பதிவு செய்த நாள்
19 நவ2014
00:03

புதுடில்லி:பண்டிகை காலத்தை முன்னிட்டு, உள்நாட்டில் விமான பயணம் மேற்கொண்டோர் எண்ணிக்கை, கடந்த அக்டோபரில், 59.25 லட்சமாக வளர்ச்சி கண்டுள்ளது.
இண்டிகோ:கடந்தாண்டின் இதே மாதத்தில், இந்த எண்ணிக்கை, 50.08 லட்சமாக இருந்தது. ஆக, கணக்கீட்டு மாதத்தில், விமான பயணம் மேற்கொண்டோர் எண்ணிக்கை, 18.31 சதவீதம் வளர்ச்சி கண்டுள்ளது என, சிவில் விமான போக்குவரத்து பொது இயக்குனரகம் (டி.ஜி.சி.ஏ.,) தெரிவித்துள்ளது.
இதையடுத்து, நடப்பு 2014ம் ஆண்டின், ஜனவரி முதல் அக்டோபர் வரையிலான முதல் 10 மாதங்களில், மொத்தம், 550.68 லட்சம் பேர் உள்நாட்டில் விமான பயணம் மேற்கொண்டுள்ளனர்.கடந்தாண்டின் இதே 10 மாதங்களில், இந்த எண்ணிக்கை, 507.03 லட்சம் இருந்தது. ஆக, விமான பயணிகளின் எண்ணிக்கை, கணக்கீட்டு காலத்தில், 8.61 சதவீதம் அதிகரித்துள்ளது.பயணிகளை அதிகளவில் ஏற்றி சென்றதில், குறைந்த கட்டண விமான சேவை நிறுவனமான இண்டிகோ, தொடர்ந்து முன்னணியில் உள்ளது.
இந்நிறுவனம், கடந்த அக்டோபரில், 18.90 லட்சம் பயணிகளை கையாண்டு முதலிடத்தை தக்கவைத்து கொண்டுள்ளது. அதேசமயம், பயணிகள் கையாளும் திறனில் (விமான இருக்கைகள் நிரம்பிய விகிதம்), இண்டிகோவிற்கு (76 சதவீதம்) முன்னோடியாக, ஏர் – இந்தியா (83.5 சதவீதம்) உள்ளது.ஏர்–இந்தியா:இண்டிகோ நிறுவனம், கணக்கீட்டு மாதத்தில், அதிகளவாக, 2.35 சதவீத விமானங்களை ரத்து செய்துள்ளது. இது, ஏர் – இந்தியாவில், 1.45 சதவீதமாக உள்ளது.மதிப்பீட்டு மாதத்தில், ஏர் – இந்தியா 11.56 லட்சம் பயணிகளையும், ஜெட் ஏர்வேஸ், 9.73 லட்சம் பயணிகளையும் கையாண்டு, இரண்டு மற்றும் நான்காவது இடங்களை பிடித்துள்ளன.
மேற்கண்டவை தவிர, கோஏர் (5.04 லட்சம் பயணிகள்), ஜெட் லைட் (2.42 லட்சம்), ஏர் கோஸ்டா (67 ஆயிரம்) மற்றும் ஏர் ஏசியா (66 ஆயிரம்) ஆகிய நிறுவனங்களும் குறிப்பிடத்தக்க அளவிற்கு பயணிகளை கையாண்டுள்ளதாக டி.ஜி.சி.ஏ., தெரிவித்துள்ளது.
மேலும் பொது செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|