏற்படுத்தப்படும் என்று மத்திய அரசு தரப்பில் கூறப்பட்டுள்ளது.
‘கிராஷ் டெஸ்ட்’ சோதனை முறையில், பல்வேறு வகைகள் உள்ளன. இதில், காரின் முன்பகுதியை, மணிக்கு, 56 கி.மீ., வேகத்தில் இயக்கி, ஒரு தடுப்பின் மீது மோதி காரின் பாதுகாப்பு கட்டமைப்பை உறுதி செய்வது, முக்கியமான சோதனையாகும். இந்த சோதனை மையம் தான், இந்தியாவில் அமைக்கப்பட உள்ளது.
இத்துடன், மத்திய அரசு தரப்பில், முக்கிய வாதம் ஒன்று முன் வைக்கப்படுகிறது. இந்தியாவில் உற்பத்தியாகும் பல்வேறு நிறுவனங்களின் கார்கள், ஐரோப்பிய நாடுகள் மற்றும் லத்தீன் அமெரிக்க நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகின்றன. அந்த கார்கள், ‘கிராஷ் டெஸ்ட்’ என்ற சோதனைக்கு உட்படுத்தப்பட்ட பிறகே, ஏற்றுமதி செய்யப்படுகின்றன. இது சாத்தியம் என்றால், இந்தியாவில் விற்பனை செய்யப்படும் கார்களையும், இந்த சோதனைக்கு உட்படுத்த கூடாது என்றே அரசு தரப்பில் கேள்வி எழுப்பப்படுகிறது.
இது குறித்து அதிகாரிகளின் தரப்பில் கேட்ட போது, ‘ கார் உற்பத்தி நிறுவனங்களுடன் தொடர்ந்து பேசப்பட்டு வருகிறது. சாலையில் பிடிமானம் இல்லாமல், கார் வழுக்கி கொண்டே சென்று விபத்து ஏற்படுவது, அதிக வேகத்தில் செல்லும் போது, கார் கன்ட்ரோல் இழப்பினால் விபத்து ஏற்படுவது, ஆகிய பிரச்னைகளை குறைக்கும் வகையில், கார்களில் பாதுகாப்பு அம்சங்களை ஏற்படுத்துவது குறித்து, அவர்களுடன் பேசப்பட்டுள்ளது’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் ஆட்டோமொபைல் செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|