பதிவு செய்த நாள்
03 நவ2014
00:20

ஓசூர்:ஓசூர் பகுதியில், கனமழை மற்றும் மூடுபனி காரணமாக, ரோஜா செடிகளில், டவுனியா என்ற இலை உதிரும் நோய், வேகமாக பரவி வருவதால், விவசாயிகள் கவலை அடைந்து உள்ளனர்.
ஓசூர் மற்றும் தேன்கனிக்கோட்டை தாலுகாவில், ஆண்டு முழுவதும் நிலவும் மிதமான தட்பவெப்ப நிலை மற்றும் நல்ல மண் வளத்தையும் பயன்படுத்தி, 4,000 ஏக்கர் பரப்பளவில், பசுமை குடில் மூலம் ரோஜா சாகுபடி செய்யப்பட்டு வருகிறது.மேலும், ஓசூர் அடுத்த அமுதகொண்டப்பள்ளியில் உள்ள, டான்ப்ளோரா மற்றும், 40க்கும் மேற்பட்ட தனியார் மலர் உற்பத்தி பண்ணைகளில் இருந்தும், ஆண்டு முழுவதும், ரோஜாக்கள் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது.
மேலும், தமிழகம் மற்றும் பிற மாநிலங்களுக்கும், ரோஜா மலர்கள், விற்பனைக்கு அனுப்பப் படுகிறது. இந்நிலையில், ஓசூர் பகுதியில், கடந்த ஒரு மாதமாக, கடும் குளிர் காற்று, மூடுபனி மற்றும் கனமழை பெய்து வருகிறது.அதனால், ரோஜா செடிகளில், டவுனியா என்ற நோய் வேகமாக பரவுகிறது. இந்நோய் தாக்கிய செடிகளில் உள்ளஇலைகள் முழுவதும் உதிர்ந்து, கீழே விழுந்து விடுவதால், தரமான மலர்கள் உற்பத்தியாவதில்லை. இதனால், இம்மலர்களை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்ய முடியவில்லை என, விவசாயிகள் தெரிவித்தனர்.மொட்டுகளும், செடிகளில் இருந்து உதிர்ந்து விழுகிறது. இந்நோய் முற்றிய செடிகள், முற்றிலும் கருகி நாசமடைந்து வருகிறது.
ஓசூர் அடுத்த பாகலுார், பேரிகை பகுதியில், ரோஜா தோட்டங்களில், டவுனியா நோய் தாக்கம் அதிகரித்து வருகிறது. குறிப்பாக, திறந்தவெளி ரோஜா சாகுபடியில், டவுனியா நோய் தாக்குதல் அதிகமாக உள்ளது.
இதுகுறித்து, சிறு விவசாயிகள் சங்க நிர்வாகி பாலசிவபிரசாத் கூறியதாவது:ரோஜாக்கள் விலை வீழ்ச்சியடைந்துள்ள நிலையில், நவம்பர் மாதம் முகூர்த்த நாள் அதிகளவில் வருவதால், விலை உயரும் என, எதிர்பார்த்தோம். ஆனால், தற்போது டவுனியா நோய் தாக்கி வருவதால், வரும், நான்கு மாதங்களுக்கு, ரோஜாக்கள் சாகுபடி பாதிக்கப்படும்.அதனால், விவசாயிகள், மிகவும் கவலையில் உள்ளனர். தற்போது, டவுனியா நோய் தாக்குதல் இருந்தபோதிலும், கனமழை மற்றும் மூடுபனி அதிகளவு உள்ளதால், நோயின் தாக்குதல், மேலும் அதிகரிக்கும் வாய்ப்புள்ளது.இவ்வாறு, அவர் கூறினார்.
மேலும் பொது செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|